Wednesday, May 27, 2009

விவசாயி...(2)

ஓர் அரசு மேல்மட்ட அதிகாரியையோ, அரசுத்துறை விவசாய விஞ்ஞானியையோ பார்த்து, இந்திய விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள். ரெடிமேட் பதில்கள் நிறையக் கிடைக்கும்.

உற்பத்தித்திறன் குறைவதால் வருமானம் குறைகிறது. அதனால் தற்கொலை என்பார். விவசாயம் காரணமல்ல. திருமணச் செலவு காரணமாகக் கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையை மூடி மறைக்கவே இப்படியெல்லாம் விவசாயத் துறையினர் காரணங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

பசுமைப்புரட்சி நிகழ்வதற்கு முன் குறிப்பாக 1960 - 69 பதிற்றாண்டில் விவசாய உற்பத்தித் திறன் குறைவாகத்தான் இருந்தது. அன்று எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்டதாக எதுவும் செய்தி இல்லையே. அன்றும் விவசாயிகளின் பெண்களுக்குக் கல்யாணக்கடன் இருந்தது. அதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியும் உற்பத்தித்திறனும் பன்மடங்கு உயர்ந்தும் கூட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற இலக்கு உலகளாவியதாக இருந்தது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா என்று உலகின் எல்லா இடங்களிலும் உற்பத்தியை உயர்த்துவது ஒரு பொதுவான லட்சியமே. வளர்ச்சியுற்ற நாடுகளில் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டு இயங்கும் இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. இரு நாடுகளின் வேளாண்மைப் பொருளியல் ஒப்பிடக்கூடியதும் அல்ல.


அமெரிக்காவில் 7 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அமெரிக்காவில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 70 லட்சம். ஒட்டுமொத்த அமெரிக்க சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமே விவசாயிகளின் எண்ணிக்கையாக உள்ளது.

இரண்டாவது உலகப் போருக்கு முன்பு அமெரிக்காவில் 3 கோடி விவசாயிகள் இருந்தனர். அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட் என்ற வர்த்தகக் கூட்டணி கைப்பற்றியது. சுமார் 2.7 கோடி விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றியது. இன்றைய அமெரிக்காவின் விவசாயக் கொள்கை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன நிகழ்ச்சி நிரலாக மாறிப்போனது.
2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கு கடைசியாக எடுக்கப்பட்டபோது வேண்டுமென்றே விவசாயிகளின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவில் விவசாயிகளின் தொகை சுருங்குவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இன்று ஐரோப்பாவிலும் விவசாயிகள் அழிந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும் விவசாயிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாக விவசாயக் கொள்கைகளுக்கு மத்தியில் கணிசமாக உள்ளது. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 20 கோடி. உலக விவசாயிகளில் 10-க்கு நால்வர் இந்திய விவசாயிகள். இந்தியாவின் விளைநிலம் 139 கோடி ஹெக்டேர். விவசாயியின் சராசரி நில அளவு 1.4 ஹெக்டேர். இந்தியாவுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவின் சராசரி நில அளவு 2000 மடங்கு கூடுதல். இந்தியாவில் விவசாயம் வாழ்க்கை. அமெரிக்காவில் விவசாயம் வியாபாரம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்காவின் அனுபவம் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும் என்பதே விளங்காத புதிராக உள்ளபோது, இந்தியாவிலும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறும் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது. குறிப்பாக 1980-க்குப் பின் கிராமங்களைவிட்டு வெளியேறிய சிறு - குறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும்.

No comments: