Saturday, June 12, 2010

சிந்தனை செய் மனமே...

இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளரும் 'மைண்ட் ட்ரீ' நிறுவனத்தைத் தொடங்கியவருமான சுப்ரதோ பக்ஷியின் பேட்டி கொஞ்சம் கவனம் ஈர்க்கும் விதமாக இருந்தது. சமீப காலங்களில் உயர்பதவியில் இருப்போரிடமிருந்து இப்படியொரு சிறந்த பேட்டி வந்ததில்லை. என்னை போன்ற கோடானுகோடி இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்த அவரது விளக்கங்களின் தமிழாக்கம் கீழே...

உடல் உழைப்புக்கு மரியாதை வேண்டும்!

அன்றொருநாள் பெங்களூருவில் ஓர் இளைஞனைப் பார்த்தேன்... 21 வயதுதான் அவனுக்கு. கையில் உறையில்லை; காலில் செருப்பு இல்லை. ஆனாலும், யார் யாரோ வீசியெறிந்த குப்பையை கடமை உணர்வோடு அள்ளி, அந்த இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய ஒருநாள் சம்பளம் வெறும் 80 ரூபாய்தான்.

இன்னொருநாள், முக்கியமான அந்த மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வீட்டுவேலை செய்யும் ஒரு பெண்மணியைப் பார்த்தேன். ஒரு மணி நேரம் வேலை பார்த்தால் அவருக்குக் கிடைப்பது வெறும் 15 ரூபாய் மட்டுமே. உச்சி வெயில் என்றும் பார்க்காமல் நிலத்தை உழுது, விதையைத் தூவி, நமக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் கிராமத்து விவசாயிகளைப் பாருங்கள். விஷத்துக்கு ஒப்பான ரசாயன உரத்தை வெறும் கைகளால் அவர்கள் அள்ளி வீசுகிறார்கள். அதற்குப் பலனாக அவர்களுக்குக் கிடைப்பது, நஷ்டம் மட்டுமே!

உடலால் உழைக்கிற இந்த மக்கள் மீது நமக்கு எந்த அக்கறையும் இல்லை. குப்பை அள்ளும் இளைஞன் முப்பது வயதில் அகால மரணம் அடைகிறான். வீட்டுவேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. வயதான காலத்தில் வயிற்றைக் கழுவ அந்தப் பெண்ணுக்கு பென்ஷன் கிடையாது. திடீரென உடம்பு சரியில்லை என்றாலும் அந்தப் பெண் அரசு ஆஸ்பத்திரியை அண்டியிருக்க வேண்டிய கட்டாயம். ஏழை விவசாயி என்றும் ஏழையாகவே இருக்கிறான்.

உலகத்தின் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன். நம் நாட்டில் மட்டுமே டாக்ஸி டிரைவர்கள் மிகக் கேவலமாக உடை உடுத்தும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யாரையோ தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குப் போகிறார்கள். ஆனால், ஒருநாள்கூட அவர்கள் தன் மனைவியையும் குழந்தைகளையும் அதே காரில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்ல முடிவதே இல்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் வேண்டாம்; வருடத்துக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று ஒரு பட்ஜெட் ஓட்டலில்கூட தங்க முடிவதில்லையே! ஏன்?

அனைவருக்கும் கல்வி வேண்டும்!

எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையானது கல்வி. ஆனால், நாம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் நம்மால் நூறு சதவிகித கல்வி கொண்டுவர முடியவில்லை. இதனால் மனிதசக்தியை மிகப்பெரிய அளவில் வீணாக்குகிறோம்.

இந்தியாவில் கல்வி தொடர்பாக இரண்டு பிரச்னைகள். ஒன்று, எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற கல்வியை நம்மால் கொடுக்க முடியவில்லை. இரண்டு, தரம் குறைந்த கல்வி. நான்கூட சாதாரண பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். ஆனால், தரமான கல்வியை நான் தேடிச் சென்றதற்குக் காரணம் கிடைத்ததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு திருப்தி அடையும் சிந்தனை எங்களுக்கு இருந்ததில்லை என்பதால்தான். வாழ்க்கை பற்றிய முழுமையான புரிதலைக் கொடுக்கும் தீர்க்கதரிசனம்தான் கல்வி என்று நாங்கள் நினைத்தோமே ஒழிய, வெறும் எழுத்துக்களைப் படிப்பதால் வருவது அல்ல என்றே நாங்கள் நினைத்தோம்.

நம் கல்வியானது நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, தீர்க்கதரிசனத்தோடு எதிர்காலத்தை உருவாக்குகிற மாதிரியும் இல்லை. எல்லா நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழுகிற மாதிரி மனிதசக்தியை உருவாக்கும் ஓர் அமைப்பாகவும் இல்லை. நம்நாட்டின் மனித சக்தியை தொலைநோக்குப் பார்வையோடு வளரச்செய்து உலகத்துக்கு ஒரு புதிய நாகரிகத்தை அளிக்கவேண்டும். நம்மிடமிருந்து மிகப் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த உலகம். இந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றத் தவறினோமெனில் தவறு நம் மீதுதானே ஒழிய, வேறு யார் மீதும் அல்ல.

நம் குழந்தைகள் வரலாற்றைப் பற்றி பக்கம் பக்கமாகப் படிக்கிறார்கள், வரலாறு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமலே! மொழிப் பாடங்களை விழுந்து விழுந்து படிக்கிறார்கள், மொழியின் மீது எந்தக் காதலும் இல்லாமலே. நம் கட்டடக்கலை பற்றியோ, நம் மரங்கள், செடிகொடிகள் பற்றியோ, நம் கலாசாரத்தில் எந்த ஓர் அங்கத்தைப் பற்றியோ அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று நுட்பமாக பின்னப்பட்டிருக்கும் விதத்தை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முழுக்க அறிவியல் கண்ணோட்டத்தையாவது வளர்த்துக்கொள்கிறார்களா, என்றால் அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில், கல்வி என்கிற பெயரில் சிறு மகிழ்ச்சி அடைந்துவிட்டு புதுமையாக எதுவும் செய்யாமல் திருப்தி பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஊழலை ஒழிக்கவேண்டும்!

ஒருபக்கம் இந்தியா மிகப்பெரிய பணக்கார நாடு. இன்னொருபக்கம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நாடு. இதற்குக் காரணம், ஊழல் என்கிற விஷம் இங்கே ஆழமாக வேரூன்றிப் போயிருக்கிறது. உலக நாடுகளில் ஊழல் பட்டியலை ஆண்டு தவறாமல் வெளியிடும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்கிற அமைப்பு 2006-ல் வெளியிட்ட அறிக்கைபடி, சின்னச் சின்ன அளவில் கொடுக்கப்படும் லஞ்சம் மட்டும் இந்தியாவில் 21,068 கோடி ரூபாய்.

இது மனித வளத்துக்காக நாம் செலவழிக்கும் தொகையைவிட 10% அதிகம். மத்திய அரசாங்கம் வசூலிக்கும் சேவை வரியைவிட 20% அதிகம். மத்திய அரசின் உதவி திட்டங்களைவிட 33% அதிகம். தொடக்கக் கல்விக்காக நாம் செலவழிக்கும் பணத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம்! அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு நாம் செய்யும் செலவைவிட இது 8 மடங்கு அதிகம். இந்தியாவின் நான்கு திசைகளையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையை அமைக்க இந்தத் தொகையைப் போல மூன்று மடங்கு அதிகத் தொகையை நாம் செலவழிக்கிறோம். அதாவது, மூன்று ஆண்டுகளில் நம்நாட்டில் கொடுக்கும் லஞ்சப் பணத்தை செலவழித்தால் இந்தியா முழுக்க சாலை வசதியைக் கொண்டு வந்துவிட முடியும். உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் போய்ப் பாருங்கள்; விமானங்களை வாங்குவதற்காக, ஆயுதங்களை வாங்குவதற்காக சன்மானம் எதையும் யாரும் வாங்குவதில்லை. வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாட்டுக்கு நீங்கள் ஒருமுறைப் போய்ப் பாருங்கள். பிறப்புச் சான்றிதழ் வாங்க, பாஸ்போர்ட் வாங்க, ரேஷன் கார்டு வாங்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, சொத்து வாங்க என்று எங்கேயும் அரசாங்கத்தின் இன்னொரு கேவலமான முகத்தை நீங்கள் பார்த்தாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது. ஆனால், இந்தியாவில் அந்த முகத்தைப் பார்க்காமல் உங்களால் எந்த சின்ன காரியத்தையும் செய்யமுடியாது. அந்த அளவுக்கு அது சர்வ இடங்களிலும் வியாப்பித்துக் கிடக்கிறது.

பல ஆண்டுகளாகியும் என்னால் மறக்கவே முடியாத ஒரு சம்பவம்... ஹெளரா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன். 15 வயது மதிக்கத்தக்க ஒரு பிச்சைக்காரச் சிறுமியிடம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தான் ஒரு ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரன். அந்தச் சிறுமிக்கு தொழுநோய் பிடித்ததிருந்ததைக்கூட அவன் சட்டை செய்யவே இல்லை. இதைப் பார்த்து வேதனைப்பட்டேன். ஆனால், சட்டத்துக்கு? இது ஒரு விஷயமே இல்லை.

அரசாங்கத்தின் அனைத்து அங்கங்களிலும் லஞ்சம் என்கிற விஷயம் பிரிக்கமுடியாமல் இரண்டறக் கலந்திருப்பதால் போலீஸிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை யாருமே தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. இதனால் அதிருப்தி அடையும் மக்கள் அரசாங்கத்தை நிர்வாகம் செய்ய தெரியாதவர்களை நம்பி அவர்கள் பின்னால் போய் நிற்கிறார்கள்.''

என்ன எப்பிடி இருக்கிறது? தீர்கமான சிந்தனை... அனைவரும் இவ்வாறு சிந்திக்க முயற்சித்தாலே போதும்... விளைவுகள் தானாக நடக்கும்....

No comments: