Thursday, March 26, 2009

பசி





பொதுவாக பசியென்றால் சாப்பிடனும் என்றோ, இன்னும் சாப்பிடவில்லையே என்பது மட்டுமே நம் நினைவுக்கு வரும். இதற்கப்பாலும் பல கூறுகள் பசியில் உண்டென்பதை பெரும்பாலோர் அறியமாட்டார்கள். பசி என்பது பல்வேறு தன்மைகளையும், தேவைகளையும் உடையது.

மருத்துவத்துறையினராலும், சமூகவியல் ஆய்வாளர்களாலும் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படும்.


1) கடும்பசி (Acute Hunger)

2) நெடும்பசி (Chronic Hunger)

3) தனிப்பசி (Specific Hunger)

4) சமச்சீர் உணவுப்பசி (Multiple Hunger)

5) ஊட்டச்சத்துப் பசி (Mal Nutritional Hunger)


இப்படிப்பட்ட பசி நிலைகளால் உலகில் வாடுவோர் 75% உள்ளனர். இந்தியாவில் மட்டும் 90% மக்கள் (அனைத்துவகை) பசிகளுக்கு அடிமையாய் உள்ளனர்.

1) கடும்பசி (Acute Hunger)

உயிர் வாழ இப்பசியை அடக்குதல் வேண்டும். அன்றாடம் உணவு தேவைப்படும் அத்தியாவசியத்தை உணர்த்தும் பசி. உணவு அளவில் குறையும்போது ஆற்றல் குறைந்து எதுவும் செய்யமுடியாமல் ஒடுங்கும் நிலை ஏற்படுகிறது. இதைத்தான் பாரதி சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் என்றான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றும் குறிப்பிட்டது இப்பசியைத்தான். கூழோ, கஞ்சியோ, ஹம்பர்கரோ, வளர்க்கும் குரங்கையோ*, எதையாவது...எதையாவது தின்று அடக்கவேண்டிய பசி.


* 7 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக, கிராம மக்களில் பெரியவர் ஒருவர் தான் வளர்த்த குரங்கைக் கொன்று தின்று விட்டார் என்றும், இன்னும் சிலர் விஷத்தன்மை வாய்ந்தது என்று தெரிந்தும் ஒருவகைக் கிழங்கை வேறுவழியின்றி உண்டு சில நாட்களில் இறந்திருக்கிறார்கள் என்றும் இந்தியா டுடே இதழில் வந்த கட்டுரையில் படித்தேன்.


2) நெடும்பசி (Chronic Hunger)


பஞ்சத்தினாலும், இயற்கையின் சீற்றங்களாலும், ஏமாற்றங்களாலும், உணவுற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய கட்டமைப்பின் குறைவினாலும், சமூக அமைப்பின் சுரண்டல்களாலும், போர், அகதியாக்கப்படுதல் போன்ற சமூகப்பிரச்சினைகளாலும் நீண்டகாலமாக நிர்ப்பந்தமான பட்டினியால் ஏற்படும் பசி.


WHO வின் 2004ம் ஆண்டறிக்கையின் படி, ஒவ்வொரு நாளும் , 800 மில்லியன் மக்கள் பசியோடு உறங்குகிறார்கள், நீண்டகாலமாக நிர்ப்பந்தமான சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பருவகால மாற்றத்தின் போதும் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் வாடுகிறார்கள். பசியாலும், ஊட்டச்சத்துக் குறைவாலும் ஏற்படும் நேரிடையான அல்லது மறைமுகமான பாதிப்பால் ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் குழந்தைகள் 5 வயதை அடையுமுன்பே மரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒருமணி நேரத்தில் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் சராசரியாக 8,300 பேர் சேர்ந்து கொள்வார்கள். நாளை இந்நேரம் இன்னும் 2 லட்சம்பேருக்கு உணவு தேவைப்படும். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதன் தனிதன்மையான தேவைகளோடு இருப்பவர்கள்தாம், இவ்வுலகின் பிரஜையாக இருப்பதற்கு நம்மைப் போலவே எல்லா அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் உடையவர்கள்தாம்.

ஆனால், பரிதாபம் முறைகெட்ட சமூக அமைப்பாலும், அவர்களின் அத்தியாவசிய வாழ்வாதாரங்களைப் பகிர்ந்தளிக்காத சுரண்டல் மிகுந்த, ஏற்றத்தாழ்வுமிக்க வாழ்வமைப்பாலும் நிராகரிக்கப்பட்டவர்களாக செத்து மடிகிறார்கள். உலகின் வளங்களை எல்லாம் வெறும் இரண்டு விழுக்காட்டினர் சுயநலம் மிகுந்த அரசியல், சமூகப்பொருளாதார கட்டமைப்பால் பயன்படுத்திக் கொண்டு, மீதமுள்ள 98 % மக்களை ஏதேனும் குறையுள்ளவர்களாக விட்டுவிட்டனர்.

உணவுசார் தேவைகளை மதிப்பீடு செய்யும் உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) வல்லுனர்களின் அறிக்கைகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 73 மில்லியன் மக்கள் இப்புவியில் மக்கட்தொகையில் இணைந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் தேவையான உணவுற்பத்தி நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது, ஆனால் பெரும்பான்மையான, தேவையுள்ள (சுமார் 850 மில்லியன்) மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்பது நிதர்சனமான, வருத்தத்திற்குறிய உண்மை. இதில் 95 விழுக்காட்டினர் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உபரியான உணவுப்பொருட்கள் வளர்ந்து வரும் நாடுகளின் உணவுத்தேவையுள்ள பெரும்பான்மை மக்களுக்கு சென்று சேரும் ஏற்பாடுகள் இன்னும் சரிவரச் செய்யப்படவில்லை.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் வறுமைக்கோட்டின் கீழ் 46 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பசி மனித வாழ்வைச் சீர்குலைக்கிறது. மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இது தன் ஆதிக்கத்தைத் தொடங்கியுள்ளது. தன்னலமும், சுரண்டலும் இதை வளர்த்தன.நெடும்பசியானது மனித இயல்பைச் சிதைக்கும், வலிமையைக் குறைக்கும். பசியினால் எழும் உணவு வேட்கையால் மனிதன் தன்னை மறந்து எதையும் செய்யத்துணிவான். இதனால் அன்பு, அறம், கடமை, பண்பாடு போன்றவற்றை இழக்கவும் யோசிக்கமாட்டான். கொலை, களவு, பூசல், சோம்பல், சோரம்போதல் ஆகிய அனைத்திற்கும் இப்பசியே அடிப்படை. பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்று இதையே குறிப்பிட்டனர்.





(பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான் - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)

No comments: