

ஒரு சாமான்யனின் கோபம்


இந்தியா சக்தி வாய்ந்த நாடு என்கிறீர்கள். அதேநேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானியம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. மக்களுக்குப் பயன்படாமல், குடோன்களில் அவை நிரம்பி வழிவதால் என்ன பயன்? பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என இரண்டு இந்தியா இருக்க முடியாது'-இது, மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு மாவோயிஸ்ட் தலைவர் கொடுத்த குரல் அல்ல... இந்திய நாட்டின் உச்சபட்ச அதிகார அமைப்புகளில் ஒன்றான உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் குரல்தான்!
1,39,652,00,00,000.
ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.
இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?
இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.
தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.
தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.
பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். அதுவும் செய்யவில்லை.
அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும். செய்ய வில்லை.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும். அதற்கும் பதில் இல்லை.
இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.
ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.
இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.
ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?
ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன;
மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பார்த்து கொண்டிருக்கிறோம், பார்த்து கொண்டிருக்கிறேன்.
வாழ்க இந்தியா...


அவன்
சிணுங்கும் அலைபேசியை
செல்லமாய் எடுத்தனைக்க
யாரோ ஏதோ எதற்கோ பேச
தாமரை இலை தழுவும் நீராய்
ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக
அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்
அமிர்தச் சுவை தேடி அள்ளி
காது மடல் கவ்வ
கசப்பாய் விழுகிறது வார்த்தை
”அடடே, உனக்கு வந்திடுச்சா
மாத்தி பண்ணிட்டேனா”துடிதுடிக்கத்
துண்டிக்கிறாய் இணைப்பை
கூடவே நம்பிக்கை நரம்பையும்
அவள்
சிணுங்கும் இதயத்தை செல்லமாய் தட்டி
அமைதிப்படுத்தி நின்று, நிதானமிழந்து
உன் எண் ஒத்திஏதோ இணைப்பில் இருக்கும்
உன்னை தொடமுடியாமல் துவண்டு
இன்னொரு முயற்சியில் இணையும் இணைப்பில்
காது மடலோடுஇனிக்கும் உன் குரல்தேட
பதட்டத்தில் உதடு உதறி
பொய் உதிர்கிறது ”அடடே, உனக்கு வந்திடுச்சா,
மாத்தி பண்ணிட்டேனா” துவண்டு துண்டிக்கிறேன்
இணைப்பை தோல்வி வலையில் இறுக பிணைந்தபடி
---- ஈரோடு கதிர் -----


இரு மருங்கிலும்
கெண்டைகள் விளையாட
துள்ளி குதித்து
சிரித்து கொண்டிருந்த காலம்
இப்போது என் கனவுகளில்
பிறந்ததில் இருந்தே
கொடுத்தே பழக்கப்பட்ட நான்
எடுத்தே பழக்கபட்ட மனிதர்கள்
சந்தோசமாக உதவினேன்
பயன்படுத்தப்பட்டேன்
மனிதர்களின் புத்தியில்
வழக்கமான கோணல்கள்
என் கரையோர மரங்கள் வெட்டபட்டன
என் தண்ணீர் மாசுபடுத்தபட்டது
என் ரத்தம் அசுத்தமானது.
என் சேமிக்கும் பெட்டகங்கள்
கொள்ளை போயின
மணல் லாரிகளிலும்
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றன
தண்ணீரல்ல...
என் கண்ணீர்
களைத்தும்
கலைந்தும் நான்
மெல்ல முனகியபடி...
என்னுள் எலும்புகள் தெரிகிறது
தயவு செய்து அதையும் டெண்டர்
விட்டு விடாதீர்கள்
என் பாறைகளாவது மிஞ்சட்டும்...
உங்கள் நாளைய தலைமுறைக்கு
ஓர் ஆற்றின் கதை (கதறல்) சொல்ல...!
குடும்பத் தகராறால் ரூ.300 கோடி விரயம்:
"குறைந்தவிலையில்,உயர்ந்த தரம் வாய்ந்த கேபிள் டிவி இணைப்பு கொடுப்பதற்கு" என்று மக்களின் காதில் பூசுற்றி துவங்கப்பட்ட நிறுவனம்தான் அரசு-கேபிள் டி.வி. உண்மையில், ஆளுங்கட்சித் தலைவரின் வாரிசுகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போட்டியின் விளைவுதான் அரசு-கேபிள் டி.வி. ஆகஸ்ட் 2007ல் துவங்கப்பட்ட அரசு-கேபிள் டி.வி, ஜுலை 2008ல் ஒளிபரப்பைத் துவங்கியது. மிகவிரைவாக அதிகாரபூர்வமில்லாத மூடுவிழாவைக் கண்டது. குடும்பத் தகராறு தீர்ந்துவிட்டது. அரசுகேபிள் டிவிக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. குடும்பத் தகராறால் அரசு கேபிள் டிவியில் விரயமாக்கப்பட்ட மக்கள்வரிப் பணம் ரூ.300கோடி !!
தனியாரின் கைக்குப்போன அரசின் சொத்து ரூ.700கோடி:
அரசுநிறுவனமான எல்காட்(ELCOT) தனியாருடன் இணைந்து உருவாக்கியதுதான் "எல்நெட் சாப்ட்வேர் கம்பெனி(தரமணி, டைடல் பார்க்கில் உள்ளது)". இந்த எல்நெட் நிறுவனம், ETL என்ற துணை நிறுவனம் ஒன்றை நிறுவுகிறது. எப்படி? கோடிக்கணக்கில் அரசுப் பணத்தை செலவழித்து நிலம்வாங்கி, அரசின் சொத்துகளை ரூ.81கோடிக்கு அடமானம் வைத்துத்தான். பழைய மகாபலிபுர சாலையில் உள்ள இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.700கோடி. இந்த நிறுவனம் தற்போது முழுக்க முழுக்க தனியார் ஒருவரின் சொத்தாகிவிட்டது. இதனால் களவுபோன மக்கள்வரிப்பணம் ரூ.700கோடி !!
ஊழலை கண்டுபிடித்ததால் தண்டிக்கப்பட்ட அதிகாரி:
எல்காட்,அரசு கேபிள் டி.வி யில் மேலாண் இயக்குனராகப் பணியாற்றிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி , மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இந்த நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்,முறைகேடுகளைத் தட்டிக்கேட்டார். ஆதாரப்பூர்வமாக ஊழலை அம்பலப்படுத்தினார். கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய அத்தனை இடங்களிலும் நேர்மையாக,மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர் இவர்.
ஊழலுக்கு உடன்படாத இவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுகள் என்ன தெரியுமா? தொடர்ச்சியான பணிமாற்றம்(Transfer), வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று பொய்யான விசாரணை, பதவி உயர்வுக்குத் தடை ! கடைசியாக இன்று பனி இடை நீக்கம்.
மடியில் கணமில் லாததால், அரசின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை இவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எல்காட்,அரசு கேபிள் டி.வியில் நடைபெற்ற ரூ.1000கோடி ஊழலை 150பக்க ஆவணத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் !!
அரசு,பொதுமக்கள் நலன் கருதி அவர் எடுத்த நேர்மையான நடவடிக்கைகளுக்காக இன்று நீதிமன்றத்தின் படியேறி தன்னை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அவர் - திரு.உமாசங்கர்.ஐ.ஏ.எஸ்
தஞ்சை மாவட்ட ஆட்சியாளராக இருந்த பொழுது, அங்கு மின் ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தியவர்.. பின் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது(99-01) திருவாரூரை இந்தியாவின் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட முதல் மாவட்டமாகியவர். இவர் தான் இன்று நேர்மைக்காக தண்டிக்கப்பட்ட அதிகாரி.
ஐ.ஏ.எஸ் போன்ற உயர் அதிகாரப் பணிகளில் உள்ளவருக்கே இந்த நிலை என்றால்,எந்த செல்வாக்கும் இல்லாத சாமானியனுக்கு எப்படி கிடைக்கும் நீதி !!? நேர்மையான ஒருசில அதிகாரிகளும் இப்படி தண்டிக்கப்படும்போது, மற்றவர்கள் ஊழல்,முறைகேடுகளை எதிர்த்து நிற்க எப்படி முன்வருவார்கள்....?
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுதே காதினிலே...


உடல் உழைப்புக்கு மரியாதை வேண்டும்!
அன்றொருநாள் பெங்களூருவில் ஓர் இளைஞனைப் பார்த்தேன்... 21 வயதுதான் அவனுக்கு. கையில் உறையில்லை; காலில் செருப்பு இல்லை. ஆனாலும், யார் யாரோ வீசியெறிந்த குப்பையை கடமை உணர்வோடு அள்ளி, அந்த இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய ஒருநாள் சம்பளம் வெறும் 80 ரூபாய்தான்.
இன்னொருநாள், முக்கியமான அந்த மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வீட்டுவேலை செய்யும் ஒரு பெண்மணியைப் பார்த்தேன். ஒரு மணி நேரம் வேலை பார்த்தால் அவருக்குக் கிடைப்பது வெறும் 15 ரூபாய் மட்டுமே. உச்சி வெயில் என்றும் பார்க்காமல் நிலத்தை உழுது, விதையைத் தூவி, நமக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் கிராமத்து விவசாயிகளைப் பாருங்கள். விஷத்துக்கு ஒப்பான ரசாயன உரத்தை வெறும் கைகளால் அவர்கள் அள்ளி வீசுகிறார்கள். அதற்குப் பலனாக அவர்களுக்குக் கிடைப்பது, நஷ்டம் மட்டுமே!
உடலால் உழைக்கிற இந்த மக்கள் மீது நமக்கு எந்த அக்கறையும் இல்லை. குப்பை அள்ளும் இளைஞன் முப்பது வயதில் அகால மரணம் அடைகிறான். வீட்டுவேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. வயதான காலத்தில் வயிற்றைக் கழுவ அந்தப் பெண்ணுக்கு பென்ஷன் கிடையாது. திடீரென உடம்பு சரியில்லை என்றாலும் அந்தப் பெண் அரசு ஆஸ்பத்திரியை அண்டியிருக்க வேண்டிய கட்டாயம். ஏழை விவசாயி என்றும் ஏழையாகவே இருக்கிறான்.
உலகத்தின் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன். நம் நாட்டில் மட்டுமே டாக்ஸி டிரைவர்கள் மிகக் கேவலமாக உடை உடுத்தும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யாரையோ தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குப் போகிறார்கள். ஆனால், ஒருநாள்கூட அவர்கள் தன் மனைவியையும் குழந்தைகளையும் அதே காரில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்ல முடிவதே இல்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் வேண்டாம்; வருடத்துக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று ஒரு பட்ஜெட் ஓட்டலில்கூட தங்க முடிவதில்லையே! ஏன்?
அனைவருக்கும் கல்வி வேண்டும்!
எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையானது கல்வி. ஆனால், நாம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் நம்மால் நூறு சதவிகித கல்வி கொண்டுவர முடியவில்லை. இதனால் மனிதசக்தியை மிகப்பெரிய அளவில் வீணாக்குகிறோம்.
இந்தியாவில் கல்வி தொடர்பாக இரண்டு பிரச்னைகள். ஒன்று, எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற கல்வியை நம்மால் கொடுக்க முடியவில்லை. இரண்டு, தரம் குறைந்த கல்வி. நான்கூட சாதாரண பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். ஆனால், தரமான கல்வியை நான் தேடிச் சென்றதற்குக் காரணம் கிடைத்ததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு திருப்தி அடையும் சிந்தனை எங்களுக்கு இருந்ததில்லை என்பதால்தான். வாழ்க்கை பற்றிய முழுமையான புரிதலைக் கொடுக்கும் தீர்க்கதரிசனம்தான் கல்வி என்று நாங்கள் நினைத்தோமே ஒழிய, வெறும் எழுத்துக்களைப் படிப்பதால் வருவது அல்ல என்றே நாங்கள் நினைத்தோம்.
நம் கல்வியானது நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, தீர்க்கதரிசனத்தோடு எதிர்காலத்தை உருவாக்குகிற மாதிரியும் இல்லை. எல்லா நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழுகிற மாதிரி மனிதசக்தியை உருவாக்கும் ஓர் அமைப்பாகவும் இல்லை. நம்நாட்டின் மனித சக்தியை தொலைநோக்குப் பார்வையோடு வளரச்செய்து உலகத்துக்கு ஒரு புதிய நாகரிகத்தை அளிக்கவேண்டும். நம்மிடமிருந்து மிகப் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த உலகம். இந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றத் தவறினோமெனில் தவறு நம் மீதுதானே ஒழிய, வேறு யார் மீதும் அல்ல.
நம் குழந்தைகள் வரலாற்றைப் பற்றி பக்கம் பக்கமாகப் படிக்கிறார்கள், வரலாறு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமலே! மொழிப் பாடங்களை விழுந்து விழுந்து படிக்கிறார்கள், மொழியின் மீது எந்தக் காதலும் இல்லாமலே. நம் கட்டடக்கலை பற்றியோ, நம் மரங்கள், செடிகொடிகள் பற்றியோ, நம் கலாசாரத்தில் எந்த ஓர் அங்கத்தைப் பற்றியோ அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று நுட்பமாக பின்னப்பட்டிருக்கும் விதத்தை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முழுக்க அறிவியல் கண்ணோட்டத்தையாவது வளர்த்துக்கொள்கிறார்களா, என்றால் அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில், கல்வி என்கிற பெயரில் சிறு மகிழ்ச்சி அடைந்துவிட்டு புதுமையாக எதுவும் செய்யாமல் திருப்தி பட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஊழலை ஒழிக்கவேண்டும்!
