Saturday, March 28, 2009

தி.மு.க-வின் 2004 தேர்தல் அறிக்கை -- ஒரு அலசல்

'சொன்னதைச் செய்வோம்... செய்வதைச் சொல்வோம்'
-- தேர்தல் கால
தி.மு.க-வின் வாடிக்கை கோஷம் இது. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகனே!

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு போட்டிருக்கிறது தி.மு.க. பரணில் கிடந்த அக்கட்சியின் 2004 தேர்தல் அறிக்கையை தூசு தட்டினோம். 2004 பிப்ரவரி மாதம் விருதுநகரில் நடந்த தி.மு.க. தென் மண்டல மாநாட்டில்தான் அந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி. மொத்தம் 32 பக்கம். பற்பல பளபள அறிவிப்புகள்.

அதில், ஓட்டு வாங்கும் டிரேட் மார்க் திட்டங்கள் போக... பாதிக்கும் மேல் புஸ்வாணம் ஆகியிருப்பதுதான் உண்மை! அந்த தேர்தல் அறிக்கை யிலிருந்து முக்கியமானவை...

  • சட்டமேலவையை மீண்டும் ஏற்படுத்து வோம்!

- ஏற்படுத்தவில்லை -

  • தமிழை ஆட்சி மொழி ஆக்குவோம்!

- ஆக்கவில்லை -

  • தமிழை செம்மொழி ஆக்குவோம்!

- ஆக்கிவிட்டார்கள் -

  • நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை வலி யுறுத்துவோம்

- வலியுறுத்தி என்ன புண்ணியம்? நிறைவேறவில்லை

  • 'பொடா' சட்டத்தைத் திரும்பப்பெறுவோம்!

- திரும்பப் பெற்றார்கள் -

  • தமிழகத்தில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விதத்தில் உள்ள பத்திரிகை சுதந்திரத்தைக் காக்க உரிய சட்டத் திருத்தம் கொண்டுவருவோம்.

- ஊஹ¨ம்! டெலிபோன் டேப் விவகாரத்தில் கமிஷன் வைத்துக் காய்ச்சியதுதான் மிச்சம்

  • மத்திய அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 50 சதவிகிதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க தி.மு.க. வலியுறுத்தும்!

- வலியுறுத்தவில்லை -

  • குற்றவியல் வழக்கு நடைமுறைகளை சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி மாலிமத் குழு அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம்!

- வலியுறுத்தவில்லை (சொல்லப் போனால், அந்த அறிக்கையை அப்படியே ஏற்று சட்டத் திருத்தமும் கொண்டுவந்தாகிவிட்டது. இத்தனைக்கும், சட்டத்துறை இணை அமைச்சர் பொறுப்பில் தி.மு.க-வின் வேங்கடபதி ஐந்தாண்டு காலம் இருந்தார்!)

  • மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356--வது பிரிவை அறவே நீக்கப் பாடுபடுவோம்! -

- பாடுபடவில்லை -

  • நீண்ட காலமாக வாக்குறுதி அளவிலேயே இருந்து வருகிற சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்!

- நிறைவேற்றுவதில் தி.மு.க-வுக்கு ஏக ஆர்வம் இருந்தாலும், நடுவில் திடீரென 'ராமரின் படிப்பு' பற்றி பேசி சர்ச்சையாக்கிவிட்டார் தமிழக முதல்வர் -

  • குளச்சல் துறைமுகத்தை நவீன வசதிகள் கொண்ட பன்னாட்டுத் துறைமுகமாக மாற்ற உரிய நடவடிக்கை மேற் கொள்வோம்!

- மேற்கொண்ட மாதிரி (ரிசல்ட்டில்) தெரியவில்லை -

  • தற்போதைய வருமான வரி 50 ஆயிரம் ரூபாய் என்ற வருமான வரம்பை ரூ. ஒரு லட்சம் என்று உயர்த்தி வரி விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்!

- நிறைவேறியது -

  • தென் மண்டல இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு (Southern gas grid) விரைவில் அமைப்போம்!

- நிறைவேறவில்லை -

  • உள்ளாட்சி அமைப்பின் மூன்று அடுக்கு முறையின் செயல் பாட்டினை மறுபரிசீலனை செய்து குறைபாட்டைத் தவிர்க்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவருவோம்!

- கொண்டு வரவில்லை -

  • சென்னை எண்ணூர் சாலை, காசிமேடு, பூம்புகார், நாகை பகுதிகளில் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம்

- எடுக்கவில்லை என்பதில் கொதித்துப் போயிருக்கிறார்கள் இந்த ஏரியா மக்கள் -

  • வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்!

- பத்திரிகைச் செய்திகளைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே..! -

  • கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்கும் பிரச்னையைக் கண் காணிக்க, இரு நாட்டு கடற்கரைப் பகுதியிலும் சிக்கல் தீர்க்கும் மையம் அமைப்போம்!

- அமைக்கவில்லை -

  • வருமுன் காப்போம் திட்டத்தை அகில இந்திய அளவில் விரிவுபடுத்துவோம்!

- விரிவுபடுத்தவில்லை -

  • வருமான வரி செலுத்துபவர்களுக்கும் இரண்டாவது முறை ஹஜ் புனிதப் பயணம் போகும் பயணிகளுக்கும் நிறுத்தப்பட்ட மானியத் தொகையை மீண்டும் வழங்கிட முயற்சிகள் எடுப்போம்.

- நிறைவேறியது -

  • பெரியார் அணையின் நீர்மட்ட அளவை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம்!

- கேரள அடாவடிக்கு முன்னால் பருப்பு வேகவில்லை -

  • கங்கை-காவிரி ஆற்றை இணைக்கும் திட்டத்தை வலியுறுத்துவோம்!

- ஊஹ¨ம்! -

  • தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் உருவாக் கப்படும்!

- இல்லை! -

  • மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணே கலக்கும் நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில், கிழக்கே திருப்பி விடுவதற்கான திட்டங்கள் கொண்டு வருவோம்

- நிறைவேறவில்லை -

  • ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் தமிழக கிழக்குக் கடற்கரைப் பகுதியில் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த, பறக்கும் கப்பல் திட்டம் கொண்டுவரப்படும்!

- நிறைவேறவில்லை -

  • திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரை புதிய ரயில் பாதையை முதற்கட்டமாக அமைத்து, பிறகு புதுவை வரை நீட்டிக்க முயற்சி எடுப்போம்.

- நிறைவேறவில்லை -

  • சென்னை பெருநகர துரித ரயில் திட்டத்தை முழுமைப் படுத்தி செங்குன்றம்வரை நீட்டிப்போம்!

- நிறைவேறவில்லை -

  • திருச்சி, மதுரை, கோவை, விழுப்புரம், போன்ற ரயில் நிலையங்களிலிருந்து அருகிலுள்ள ஊர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் கொண்ட ரயில் பஸ்கள் இயக்கப் படும்!

- இயக்கப்படவில்லை -

  • தேசிய உயிரியல் தொழில் நுட்ப நிறுவனம் தமிழகத்தில் நிறுவப்பட தி.மு.க. வலியுறுத்தும்!

- நிறைவேறவில்லை -

  • மண்டல தாவரவியல் வாரியம், தேசிய அளவில் தாவரவியல் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும்!

- நிறைவேறவில்லை -

  • நாங்குநேரியில் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பிரமாண்டமான உயர் தொழில்நுட்ப தொழில் பூங்கா திட்டத் துக்கு உரிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பிறகும், கிடப்பில் போடப்பட்ட நிலையை மாற்றி அதைச் செயல்படுத்த வைப்ப தற்கு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தப்படும்.

- நிறைவேறவில்லை -

  • மாநில சுயாட்சிக் கொள்கை வெற்றி பெறத் தேவையான அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும்.

- நிறைவேற்றப்படவில்லை -

  • இட ஒதுக்கீடு பிரச்னையில் அதிகபட்சம் 50 சதவிகிதம் தான் இருக்கவேண்டும் என்பதை மாற்ற, சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.

- கொண்டு வரப்படவில்லை -

  • மாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு விகிதாசாரத்தை அந்தந்த மாநிலங்களே மேற்கொள்வதற்குரிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட தி.மு.க. வலியுறுத்தும்.

- நிறைவேறவில்லை -

  • மத்திய அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு, அந்தந்த மாநில ஆட்சி மொழிகளை இணைத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வலியுறுத்துவோம்!

- நிறைவேறவில்லை -


நாற்பதும் அள்ளிக் கொடுத்த தமிழகத்துக்காக இன்னும் எத்தனை உறுதியாகவும் தைரியமாகவும் மத்திய அரசுக்கு தி.மு.க. நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என்பதை வாசகர்கள் தீர்ப்புக்கே விட்டுவிடலாம்.

இதோ, இப்போது மறுபடியும் தேர்தல் யானை வருகுது... தி.மு.க. தேர்தல் அறிக்கை பளபளவென்று புதுசாக வரும்... அதில் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்!

No comments: