மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக ( கடந்த இருமுறையாகப்) பணியாற்றிவரும் திரு நன்மாறன் அவர்களை எளிமையின் சின்னமாக – எவரும் பழகுதற்கு இனிய நண்பராக- ஏழை எளிய மக்கள் யாரும் எளிதில் தொடர்பு கொள்ளத்தக்க ஒரு மார்க்சிஸ்ட் தோழராக மட்டுமே வெளி உலகம் அறியும்.
அவர் ஒரு கவிஞர்.குழந்தைகளுக்குப் பாடல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்.சங்க இலக்கியங்களின்பால் அளவற்ற ஈடுபாடு கொண்டவர்.தமிழின் மீது தீராக்காதல் கொண்டவர்.
சிறுவர் முதல் பெரியவர் வரை எவரிடத்தும் மிகுந்த மரியாதையுடன் பழகுபவர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர். எளிமையும் அடக்கமும் உள்ள மனிதர் இருக்க முடியுமா என்று ஒவ்வொரு முரையும் ஆச்சரியப்படுத்துபவராகவே இருக்கிறார். வறுமை பற்றி எந்தப் பிரஸ்தாபமோ வாழ்க்கையின் மீது புகாரோ ஏதுமில்லாத மனிதராக காற்றைப்போல காலத்தின் கரைகளைக் கடந்துகொண்டிருக்கும் மனிதர் அவர்.
நேற்று அவர்மீது கொலை முயற்சி நடந்துள்ளது மதுரையில். ஒரு பூப்போன்ற மனிதரைக்கூட ஆயுதம் கொண்டு தாக்கிட எந்த ரவுடிக்கும் மனம் வருமா ?
வரும் என்று மதுரையின் அஞ்சாநெஞ்சர்கள் நேற்று காட்டியிருக்கிறார்கள்.நாம் என்னாமாதிரியான ஓர் உலகத்தில் எப்படியான இறுகிய மனிதர்களுக்கு நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது நினைக்க மனம் பாதைக்கிறது.வரும் நம் தலை முறைக்கு இப்படியான உலகத்தைத்தான் நாம் விட்டுச்செல்லப்போகிறோமா?
மதுரையில் பச்சைக்குழந்தை மாதிரியான என் மகன் அழகிரியை மார்க்சிஸ்ட்டுகள் என்ன செய்யப்போகிறார்களோ என அஞ்சுகிறேன் என்று போன வாரம் டாக்டர் கலைஞர் தமிழினத்தலைவர் செம்மொழி கொண்டான் எழுதிய கடிதம் எதற்காக என்பது இப்போது செயல்விளக்கம் பெறத்துவங்கியுளது.
அப்போதே நான் நினைத்தேன் கருணாநிதி தன் பிள்ளைப்பாசத்துக்காக இதை எழுதவில்லை.தன் கட்சித்தொண்டர்களான ( லீலாவதியைப் பட்டப்பகலில் பெண் என்றும் பாராமல் படுகொலை செய்த ) தன் உடன்பிறப்புகளை உசுப்பிவிடத்தான் இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் என்று. அது நிசமாகிவிட்டது. அழகிரி வீட்டின் மீது அவர்களே நாலு கல் எறிந்துவிட்டு ஆ மார்க்சிஸ்ட்டுகள் வன்முறை என்றும் நாடகமாடுவார்கள் என்றும் இப்போது சந்தேகப்படுகிறேன். இவையெல்லாம்தான் பாசிஸ்ட்டு நடைமுறைகள்.
இந்திராகாந்தியும் பி.ராமமூர்த்தியும் ஒரே விமானத்தில் ஒருமுறை பறக்க நேரிட்டபோது இந்திரா கேட்டாராம் ‘ எப்ப பார்த்தாலும் என் பிள்ளை சஞ்சய் காந்தியை கரிச்சுக்கொட்டறீங்களே உங்ககிட்ட இருந்து என் பிள்ளையை எப்படிக் காப்பத்த்ரதுன்னே தெரியலியே ‘ என்று .அதற்கு ராமமூர்த்தி பதில் சொன்னாராம் ‘ உங்க கவலை அப்படி இருக்கு.என் கவலை இந்தப் பிள்ளையிடமிருந்து இந்தியாவை எப்படிக் காப்பாத்தறதுன்னு இருக்கு’
இன்று தோழர் ராமமூர்த்தி இல்லை.இருந்திருந்தால் இந்தப்பிள்ளையிடமிருந்து மதுரையையும் தமிழ்நாட்டையும் எப்படிக்காப்பாத்தறதுன்னு செம்மொழி கொண்டானிடம் நேரடியாகவே கேட்டிருப்பார். அதெல்லாம் உறைக்கும் என்றா நினைக்கிறீர்கள்?
No comments:
Post a Comment