ஒருபக்கம் இந்தியா மிகப்பெரிய பணக்கார நாடு. இன்னொருபக்கம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நாடு. இதற்குக் காரணம், ஊழல் என்கிற விஷம் இங்கே ஆழமாக வேரூன்றிப் போயிருக்கிறது. உலக நாடுகளில் ஊழல் பட்டியலை ஆண்டு தவறாமல் வெளியிடும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்கிற அமைப்பு 2006-ல் வெளியிட்ட அறிக்கைபடி, சின்னச் சின்ன அளவில் கொடுக்கப்படும் லஞ்சம் மட்டும் இந்தியாவில் 21,068 கோடி ரூபாய்.
இது மனித வளத்துக்காக நாம் செலவழிக்கும் தொகையைவிட 10% அதிகம். மத்திய அரசாங்கம் வசூலிக்கும் சேவை வரியைவிட 20% அதிகம். மத்திய அரசின் உதவி திட்டங்களைவிட 33% அதிகம். தொடக்கக் கல்விக்காக நாம் செலவழிக்கும் பணத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம்! அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு நாம் செய்யும் செலவைவிட இது 8 மடங்கு அதிகம். இந்தியாவின் நான்கு திசைகளையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையை அமைக்க இந்தத் தொகையைப் போல மூன்று மடங்கு அதிகத் தொகையை நாம் செலவழிக்கிறோம். அதாவது, மூன்று ஆண்டுகளில் நம்நாட்டில் கொடுக்கும் லஞ்சப் பணத்தை செலவழித்தால் இந்தியா முழுக்க சாலை வசதியைக் கொண்டு வந்துவிட முடியும். உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் போய்ப் பாருங்கள்; விமானங்களை வாங்குவதற்காக, ஆயுதங்களை வாங்குவதற்காக சன்மானம் எதையும் யாரும் வாங்குவதில்லை. வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாட்டுக்கு நீங்கள் ஒருமுறைப் போய்ப் பாருங்கள். பிறப்புச் சான்றிதழ் வாங்க, பாஸ்போர்ட் வாங்க, ரேஷன் கார்டு வாங்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, சொத்து வாங்க என்று எங்கேயும் அரசாங்கத்தின் இன்னொரு கேவலமான முகத்தை நீங்கள் பார்த்தாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது. ஆனால், இந்தியாவில் அந்த முகத்தைப் பார்க்காமல் உங்களால் எந்த சின்ன காரியத்தையும் செய்யமுடியாது. அந்த அளவுக்கு அது சர்வ இடங்களிலும் வியாப்பித்துக் கிடக்கிறது.
பல ஆண்டுகளாகியும் என்னால் மறக்கவே முடியாத ஒரு சம்பவம்... ஹெளரா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன். 15 வயது மதிக்கத்தக்க ஒரு பிச்சைக்காரச் சிறுமியிடம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தான் ஒரு ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரன். அந்தச் சிறுமிக்கு தொழுநோய் பிடித்ததிருந்ததைக்கூட அவன் சட்டை செய்யவே இல்லை. இதைப் பார்த்து வேதனைப்பட்டேன். ஆனால், சட்டத்துக்கு? இது ஒரு விஷயமே இல்லை.
அரசாங்கத்தின் அனைத்து அங்கங்களிலும் லஞ்சம் என்கிற விஷயம் பிரிக்கமுடியாமல் இரண்டறக் கலந்திருப்பதால் போலீஸிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை யாருமே தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. இதனால் அதிருப்தி அடையும் மக்கள் அரசாங்கத்தை நிர்வாகம் செய்ய தெரியாதவர்களை நம்பி அவர்கள் பின்னால் போய் நிற்கிறார்கள்.''
என்ன எப்பிடி இருக்கிறது? தீர்கமான சிந்தனை... அனைவரும் இவ்வாறு சிந்திக்க முயற்சித்தாலே போதும்... விளைவுகள் தானாக நடக்கும்....
*கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மற்றும் வியாபார மேலாண்மை படிப்புகளின் எண்ணிக்கையில் ஒரே ஒரு சதவிகிதமாவது விவசாயக் கல்லூரிக்கோ அல்லது விவசாயம் குறித்த படிப்புகளுக்கோ கவனம் கொடுக்கப் பட்டிருக்கிறதா?