முன் குறிப்பு : தயவு செய்து இதை விமர்சனமாக எடுத்து கொள்ள வேண்டாம். நிகரற்ற "பொன்னியின் செல்வன் " என்னும் இந்த வரலாற்று புதினத்தை விமர்சிக்க எனக்கு இன்னும் வளர்ச்சியும் இல்லை,தகுதியும் இல்லை.
பொன்னியின் செல்வன் 50' களில் தமிழ் ரசிகர்களை தனது பேனாவுக்குள் கட்டிப் போட்ட அமரர் கல்கியின் ஒரு மாபெரும் சரித்திர நாவல். தமிழ் கூறும் நல்் உலகில் இக்கதையை பற்றி கேள்விப்படாதவர் எவரும் இல்லை. சோழ சாம்ராஜியத்தின் வரலாறு, இமயம் முதல் இலங்கை வரை சோழர்களின் ஆட்சி,புகழ், அரச குலம், எழில் கொஞ்சும் இயற்கை வனப்புகள் என்பதை பிரதானமாக கொண்டு கூடவே காதல்,வீரம்,மோகம் என சேர்த்து அட்டகாசமான ஒரு மிக சிறந்த நாவல்.
நினைவு தெரிந்த நாள் முதல் அம்மா சொல்லியும் கேட்காமல் நிராகரித்து வந்த நாவல் பொன்னியின் செல்வன். கல்லூரி முதலாண்டில், விடுதியில் சும்மா பொழுதுபோக்காக எடுத்த வாசிக்க தொடங்கிய புத்தகம். முதல் இரண்டு பக்கம் படித்து பிரமித்து போய், அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு தொடர்ந்து படிக்க போனேன். அடுத்த மூன்று மாதங்கள் நிகழ்காலம் மறந்து, உணவு, உறக்கம், டி.வி, கிரிக்கெட் என அனைத்தையும் தவிர்த்து பைத்தியம் பிடித்தார் போல் 5 பாகங்களையும் முடித்து விட்டு தான் எழுந்தேன்.
சொந்த ஊர் சோழ நாடு என்பதாலோ என்னவோ பொன்னியின் செல்வன் என்னை வெகுவாக கவர்ந்தது. என் ஊரை தாண்டி வந்தியதேவன் போயிருப்பான் என நினைக்கும் பொழுது பெருமையாக தான் உள்ளது. கதை நடந்த காலத்திற்கே நம்மை கொண்டு சென்று குதிரையில் ஏற்றி , வெள்ளம் பாயும் ஆறுகளில் இறக்கி, நம் கண்களாலே எழில் கொஞ்சும் சோழ வள நாட்டின் இயற்கையை ரசிக்க வைக்கிறார். விளைவாக கதை நடந்த அந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லையே என ஏங்க வேண்டியதுதான். இலங்கையின் காடு மற்றும் மலைகள்,இந்திய பெருங்கடல், மாமல்லபுரம்,தஞ்சை,பழையாறை,குடந்தை போன்ற ஊர்களை பயணிக்கும் பொழுது அந்தந்த பகுதிகளின் மகத்துவம் புரிகிறது.
வந்தியதேவனின் துருதுருப்பு, கரிகாலரின் கோவம், அருள்மொழிவர்மரின் ஈர்ப்பு, குந்தவையின் அழகு, பழுவேட்டரையரின் வீரம், சுந்தர சோழரின் கம்பீரம், நந்தினியின் மோகம் என அத்தனையும் உள்ளடக்கிய ஒரு சோழர் குல வரலாற்று புதினம். அந்த கால கோட்டை உள் அமைப்புகள், வீதிகள் (ராஜபாட்), மக்களின் தேசபற்று, அரச குலத்திற் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை,காவேரி நதி என அனைத்தும் அருமையாக விளக்கபட்டிருக்கிறது.
FLASHBACK, இடைஇடையே பாடல்கள் என இருந்தாலும் கொஞ்சம் கூட சலிப்பே வராமல் அழகாக செல்கிறது கதை. ஒவோருவர் மனதில் தோன்றும் எண்ணத்தை கூட மிக அழகாக,சுவாரஸ்யமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது வரை 5 பாகங்கள் கொண்ட இந்த நாவலை 4 முறை படித்துவிட்டேன். விளையாட்டாக ஒரு முறை, மிரண்டுபோய் ஒரு முறை, ரசித்து ரசித்து ஒரு முறை என வகை வகையாக படித்தாலும் இதன் மீதுள்ள என் காதல் மட்டும் குறையவே குறையாது. நான் மட்டுமில்லை என் குடும்பமே இதன் வாசகர் தான். கதை கல்கியில் தொடராக வந்த அந்த காலத்தில் வீட்டில் உள்ள தாத்தாவோ,பாட்டியோ நாற்காலியில் நடுநாயகமாக அமர்ந்து படிக்க, அவரை சுற்றி வாண்டுகள் முதல் இளசுகள்,பெருசுகள் வரை வாராவாரம் கதைகேட்கும் என அம்மா அடிக்கடி சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். என்ன செய்ய இன்று அமர்ந்து கேட்க நேரமும் இல்லை, பொறுமையாக படித்து சொல்ல தாத்தா பாட்டியும் இல்லை. ( கதை சொல்வதே ஒரு தனி திறமை. அதை வேறொரு பதிவில் பாப்போம்)
மூன்றாம் பாகம் படிக்கும் பொழுதே "இன்னும் இரண்டு பாகம் தான்... முடியபோகிறதே என்ற எண்ணம் வந்துவிடுகிறது.நாவல் முடித்து ஒரு மாதம் அதிலிருந்து விடுபட முடியவில்லை.
கல்கி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததினாலும்,தமிழ்நாட்டில் பிறந்ததினாலும் தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது என்று பெருமை படுகிறேன். தமிழ் தெரிந்து இதை படிக்காதவர்கள் என்னவென்று சொல்ல . . . ?
இந்த நாவலை படமாகவோ,நாடகமாகவோ எடுக்க வேண்டும் என்பது கமல் உட்பட பல பேரின் ஆவல். இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. நானும் அப்படிதான் நினைத்திருந்தேன். ஆனால் கல்கியின் நடையும்,வர்ணனையும்,எண்ண கருத்துகளும் இந்த நாவலின்றி வேறெங்கும் கிடைக்காது.
எனது மதிப்பீடு : என்னது இன்னும் படிக்கவில்லையா ? படித்தே தீர வேண்டிய ஒரு பொக்கிஷம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment