Wednesday, May 27, 2009

விவசாயி... (1)


1942 ""வெள்ளையனே வெளியேறு'' என்ற விடுதலைக் குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்ததன் விளைவால் தூங்கிய பாரதம் துணிவுடன் எழுந்தது. விடுதலை பெற்ற இந்தியாவில் இன்று நிகழ்வது என்ன?

ஆட்சியைப் பிடித்தவர்கள் கட்சிகளை மாற்றுகிறார்கள். மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவிக்காக கொள்கைகளைக் குப்பையில் கொட்டியபின்பும் சாயம் வெளுக்காத சில சமரசங்கள் அவர்களுக்குப் பணத்தை அள்ளித் தரலாம்.

எந்தக் கட்சி பதவிக்கு வந்தால் என்ன? யார் ஆண்டால் யாருக்கு என்ன லாபம்? யாராலுமே காப்பாற்ற முடியாத ஒரு கேவல நிலைக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆண்டுதோறும் விவசாயத்தைக் கைவிட்டு பெருநகரங்களின் சேரிகளில் குவியும் விவசாயிகளின் நிலை ஏறத்தாழ இலங்கை அகதிகளைவிடக் கேவலமாயுள்ளது. விவசாயிகளின் வாரிசுகள் இன்று விவசாயம் செய்யத் தயாராக இல்லை. 1980 - 89 காலகட்டத்தில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள் 2004 - 05 காலகட்டத்தில் என்ன ஆனார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் திரட்டப்படுமானால் இந்த உண்மை வெட்டவெளிச்சமாகும்.


5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னமும் மோசம். நகரங்களில் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவியல் நுட்பம் நன்கு தெரிந்த சிறு - குறு விவசாயிகளாவர். பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தாமாகவே வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்கள்.

அரசுத்தரப்பு புள்ளிவிவர அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1993-லிருந்து 2006 வரையில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஊடகங்களின் தகவல்களின்படி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மூன்று லட்சம்.

2006-லிருந்து 2009 வரையில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்தியாவில் இவ்வளவு அரசியல் கட்சிகள் இருந்தும் எந்த ஒரு கட்சியாவது விவசாயிகளின் தற்கொலையை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஒரு தேசம் தழுவிய மாநாடு கூட்டியோ ஊர்வலம் நடத்தியோ ஏதும் ஒரு பொதுக்கூட்டத்தில் விவாதித்ததா? மாநில அளவிலாவது இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டதா? எதுவுமே செய்யப்படாததன் பொருள் என்ன? திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இந்தியாவில், விவசாயிகளை வெளியேற்றுவதும் ஒரு திட்டக் கொள்கையாக மாறிவிட்டதுதான் பரிதாபகரமான உண்மை நிலை. இது எவ்வாறு என்றால் அமெரிக்கா திட்டமிடுகிறது. அதை இந்தியா நிறைவேற்றுகிறது. அமெரிக்காவில் எவையெல்லாம் நிகழ்ந்தனவோ அவையெல்லாம் இந்தியாவில் நிகழப் போகின்றன.

No comments: