Wednesday, September 30, 2009

சுய புலம்பல்

எனது நூறாவது பதிவிது. தொடங்கி ஒன்பதாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறேன். எனது வலை தளத்திற்கு வந்து, நான் எழுதுவதையும் நேரம் ஒதுக்கி படிக்கும் நண்பர்கள்,அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பலகோடி.

இதுவரை வலைத்தளத்திற்கு வந்துபோனவர்கள் 2000 திற்கு மேல். ஆனால் மறுமொழி மற்றும் கருத்து கூறியவர்கள் ஓரிருவரே. கைதட்டலோ,வாயார திட்டோ சொன்னால் தான் தெரியும்.

ஏன்டா இப்படி புலம்பர, உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா, போடா லூசு, ஆமாம் நானும் இத பத்தி யோசிச்சிருக்கேன் என எப்படி வேண்டுமானாலும் எது தோணுதோ அதை கூறுங்கள். இல்லை என்றால் நீங்கள் படிக்கிறீர்களா ? இல்லையா ? என்றே தெரிவதில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிடும்.

அப்புறம் இந்த நேரத்தில் மற்றுமொரு செய்தியையும் உங்கள் முன் எடுத்துரைக்க கடமை பட்டுள்ளேன். எவ்வளவு நாள் தான் நாமும் நாடு சரி இல்லை, மக்கள் சரி இல்லை என புலம்புவது என்றெண்ணி ஒரு முடிவுக்கு வந்தவனாய் பூஜை விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்தேன். வீட்டில் மெதுவாக இந்த விஷயத்தை ஆரம்பித்தேன் பின்வருமாறு.

"ஏம்ப்பா எவ்ளோ நாள் தான் நீங்களும் கஷ்டபடுவீங்க, வயசும் ஆகி போச்சு, பேசாம ரெஸ்ட் எடுங்க."

குழப்பமும் கேள்வியும் கலந்த ஒரு பார்வை பதிலாக கிடைத்தது.

மேலும் தைரியத்தை வரவழைத்துகொண்டு "இல்லப்பா வர வர வேலை ஆளும் கிடைக்க மாட்றாங்க, கரண்டும் கிடைக்க மாட்டேங்குது, விவசாயம் அளிஞ்சிட்டே வருது. இப்படி படிச்ச அடுத்த தலைமுறை எல்லாம் நகரத்துக்கே புழைக்க போயிட்டா, கிராமம் என்னாவது ? விவசாயம் என்னாவது ? என்றேன்.

"சரி அதுக்கு என்ன பன்னனும்கர ? " இது அப்பா.

"அதனால வேலைய விட்டுட்டு ஊருக்கே வந்திரலாம்னு பார்க்கிறேன்."

"வந்து..." கோவத்துடன் இடை மறித்தார் அப்பா.

"விவசாயம் தான் பார்பேன் வேற என்ன செய்வேன் ? " எனக்கும் கோபம் சற்றே எட்டிபர்த்தது.

இப்படியே தொடர்ந்தது வாக்கு வாதம். முடிவில் பைத்தியமாடா உனக்கு என அம்மாவும், அங்கேயே நல்ல படியா settle ஆகுற வழிய பாரு என சித்தியும், B.E. படிச்சிட்டு உனக்கு ஏன்டா இந்த வேலை என ஊர்கார நண்பனும் அறிவுரை வழங்க சற்றே குழப்பத்துடன் முடிவடைந்தது எனது ஊர் பயணம்.

விளைவு, நான் பெங்களூர் வந்த மறு நாளே சித்தப்பாவை அழைத்துக் கொண்டு ஏதோ ஒரு ஜோசியரிடம் எனது ஜாதகத்தை குறித்து கொண்டு வந்து விட்டார் எனது அப்பா. இனி பெண் பார்க்கும் படலம் தீவிரமாகும். அம்மா,அக்காவுடனான தொலைபேசி உரையாடல்கள் நீளமாகும்.
பிள்ளையார் புடிக்க போய் குரங்கு வந்து விட்டது.

என்ன தான் ஆனாலும் கிராமம்,விவசாயம் மீதான எனது காதல் கொஞ்சமும் குறையாது. எனது இறுதி நாட்கள் நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தான் என்பதையும், எனது குல தொழில் வேளாண்மையை மறக்க முடியாதென்பதையும் தெளிவு படுத்துகிறேன்.

ஏதோ சொல்லவேண்டும் என தோன்றியதால் இந்த பதிவு.
இந்த நூறு போல 200,300, என சமூக அவலங்கள் பற்றிய எனது நிலைபாடு, எண்ணம், கோவம் , ஏக்கம் என அனைத்தையும் உங்கள் பார்வைக்கு சமர்பிர்பேன்.

நன்றிகளோடு உங்கள் கருத்தை,மறுமொழியை எதிர்நோக்கும் சாமானியன் ஒன்பத்துவேளியிலிருந்து.

Friday, September 25, 2009

என் இந்திய நாடு

'உலகிலேயே அதிகமான ஏழைகள் வாழும் நாடு இந்தியா. அதிகமான மக்கள், பசியோடும், பட்டினியோடும் படுக்கைக்குப் போகும் நாடு இந்தியா. குறைப்பிரசவம் மற்றும் குறைவான எடையோடு பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்' -இப்படித்தான் சொல்கின்றன உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள். ஆனாலும், 'மிகவேகமாக வளரும் நாடு இந்தியாதான்' என்று மூச்சுக்கு முந்நூறு தடவை நமது பிரதமர் மன்மோகன் சிங் சொல்லிக் கொண்டு அலைவது தனிக்கதை.

நம் பாரதத் திருநாட்டில், ஏழைகளுக்காக உழைக்கும் இந்த மக்கள் சேவகர்களின் சில திருவிளையாடல்களைப் பாருங்கள்.

கொள்கையே இல்லாத வெளியுறவுத் துறைக்கு இரண்டு மந்திரிகள். ஒருவர் கேபினட் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா. தினம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் இல்லாத கொள்கையைப் பற்றி 'ரூம்' போட்டு யோசிக்கிறார்.

இன்னொருவர் இணையமைச்சர் சசிதரூர். இவர்தான், விமானத்தில் சாதாரண வகுப்பை, 'மாட்டுத் தொழுவம்' என்று வர்ணித்தவர். இவரும் தன் பங்குக்கு தினம் 40,000 ரூபாய் செலவில் ரூம் போட்டு தன் 'சிந்தனாசக்தி'யைப் பட்டைத் தீட்டி, நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்பவர்.


'சீனா தலையில் குட்டுகிறது. இலங்கை காலை வாருகிறது. பாகிஸ்தான், பர்மா இரண்டும் பக்கத்துக்கு ஒன்றாக இடிக்கிறது. நட்பு நாடான நேபாளம்கூட இப்போது 'நோ' சொல்லி விட்டது. ஆனால், இது எதைப் பற்றி- யும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய வெளியுறவுத் துறையும், மத்திய அரசும் மவுனச் சாமியார்களாக இருக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், விதர்பாவில், விவசாயிகள் கடன் பிரச்னையால், கொத்துக் கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருப்பதை யாரும் மறந்து விட முடியாது. அங்கு 80% விவசாயிகள் கட்டமுடியாமல் போன அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு தெரியுமா? சொன்னால் நம்ப முடியாது. ஒவ்வொருவருக்கும் வெறும் 50,000 ரூபாய்தான். அதாவது, பாரதத் திருநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவின் அரைநாள் அறை வாடகை.

தனிவிமானத்திலும், ஹெலிகாப்டர்களிலும் மட்டுமே பறந்து வழக்கப்பட்டவர்களுக்கு, வறட்சி திடீரென்று ஞானக் கண்களைத் திறந்து விட்டிருக்கிறது. மாட்டு வண்டிகளிலும் ரயிலிலும் பயணம் செய்து செலவைக் குறைப்பதாக, செய்திகள் கசிகின்றன. விமானத்தில் சென்றால்கூட, ஒருவரோடு செலவு முடிந்து விடும்.

ரயிலில் போனால்... 10-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் புடைசூழ, அக்கம்பக்க பயணிகள் அடிவயிற்றில் அக்னியைச் சுமக்க, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவலர்கள் கெடுபிடியில் சிக்கி பயணிகள் தவிக்க, ஏழை இளவரசர் ராகுல் பயணம் செய்தாராம். சமீபத்தில், தமிழகத்தில் ராகுல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆன செலவு 1 கோடியைத் தாண்டுமாம். கேட்டால்... சிக்கன நடவடிக்கை...

விமானப் பயணத்தையே, 'மாட்டுத் தொழுவம்' என்று பரிகாசம் செய்யும் கதர் கண்மணிகளே! தமிழ்நாட்டில் ஒரு முறை பஸ்சில் பயணம் செய்து பாருங்கள்... செம்மறி ஆட்டுத் தொழுவத்தைவிட கேவலமாக இருக்கிறது. மூன்று பேர் அமரும் இருக்கையில், முக்கால் மனிதன் சீட்டுக்கு வெளியில்தான் தொங்க வேண்டும்.

முன்பதிவு இல்லாத ரயில் பயணமோ, நரகத்தில் இருப்பதைவிட கொடுமையானது. 72 பேர் பயணம் செய்ய வேண்டிய பெட்டியில், இருநூறுக்கும் அதிகமானவர்களைச் செம்மறி ஆடுகளைப் போல அடைக்க வேண்டியிருக்கிறது. கழிவறையிலும் கால் வைத்து நிற்க இடமில்லாமல், பயணம் செய்யும் மக்களுக்காகத்தான், தினம் ஒரு லட்சம் செலவில் ரூம் போட்டு யோசிக்கிறார்கள், நமது பாரததேசத்தின் அமைச்சர் பெருமக்கள்...

ஊழலும் ஊதாரித்தனமும், நமது அரசியல்வாதிகளின் உடன் பிறப்புக்கள். கோடிகோடியாக கருப்புப் பணம் சுவிஸ் வங்கியிலும் இந்திய நிலச் சந்தையிலும் புதைந்து கிடக்கிறது.

இந்தக் கொடூர நாடகமாடிகளின் கூத்துக்களை எண்ணிப் பார்க்கும்போது, யாரோ ஒரு கவிஞன் எழுதிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

'நான்முகனே...

மீண்டும்
என்னை
இந்தியாவில்
பிறக்க வைக்க நினைத்தால்...
இரைப்பை இல்லாமல்
பிறக்க வைக்கவும்!'

-பசுமை கட்டுரை-

Saturday, September 19, 2009

உன்னை போல் ஒருவன்

ஹிந்தி wednesday படத்தின் ரீமேக். தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் ஒரு Stupid Common Man தான் உன்னை போல் ஒருவன். படம் 107 நிமிடங்கள் தான். கமல் 5 நாட்களில் நடித்து கொடுத்தாக கூறப்படுகிறது.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிக திறைமையாக நடித்து கமலுக்கு சரியான போட்டி தந்திருக்கிறார். மலையாள slang சில இடங்களில் புரிய மறுத்தாலும், குறையாக சொல்ல முடியாது. மோகன் லாலுக்கு ஸ்பெஷல் பாராட்டு தந்தே ஆக வேண்டும்.

கமல். நடிப்பு திறனை காட்ட அதிக வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்த இடத்தில் பட்டையை கிளப்பி விட்டார். இறுதியில் காரணம் சொல்லி அழும்பொழுது அடா அடா. . . கமலுக்கு பத்மஸ்ரீ தந்தது தப்பே இல்லை. மற்றபடி ஹிந்தி சாயல் பல இடங்களில் எட்டிபார்கிறது. படத்தின் மிக பெரிய மைனஸ் ஆங்கில சொற்கள் கலப்பு. பல இடங்களில் புரிய மறுக்கிறது. இதை மட்டும் கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் மெருகேறி இருக்கும். மொத்தத்தில் கண்டிப்பாக காணவேண்டிய A Must Watch Movie.

எனது மதிப்பீடு : 7/10

Wednesday, September 16, 2009

DoorDarshan 50

தூர்தர்ஷன் பொன்விழா காண்கிறது. எனக்கு மட்டுமில்லாமல் பல பேருக்கு இது மகிழ்ச்சி கலந்த மலரும் நினைவுகளை ஏற்படுத்தும்.

டிடி அந்நாளில் இருந்த ஒரே தொலைக்காட்சி அலைவரிசை. டிவி என்றாலே டிடி தவிர ஒன்றும் கிடையாது.அதுவும் மிகப்பெரிய ஆண்டெனா வைத்தாக வேண்டும்.
நான் பிறந்த கிராமத்தில் இருந்த ஓரிரு தொலைக்காட்சிகளில், எங்கள் வீட்டு டிவியும் அடக்கம். பின் மாலை நேரங்களிலேயே தமிழ் ஒலிபரப்பு தொடங்கும் என்பதனால் , இருக்கிற வேலைகளை விரைவாக முடித்து அனைவரும் டிவி முன் அமர்ந்து விடுவார்கள்.


அதுவும் வெள்ளி இரவு வரும் ஒளியும்ஒலியும், ஞாயிறு மாலை திரைப்படங்கள், புதன் இரவு Chitrahar, போன்ற நிகழ்ச்சிகள் மிக பெரிய ஆதரவு பெற்றன. தவிர இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடிகொளிட்டதே டிடி தான். அந்நாளில் டிடி அனைத்து கிரிக்கெட் ஆட்டங்களையும் ஒளிபரப்பியது. நான் கிரிக்கெட்டை பார்த்தது,ரசித்து,கற்றுகொண்டது என அனைத்தும் டிடி மூலமாக நடந்தது.

வெறும் திரைப்பாடல்கள்,திரைப்படங்கள் என நில்லாமல் கல்வி, விளையாட்டு, பொதுஅறிவு, செய்திகள் போன்ற பலதரப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் தயக்கமின்றி ஒளிபரப்ப பட்டன. ராஜிவ் காந்தி மரணம் பற்றிய செய்தி டிடி யில் வெளியான போது ஊரே அமைதியில் ஆழ்ந்திருந்தது. மூன்று நாட்கள் துக்கமும் அனுசரிக்க பட்டது.

தொடக்கத்தில் மெதுவாக நுழைந்த தனியார் தொலைக்காட்சிகள் போகப்போக பிரம்மாண்டமாக தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்தன. விளைவாக இன்று நூற்றுகணக்கான தனியார் அலைவரிசைகள் ஆதிக்கம். நம்பகத்தன்மை இழந்து, விளம்பர மோகம் கொண்டு, வியாபார முகம் எடுத்து,தனியாக Sensor Board கேட்க்கும் வரை வந்து நிற்கிறது இன்றைய தொலைக்காட்சி உலகம். நேற்று வந்த கலைஞர் தொலைக்காட்சியும்,இசையருவியும் கொண்ட ரசிகர்கள் எண்ணிகையை கூட 50 வருட பாரம்பரியம் கொண்ட டிடி தாண்டவில்லை என்பதே கசப்பான உண்மை.

யாரை குற்றம் சொல்வது ?
நவீன தொழில்நுட்பம் பலவற்றை வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருக்கும் பிரசார் பாரதியையா ? இல்லை பிரசார் பாரதிக்கு சரியான அதிகாரமும், பொருளுதவியும் தராத அரசையா ? இல்லை தலைமுறை மாற்றம் என சொல்லிக்கொண்டு சரியானவற்றை வரவேற்க தவறிய இன்றைய ரசிகர்களா ?
யாரை குற்றம் சொல்வது ?

எது எப்படியானாலும் தூர்தர்ஷன் இன்னும் செழிப்பாக வளர்ந்து நூற்றாண்டு விழா காணவேண்டுமென்பதே நாட்டில் பரவலாக இருக்கும் கோடிக்கணக்கான ரசிக மக்களின் மனதில் இருக்கும் பெரிய ஆவல்.

Monday, September 14, 2009

தலைமுறையைத் தொலைத்து நிற்கும் வேளாண் தொழில்

விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்களது ஒரு தலைமுறையை வேளாண் தொழிலிலிருந்து முற்றிலும் தொலைத்துவிட்டனர். ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தங்களது பிள்ளைகளை அனுப்பி, மாத ஊதியம் பெறும் வர்க்கத்தினராக்கிவிட்டனர். தற்போது வேளாண் தொழிலில் ஈடுபட்டிருப்போரில் பெரும்பான்மையினர் 45, 50 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே.

விவசாயம் லாபகரமற்ற தொழில் என்றாகிப்போனதால், தங்களது வாரிசுகளை இத்தொழிலில் ஈடுபடுத்த சிறு, குறு, பெரு விவசாயிகள் எவரும் பொதுவாக முன்வருவதில்லை.

விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சிதான் இந்தியாவின் சமச்சீர் வளர்ச்சிக்கு உதவும். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், நகர்ப்புற மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் தீர்வாகவும் அமையும்.

இந்தியாவின் பலம் அதன் விவசாயிகளிடமும், வேளாண் தொழில் வளர்ச்சியிலும்தான் இருக்கிறது. நாளைய உலகின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நாம், இன்றைய விவசாயியின் பசியையும் பட்டினியையும் போக்க இயலாத நிலைமையில் இருப்பது வருந்தத்தக்க விஷயம். இதற்குக் காரணம், தவறான பொருளாதாரப் பார்வையா அல்லது ஆட்சியாளர்களிடம் தொலைநோக்குப் பார்வை இல்லாமையா? எதுவாக இருந்தாலும், இந்த நிலைமை தொடரக் கூடாது!

நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிக்குத் தன் தேவையைப் பூர்த்தி செய்யக்கூட வருவாய் கிடைப்பதில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கும், நடவுக்கும்கூட தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. விளைந்த பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் கதிர் முற்றிக் கிடக்க, விளைநிலங்கள் பயிரின்றி, தரிசாகக் கிடக்கின்றன. நெல் நடவு தாமதமானதால் மகசூல் பாதிப்படையும்.

சோறுடைத்த சோழ நாடு இன்று சோற்றுக்கு கையேந்தி நிற்கிறது. இந்த நிலை வெகு விரைவில் இந்த நாட்டுக்கே வந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.

அனைத்தும் அறிந்தும், ஒன்றுமே செய்ய இயலாதவனும், குல தொழிலை தொலைத்தவனுமான சாமானியன் ஏதாவது அற்புதம் நடைபெறாதா என்ற ஏக்கத்துடன் இந்த பதிவை சமர்பிக்கிறான்.

அண்ணா நூற்றாண்டு SPECIAL

அண்ணா முதலமைச்சராக இருந்த சமயம் அது. அவருடைய காஞ்சீபுரம் வீட் டில் திடீரென்று ஃபிரிட்ஜ் இருப்பதைப் பார்த்தார். வியப் புடன் ''இதை எப்போது வாங்கி னீர்கள்?'' என்று வீட்டாரிடம் விசாரித்தார்அண்ணா.

''மாதத் தவணையில் வாங்கி னோம். நீங்கள் இங்கு வரும் போது, உடன்வரும் அதிகாரிகள் 'ஐஸ் வாட்டர்' கேட்கிறார்கள். கடைக்குப் போய் வாங்கி வர வேண்டியிருக்கிறது'' என்று மருமகள் பதில் கூறவும், ''நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு நம் மிடம் இருப்பதைத் தந்தால் போதும். நமது வசதிக்கு ஏற்ப வாழ்வதுதான் சரியான முறை'' என்றார் அண்ணா.

அண்ணா காபி, டீ தவிர, வேறு ஓவல், ஹார்லிக்ஸ் இப்படி விலையுயர்ந்த பானங்களை அருந்த விரும்பியதில்லை.

அண்ணாவுக்குக் கார் ஓட்டவும் தெரியும். 1953-ல் அவரிடம் இருந்த எம்.டி.ஸி.4758 இந்துஸ் தான் காரை, நகரை விட்டுக் கடந்ததும் அவரே ஓட்டுவார். இருபது மைல் வேகத்தை கார் தாண்டாது.

கல்லூரி நாட்களிலிருந்து நாளும் புத்தகங்களைப் படிக் கும் பழக்கம் உடையவர் அண்ணா. எடுத்த புத்தகத்தைப் பொழுது விடிந்தாலும் படித்து முடித்துவிட்டே தூங்குவார்.


விஞ்ஞானம், இலக்கியம், வரலாறு, பொருளியல் என நூலகத்தில் புதிதாக வந்த எதை யும் அவர் படிக்காமல் விட்ட தில்லை. பழைய புத்தக வியா பாரிகள் இருவர் அவருடைய நண்பர்களாக இருந்தனர். வாரம் ஒரு முறை ஒரு சாக்கு மூட்டையில் பழைய புத்தகங் கள் அவரைத் தேடி வரும். மறு வாரம் புதிய மூட்டை வந்த பின், பழைய மூட்டை திரும்பும். சகோதரியின் மகளுக்கு 'கான் சர்' வந்ததும், கான்சர் வியாதி சம்பந்தமாக வந்துள்ள புத்தகங் கள் அனைத்தையும் வாங்கிப் படித்து முடித்துவிட்டார் அண்ணா.

அறுவைச் சிகிச்சை முடிந்து அண்ணா அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து வந்தபோது, இந்தியத் தூதராக இருந்த தவானின் விருந்தாளியாக அவர் ஒரு நாள் இருந்தார். அப்போது அவர் படிப்பதற்காக தவான் தன் நூலகத்திலிருந்து பல புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அண்ணா அவற்றை லேசாகப் புரட்டிவிட் டுத் திரும்ப வைத்துவிட்டார். ''என்ன, இவை உங்களுக்கு விருப்பமில்லாத புத்தகங்களா?'' என்று தவான் கேட்க, ''இல்லை, இவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே படித்து முடித்து விட்டேன்'' என்றார் அண்ணா. வியந்து போனார், இந்தியத் தூதர். காரணம், இங்கிலாந்தில் வெளியான சமீப காலப் புத்த கங்கள் அவை.

இதனால் தான் இவர் பேரறிஞர்...

ஈரம்

அறிவழகன் இயக்கி, இயக்குனர் சங்கர் தயாரித்து வெளிவந்திருக்கும் வித்யாசமான thriller ஈரம். இப்படிஒரு கதையை தைரியமாக தந்தமைக்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் முதல் கைதட்டு. மிருகம் ஆதி, மௌனம் பேசியதே நந்தா, யூத் சிந்து மேனன், சரண்யா மோகன் போன்ற சாதாரண நட்சத்திரங்களே நடித்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ஈரம் கதையை மட்டுமே நம்பி எடுக்க பட்ட படம்.

தண்ணீர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. யாவரும் நலம் சாயல் கொஞ்சம் தெரிந்தாலும் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய படம். இயக்குனர் அறிவழகன் போல கவனம் ஈர்க்கும் மற்றுமொரு நபர் கேமரா மேன் மனோஜ் பரமஹம்ஸ. வரவேற்கிறோம் தமிழ் திரை உலகிற்கு.

S பிக்சர்ஸை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். தொடர்ந்து மிக தரமான படங்களையே தந்து, புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரும் S Pictures தமிழ் சினிமாவிற்கு ஒரு வரப்ரசாதம். இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. சன் பிக்சர்ஸ், விகடன் டாக்கீஸ், ரெட் ஜெயின்ட் மூவீஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இதனை கவனிக்குமா...?

எனது மதிப்பீடு : 6/10

Thursday, September 10, 2009

வர்த்தக இந்தியா

வறுமையை ஒழிக்க, வர்த்தகம்'

-இதை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் உலகப் பொருளாதாரத் திலகம் பிரதமர் மன்மோகன் சிங்.

'வீட்டை விற்றாலும் பரவாயில்லை, நாட்டை விற்றாலும் பரவாயில்லை, வியாபாரம் ஒன்றுதான் நாட்டின் செல்வத்தைப் பெருக்க ஒரே வழி' என்று திடமாக நம்புகிறார் மன்மோகன் சிங். அதற்கு சரியாக வால் பிடித்துச் செல்கின்றனர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகிய இருவரும்.


பொருளாதார முடக்கம் நீங்க வேண்டுமானால், சுதந்திரமான, கட்டுப்பாடுகள் அற்ற வர்த்தகம் ஒன்றுதான் வழி' என்ற அமெரிக்காவின் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக, உலக வர்த்தக அமைப்பு நாடுகளின் (கீஜிளி) 35 வர்த்தக மந்திரிகளை டெல்லிக்கு அழைத்து, கடந்த வாரத்தில் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா. இதையடுத்து, வருகிற 14-ம் தேதி ஜெனீவாவில் கூடி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, எப்படியாவது விவசாயத்தை, கட்டுப்பாடுகளற்ற காளையாகத் திரியும் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்த்துவிடுவது என்கிற ஒரு வரி அஜெண்டாவோடு தீவிரமாக சுழன்று வருகிறது இந்திய அரசு.

இந்தியாவின் 63-ம் சுதந்திர தினத்தன்று, ஆந்திராவில் 13 விவசாயிகளும், விதர்பாவில் 6 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகள் வீடு, நிலங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர். கடந்த மாதம் மட்டும் மத்திய பிரதேசம் ஜான்சி ரயில் நிலையம் வாயிலாக 1.5 லட்சம் விவசாயிகள் வெளியேறியதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் இப்போதே இந்த நிலை. அப்படியிருக்கும்போது விவசாயத்தை உலக வர்த்தகத்தில் சேர்த்தால், விவசாயிகளின் நிலைமை என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அதனால்தான், ‘உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து விவசாயத்துக்கு விலக்கு அறிவியுங்கள்' என்று நீண்ட காலமாகவே உலகம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் பேராடி வருகின்றன.

இப்போதுகூட டெல்லியில் வர்த்தக அமைச்சர் மாநாடு நடந்தபோது, இந்தியா முழுக்கவிருந்து லட்சக்கணக்கில் விவசாயிகளை டெல்லிக்கு கூட்டி வந்து அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் யூத்வீர் சிங். ஆனால், அமெரிக்கா என்ன சொக்குப் பொடி போட்டதோ தெரியவில்லை, எதையும் கண்டு கொள்கிற நிலையில் இல்லை இந்தியா.

அமெரிக்கா யானை... படுத்தாலும் குதிரை மட்டம்தான். ஆனால், இந்தியா..? புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட கதையாகத்தான் முடியப்போகிறது.

-பசுமை கட்டுரை

இறுதி எச்சரிக்கை

'இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 23% குறைவாக பெய்துள்ளது. இதற்கு காரணம், அரபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகரித்ததுதான். நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பத்தின் வேறுபாடு அதிகமாக இருந்தால்தான், கடலில் இருந்து வீசும் காற்றை, தரைப் பகுதி வெப்பம் ஈர்த்து மழை பெய்யச் செய்யும். ஆனால், குளோபல் வாமிங் காரணமாக நிலப்பரப்பைப் போலவே, கடல் பரப்பிலும் வெப்பம் அதிகரித்து வருவதால்' நிலைமை சிக்கலாகிக் கொண்டிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள் புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள்.

இத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. 'இந்த நிலை நீடித்தால்... இந்தியாவில், 150 ஆண்டுகளுக்குப் பிறகு தென்மேற்கு பருவ மழை என்பதே இருக்காது' என்றும் அதிர்ச்சி கிளப்பியுள்ளனர்.

இதை இறுதி எச்சரிக்கை என்று சொல்வதே சரியாக இருக்கும்!

ஆம், பல ஆண்டுகளாவே, குளோபல் வாமிங் பற்றி எச்சரித்துக் கொண்டுதான் உள்ளனர் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் ஆர்வலர்களும். இதற்காகவே உலகளாவிய அமைப்புகளும்கூட உருவாக்கப்பட்டு அடிக்கடி மாநாடுகள் கூட்டப்படுகின்றன. ஆனால், அங்கு எடுக்கப்படும் முடிவுகள் எல்லாமே 'ஏட்டுச் சுரைக்காய்' என்பதாக கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

சூழலைப் பற்றி கவனம் கொள்ளாமல் பூமிக்கு கேடு விளைவிக்கும் வேலைகளை மனித இனம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. தேவைக்கு மிஞ்சிய வகையில் வாகனப் பெருக்கம்; கட்டுப்பாடில்லாத தொழில் வளர்ச்சி; தாறுமாறான காடு அழிப்பு என்று ஒவ்வொரு செயலுமே, நுனிமரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டும் மூடனின் வேலையாக தொடரும்போது... இயற்கை தன் கோபத்தைக் காட்டாமல் என்ன செய்யும்?

தயவு செய்து இப்பொழுதாவது விழித்துக்கொண்டு , பூமித் தாய்க்கு பசுமைக் குடை பிடிக்கும் வேலையை ஆரம்பிப்போம்.

இல்லாவிட்டால்...?!

சம்போ சிவசம்போ...

Saturday, September 5, 2009

நினைத்தாலே இனிக்கும்

மலையாள படம் ClassMates இன் ரீமேக். பிரிதிவிராஜ், சக்தி,ப்ரியாமணி,பாக்யராஜ் என நட்சத்திர பட்டாளம். இயக்குனர் குமரவேலனின் முதல் படைப்பு. கல்லூரி, நட்பு, TeenAge என படம் போனாலும் மிக மெதுவாக,சலிப்பாகவே போகிறது. அதுவும் முதல் பாதி.... அட ராமா! இரண்டாம் பாதி சுமார் ரகம். வெறும் திரைகதையை வைத்துக்கொண்டு கொஞ்சம் சுவாரஸ்ய படுத்திஇருகிறார். மற்றப்படி படத்தில் ஒரு மண்ணும் இல்லை.


தமிழ் ரசிகர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. இது போல பழைய காலத்து படங்களை நிறைய பார்த்துவிட்டார்கள். ரீமேக் செய்வதற்கு கூட தனி திறமை வேண்டும் என்பதை தெளிவு படுத்தி விட்டார் இயக்குனர். இந்த படம் ஹிட் ஆனால் சன் பிக்சர்சின் விளம்பர திறமையே காரணம்.

எனது மதிப்பீடு : 3/10

Friday, September 4, 2009

கார்பரேட் உலகம்

உண்மையை உரக்கசொல்லும் உழவனின் கவிதை...


தாய்மாமனாய் இருக்கவேண்டிய
தங்கை மகள் காதணி விழா

உடன்பிறந்தவனாய் முன் நிற்கவேண்டிய
சித்தி மகள் திருமணவிழா

மஞ்சள் நீரூற்றி விளையாடும்
அம்மன் கோவில் பொங்கல் விழா

கட்டிப்பிடித்து அழுததுபோக
கண்துடைத்து ஆறுதல் சொல்லவேண்டிய
பள்ளித் தோழனின் தந்தை மரணம் .......

இப்படி எத்தனையோ
நல்லவை கெட்டவைகளுக்குப்
போகமுடியாமல் போனது!

மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
இந்தக்
கார்பரேட் உலகில்!

உழவன்

Thursday, September 3, 2009

"எல்காட்' மெத்தனம்: முடங்கியது ரூ. 12 கோடி

ELCOT : Electronics Corporation of Tamilnadu.

தமிழகத்தில் உள்ள தொடக்க-நடுநிலைப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்க அரசு ரூ. 12 கோடி ஒதுக்கியதாகவும், ஆனால் "எல்காட்' நிறுவனத்தின் மெத்தனத்தால் கடந்த ஓராண்டாக பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2008-2009-ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் (சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.) மூலம் தொடக்க - நடுநிலைப் பள்ளிகளுக்கு 3,000 கணினிகள் வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. இதற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கணினிகளை வாங்கும் பொறுப்பு அரசின் "எல்காட்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


உமாசங்கர் இடமாற்றத்தால்...: டெண்டர் விடும் நேரத்தில் "எல்காட்' நிர்வாக இயக்குநராக இருந்த உமாசங்கர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், பள்ளிகளுக்கு கணினி வாங்குவதற்கான டெண்டர் கோருவதில் காலதாமதம் நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

"அதேநேரத்தில் அரசு ஒதுக்கிய ரூ.12 கோடி நிதி, எல்காட் நிறுவனப் பெயரில் வங்கியில் உள்ளது. இதன்மூலம் வரும் வட்டித் தொகையை எல்காட் நிறுவனமே பெற்று செலவு செய்து வருகிறது' என்ற புகார் எழுந்துள்ளது.

கணினி வழங்குவது எப்போது? இதுகுறித்து அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ""பள்ளிகளுக்கு ரூ.12 கோடியில் கணினி வாங்கும் பணி, எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் எல்காட் நிறுவனத்தில் டெண்டர் கோருவதில் காலதாமதம் நிலவியதால் கணினிகளை சரியான நேரத்தில் பெற முடியவில்லை.

கடந்த 2009 மே-ஜூன் மாதத்தில்தான் டெண்டர் கோரும் பணி முடிந்ததாக "எல்காட்' நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சுமார் 6 நிறுவனங்களிடம் இருந்து கணினி வாங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பணி ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும்'' என்று தெரிவித்தனர்.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தூங்கிட்டு இருக்காரே...

Tuesday, September 1, 2009

அறிஞர் அண்ணா

அண்ணா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட தலைவர்......

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிய மாபெரும் தலைவர்..... தமிழனுக்கு தன்மான உணர்வை உணரவைத்த நம் காஞ்சித்தலைவர்...

அண்ணாவின் தாராக மந்திரம்.....
கடமை... கண்ணியம்.... கட்டுப்பாடு...

"கடமையை மட்டுமே கண்ணாகக் கொண்டு வாழ்ந்து, தமிழகத்து இருளை அகற்றிய உதயச்சூரியன்..."

"அவருடைய கனவு தமிழகத்தை உருவாக்க அவருடைய உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் இழந்தவர்..... "

"தனக்கென்று எதையும் தேடிக்கொள்ளா தன்னலம் மற்றத் தலைவர்...."
"அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ் நாள் முழுவதும் தியாகம் செய்த தாணைத்தலைவர்.."

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சிபுரத்தில் நெசவு தொழிலாள குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

அவரது வரலாறை நேரமிருந்தால் கொஞ்சம் படித்து பாருங்கள்...

அறிஞர் அண்ணா ஒரு சகாப்தம்

1937 ம ஆண்டு ராஜாஜி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அண்ணாவின் பேச்சைக் கேட்டவர், அண்ணாவை காங்கிரசில் சேர்த்துக் கொண்டால் நல்லது என்று நினைத்தார். ஆனால் முதுகலைப் பட்டம் பெற்ற அண்ணா பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, ஜஸ்டிஸ் கட்சியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தது தெரிய வந்தது. அவருடைய பேச்சு மற்றும் எழுத்துத் திறமையால் மிக குறுகிய காலத்தில் திராவிட கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக முன்னேறினார். "திராவிட நாடு" என்ற பத்திரிக்கையை 1942ம் ஆண்டு தொடங்கினார்.

சமூக அக்கறையுள்ள கதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள் எழுதினார். சமூக நீதி மற்றும் ஏழைகளின் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதில் பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தது. மிக சாதுர்யமாக எந்தவிதமான அடிப்படைக் கொள்கைகள் பொருட்டு இல்லாமல், பெரியார் எழுவது வயதில் திருமணம் செய்து கொண்டதை காரணம் காட்டி, திராவிட முன்னேற்றக் கழகம்(தி.மு.க) என்ற கட்சியை தொடங்கி அதன் பொதுச் செயலாளர் ஆனார். அவருடன் தி.க வில் இருந்து பெரிய பட்டாளமே அவருடன் வெளியேறியது. தேர்தலில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியாக தி.மு.க வை அண்ணா முன்னிறுத்தியதால், பலவிதமான சமாதானங்களைச் செய்து கொள்ள வேண்டிய தாகியது. "அரசியல் என்பது முடிந்தவற்றைச் செயல் படுத்தும் ஒரு கலை" என்று அண்ணா நன்கு அறிந்து இருந்தார்.

கடவுள் எதிர்ப்பு என்பது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற அறைகூவலில் திசை மாறியது. பல நூற்றாண்டுகளாக கடவுள் நம்பிக்கையில் ஊறிய சமூகத்தில், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற முழக்கம் அண்ணாவின் மக்களுடனான நெருக்கத்தை அதிகப் படுத்தியது. "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்ற தனி நாடு என்ற கோரிக்கை 1963ம் ஆண்டு நடந்த தி.மு.க மாநாட்டில் கைவிடப் பட்டது. இதை "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்ற சிந்தாந்தத்தின் மூலமாக மாநிலத்திற்கு அதிக அதிகாரம் பெறும் முயற்சியாக அண்ணா மாற்றினார்.

காங்கிரஸ் எதிர்ப்பு, தி.மு.க வின் கொள்கை பரப்புதலுக்கு இடையே கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து வந்தார். இங்கு 1952ம ஆண்டு தேர்தலில் கம்யூனிஸ்டுகள் அதிக இடங்கள் பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து மே தினம், பொருளாதார சமநிலை முதலியவற்றை பெற்று பொங்கல் திருநாள் தான் தமிழர்களுக்கு மே தினம் என்றும், சமதர்ம பூங்கா என்பதே லட்சியம் என்றும் அழகாக மாற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றதால் கம்யூனிஸ்டுகள் வளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டார். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதை சரியான முறையில் கையாளாத காங்கிரஸ் அரசு, பண வீக்கம், தி.மு.க வின் இடைவிடாத பிரச்சாரம், கம்யூனிஸ்டுகள் மற்றும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனான கூட்டு, தி.மு.க விற்கு 1967ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று தந்தது.

பெரியார் அண்ணாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் "கூத்தாடிகள்" என்று கடுமையாக எதிர்த்து வந்தாலும், அண்ணா தி.மு.க பெற்ற வெற்றியை அவருக்கு சமர்பிப்பதாக கூறியதோடு மட்டுமிலாமல், அவரிடம் திருச்சிக்கு சென்று ஆசிர்வாதமும் வாங்கி வந்தார். மேலும் பக்தவத்சலம் மற்றும் காமராஜரையும் சென்று பார்த்தது தமிழ் நாட்டு அரசியல் நாகரீகத்தின் உச்ச கட்ட நிகழ்ச்சி என்றால் மிகையாகது.

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளானஅவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.


ஒரு முதல்வராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு அரசியல்வாதியாகவும் மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுக விலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய MGRஅவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அ.தி.மு.க) கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார் என்பது வரலாறு.

அண்ணாவின் எதிர்பாராத மறைவு, அதற்குப் பிறகு தி.மு.கா வில் ஏற்பட்ட பதவிச் சண்டை, பேராசை எண்ணங்கள் தம்பிகளின் பத்திரிக்கை மற்றும் இலக்கிய முயற்சிகளில் இருந்த ஈடுபாட்டை திசை திருப்பியது. ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை சினிமா ஆக்கிரமித்துக் கொண்டது. ஆட்சியாளர்களும் சினிமா பிண்ணணியில் இருந்து வந்ததால், அதற்கான முக்கியத்துவம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முதன்மை இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது. தொலைக் காட்சிகளின் வரவு அதனை மேலும் அதிகரித்தது. சினிமா என்ற பொழுது போக்கு அம்சமாக இருக்க வேண்டிய ஒன்று, தமிழ் சமூகத்தின் முக்கிய அம்சமாக மாறியது தமிழனின் தலை எழுத்து என்பதை விட வேறு ஒன்றும் சொல்வதிற் கில்லை.

அண்ணாவால் பெருமையாக மொழியப்பட்ட "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" அவரது தம்பிகளால்(தங்கைகளும் தான்) பதவி ஆசை, ஊழல், பேராசை, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று இன்று மாற்றப்பட்ட இழி நிலையை நினைக்கும் போது, மனதிற்கு மிகவும் வேதனையாகவும், வருத்தமாகவும் உள்ளது.