Monday, September 14, 2009

தலைமுறையைத் தொலைத்து நிற்கும் வேளாண் தொழில்

விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்களது ஒரு தலைமுறையை வேளாண் தொழிலிலிருந்து முற்றிலும் தொலைத்துவிட்டனர். ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தங்களது பிள்ளைகளை அனுப்பி, மாத ஊதியம் பெறும் வர்க்கத்தினராக்கிவிட்டனர். தற்போது வேளாண் தொழிலில் ஈடுபட்டிருப்போரில் பெரும்பான்மையினர் 45, 50 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே.

விவசாயம் லாபகரமற்ற தொழில் என்றாகிப்போனதால், தங்களது வாரிசுகளை இத்தொழிலில் ஈடுபடுத்த சிறு, குறு, பெரு விவசாயிகள் எவரும் பொதுவாக முன்வருவதில்லை.

விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சிதான் இந்தியாவின் சமச்சீர் வளர்ச்சிக்கு உதவும். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், நகர்ப்புற மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் தீர்வாகவும் அமையும்.

இந்தியாவின் பலம் அதன் விவசாயிகளிடமும், வேளாண் தொழில் வளர்ச்சியிலும்தான் இருக்கிறது. நாளைய உலகின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நாம், இன்றைய விவசாயியின் பசியையும் பட்டினியையும் போக்க இயலாத நிலைமையில் இருப்பது வருந்தத்தக்க விஷயம். இதற்குக் காரணம், தவறான பொருளாதாரப் பார்வையா அல்லது ஆட்சியாளர்களிடம் தொலைநோக்குப் பார்வை இல்லாமையா? எதுவாக இருந்தாலும், இந்த நிலைமை தொடரக் கூடாது!

நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிக்குத் தன் தேவையைப் பூர்த்தி செய்யக்கூட வருவாய் கிடைப்பதில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கும், நடவுக்கும்கூட தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. விளைந்த பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் கதிர் முற்றிக் கிடக்க, விளைநிலங்கள் பயிரின்றி, தரிசாகக் கிடக்கின்றன. நெல் நடவு தாமதமானதால் மகசூல் பாதிப்படையும்.

சோறுடைத்த சோழ நாடு இன்று சோற்றுக்கு கையேந்தி நிற்கிறது. இந்த நிலை வெகு விரைவில் இந்த நாட்டுக்கே வந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.

அனைத்தும் அறிந்தும், ஒன்றுமே செய்ய இயலாதவனும், குல தொழிலை தொலைத்தவனுமான சாமானியன் ஏதாவது அற்புதம் நடைபெறாதா என்ற ஏக்கத்துடன் இந்த பதிவை சமர்பிக்கிறான்.

No comments: