முதல்வருக்கு விகடன் எழுதிய கடிதம்...
தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!
மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.
'நீ இன்றி நான் இல்லை' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ''கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்'' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்க ளுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை.
அதிருக்கட்டும்...
''போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!'' என்று கோவில்பட்டியிலும்...
''உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள் ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும் ஒரு காலத் தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான்.
சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப் பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன்.
''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல்அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு!
30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் 'தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!
Saturday, July 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment