Wednesday, May 27, 2009

விவசாயி...(3)

இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய உணவு அரிசி. அமெரிக்காவில் அரிசி ஏற்றுமதிச் சரக்கு. ""அமெரிக்காவில் அரிசியின் உற்பத்தித்திறன் 7 டன். இதுவே இந்தியாவில் 3 டன். ஆகவே இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவிலும் ஹெக்டேருக்கு 7 டன் அரிசி விளைவிக்க வேண்டும். இந்த அளவில் இந்திய விவசாயிகள் அரிசி உற்பத்தி செய்தால் போதும். நல்ல லாபம் வரும். நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தும் இல்லை. விவசாயப் பிரச்னைகள் எல்லாமே உற்பத்தித் திறனை உயர்த்தினால் போதும்...'' இப்படித்தான் நமது நிபுணர்கள் நினைக்கின்றனர். இது சரியல்ல.

அமெரிக்காவில் மொத்த அரிசி உற்பத்தியின் பணமதிப்பு 1.2 பில்லியன் டாலர். இந்த அளவில் அரிசி உற்பத்தி செய்ய 1.4 பில்லியன் டாலர் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரொக்கமாக இந்த அளவு மானியம் பெறுவதால் 7 டன் உற்பத்தித்திறன் சாத்தியமாகிறது. இந்திய விவசாயிகளுக்கும் இந்த அளவுக்கு மானியம் வழங்குவது சாத்தியமா? இந்த அளவில் மானியம் பெற முடியாத சூழ்நிலையில் நிபுணர்களின் பேச்சைக்கேட்டு அதிகம் முதலீடுகளைக் கொட்டி அதிக உற்பத்தி செய்தும் அதற்கான சந்தையும் விலையும் இல்லாமல் நஷ்டமடைந்து கடனாளியாகி முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதான் நிஜம்.


நமது விவசாயக் கொள்கை எப்படி உள்ளது என்றால், ""விவசாயிகள் எப்படியாவது கடனை உடனை வாங்கி புதிய முறை விவசாயத்தைக் கடைப்பிடித்து உற்பத்தியை உயர்த்தி முடிவில் விற்க வழியில்லாமல் தற்கொலை செய்து செத்துவிடு அல்லது நிலத்தை வந்த விலைக்குக் கார்ப்பரேட்டுகளிடம் விற்றுவிட்டு வெளியேறு என்று கூறுவதுபோல் உள்ளது''.

ஆமாம். இன்று இந்திய விவசாயத்தில் அமெரிக்காவைப்போல் கார்ப்பரேட்டுகள் நுழைந்துவிட்டனர். இன்று அமெரிக்க உபதேசத்தை வேதமாகக் கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் அமைச்சர்கள் விவசாயத்தை லாபகரமாக மாற்ற ஏற்றுமதிக்குரிய மாற்றுப்பயிர்த்திட்டத்தை முன்வைக்கின்றனர். கொய்மலர், வெள்ளரிக்காய், கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என்ற வரிசையில் பல வகைப் பயிர்கள் உண்டு. இவற்றைப் பயிரிடும் தகுதி உணவு விவசாயம் செய்யும் ஒன்றே முக்கால் ஏக்கர் பேர்வழிகளுக்கு இயலாது. கார்ப்பரேட்டுகள் அல்லது கார்ப்பரேட்டுகளின் பக்கபலம் உள்ள பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் உண்டு.
ஏற்றுமதி எத்தர்களால் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து ஏமாந்துபோன விவசாயிகள் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் உண்டு. அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு தென் அமெரிக்க நாடுகளில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்து கார்ப்பரேட் பயன் அடைந்தார்கள். ஆனால் உணவு உற்பத்தி குறைந்து அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறு - நடுத்தர விவசாயிகள் வெளியேறி விட்டனர்.

இதேபோக்கு இந்தியாவில் தென்படுகிறது. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய அறிவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்கப் பாரம்பரியத்தை ஏற்கும் நிலை புதிய புதிய நவீன ரசாயன - இயந்திரத் தொழில் நுட்பங்கள் மூலம் அறிமுகமாகி விட்டதால் இந்திய மண்ணில் இனி பாரம்பரிய விவசாயிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
இனி எதிர்காலத்தில் இந்திய விவசாயம் முழுமையாகவே கார்ப்பரேட்டுகளின் வசமாகிவிடும். வேறு வழியில்லாமல் விவசாயிகள் வேகமாக சொந்த மண்ணைவிட்டு உள்ளூர் அகதிகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
நன்றி : தினமணி

No comments: