Saturday, March 7, 2009

முதல் இடத்தில் இந்தியா - பாகம் 2


1947லிருந்து நடைபெற்று வரும் பெரும் கொள்ளை. நம் பணத்தை நாம் திரும்பப் பெற இயலுமா? உயர்ந்த பதவிகளிலுள்ள சிலர் இந்தியாவின் சாதாரண மக்களிடம் அடித்துள்ள இந்த கொள்ளைதான் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரியது. இது அரசியல்வாதிகளாலும், அதிகார வார்க்கத்தினராலும், சில தொழிலதிபர்களாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை. இக்கொள்ளையில் ஈடுபடாத துறையே இல்லையென்னுமளவுக்கு எங்கும் வியாபித்த கொள்ளை. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை ஏனெனில் இந்தியாவில்தான் தண்டணை பற்றிய பயமோ வேறெந்த பயமோ இன்றி துணிந்து கொள்ளையிட முடியுமே.


ஆனால் இதில் மனதை அதிகம் வருத்தும் அதி முக்கிய நிகழ்வு என்னவெனில் கொள்ளையடித்த அப்பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யாமல் வரிவிலக்குள்ள வேறுநாடுகளில் போட்டு வைப்பதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான். இந்தியாவை ஏழை நாடாக மாற்றியதுதான்.


நம்மைப் போன்ற இங்குள்ள சாதாரண மக்களுக்கு இது போன்ற வரிவிலக்கு நாடுகளில் பணத்தைப் போட்டு வைப்பதற்கான சரியான வழிமுறைகள் தெரியாவிட்டாலும், இது போன்று மக்களை ஏய்த்துக் கொள்ளையடிக்கும் பணங்கள் சுவிஸ் பேங்க் அக்கவுண்டுக்கு போகிறது என்று தெரிந்தே இருக்கிறது.

உண்மையில் சில பொருளாதார மேதைகளின் கூற்றுப்படி இந்த வரியற்ற வங்கிக்கணக்குத் திட்டமே மேலை நாடுகள் எழை நாடுகளை ஏய்க்க வகுத்துள்ள திட்டமே ஆகும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இத்தகைய வங்கிகள் வளர்ந்து கிளை பரப்ப அனுமதிப்பதன் மூலம் மேலைநாடுகள் வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள சிறிய மூலதனத்தையும் பணக்கார நாடுகளை நோக்கி இழுக்கிறார்கள்.

உலகின் 70 நாடுகளில் இதுபோன்ற வரியற்ற வங்கிக் கணக்குகளின் முலம் பெரும் பணமுதலைகள் 11.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்துள்ளதாக 2005ம் ஆண்டில் வந்த Tax Justice Network (TJN) நிறுவனத்தின் ஆராய்ச்சிகள் அறிவித்தது. இந்த TJN நிறுவனத்தின் Raymond Baker தனது Capitalism's Achilles Heel: Dirty Money and How to Renew the Free Market System என்ற புத்தகத்தில் 1970ஆண்டின் மத்தியிலிருந்து இதுவரை சுமார் 5ட்ரில்லியன் டாலர்கள் ஏழை நாடுகளிலிருந்து மேலை நாடுகளுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.



உலகத்தின் சொத்துக்களில் 57 சதவீதத்தை இத்தகைய குறுக்கு வழிகளில் உலகத்தின் ஒரு சதவிகிதமே உள்ள சில பேர் அனுபவிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பணம் எவ்வளவு என்பதை அவரவர் கணிக்கட்டும். ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இத்தகைய குறுக்கு வழி வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள பணம் யாவும் நியாயமற்ற வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றி மக்களைச் சரண்டி சேர்க்கப்பட்டவை.

இத்தகைய வங்கிகளில் பணம் சேமிக்கப்படுவது அதன் மிகக்குறைந்த வரி அல்லது வரியற்ற தன்மைக்காக அல்ல மாறாக, கணக்கின் உரிமையாளர்களைப் பற்றிய தகவல்கள் அதி ரகசியமாக பாதுகாக்கப்படுவதுதான் காரணம். போபார்ஸ் ஊழலில் அதன் உண்மையான பயனாளியை இந்தியா கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு கூட இத்தகைய ரகசிய கணக்குகளே காரணம்.

நாம் நமது சிந்தனைகளை ஒன்று படுத்துவோம். அந்தப் பணத்தை இந்தியாவிற்கு திரும்பப் பெற உண்டான வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம். தேர்தல் நெருங்கி விட்டது. இதை மக்கள் மத்தியில் நம்மால் இயன்ற வழிகளில் கொண்டு செல்வோம். சுவிஸ் வங்கிக் கணக்குகளை கேட்டுப் பெற அரசை மக்கள் மூலம் வலியுறுத்துவோம்.

இந்தியாவின் சொத்து ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமானது.

நன்றி : பதிவர் சுல்தான்.

No comments: