Tuesday, April 7, 2009

விவசாயத்தின் எதிர்காலம்? பாகம் 2






சிறப்புப் பொருளாதார மண்டலம் யாருக்கு சேவை செய்யும்?உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று ஒரு காலத்தில் குரல் கொடுத்தோம். இன்று உழுபவனுடைய நிலமெல்லாம் அன்னிய உள்நாட்டு பெரு முதலாளிகளின் பொருளாதார சாம்ராஜ்யங்களாக திகழ்கின்றன.


ஒரிசாவில் போஸிகே என்ற அன்னிய உருக்குக் கம்பெனி மகாநதி தீரத்தில் ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்க அனுமதித்தனர். அந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதிக்குத் தனியாக துறைமுகம் அமைத்துக் கொள்ளவும் அனுமதித்திருக்கின்றனர். வெட்கக்கேடான இந்த வேதனையை எங்கே போய் சொல்ல?


சிறப்புப் பொருளாதார, மண்டலங்கள் துணை நகரங்களை உருவாக்குதல், சிறிய வியாபாரிகள் பாதிக்ககூடிய அளவில் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, நாடு முழுவதும் சங்கிலி தொடராக அந்த நிறுவனங்கள் வானத்தைத் தொடுகின்ற வகையில் வணிக வளாகங்களை அமைக்கவும் பன்னாட்டு நிறுவனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாயிகளை மட்டும் விரட்டாமல் லட்சோப லட்சம் சிறிய வியாபாரிகளையும் கோடிக்கணக்கான ஊழியர்களையும் துரத்துகின்றது.நாட்டின் நலன் கருதி பொது மக்களின் தேவைக்காக முன்பு அவசர, அவசியமான நிலைகளில் அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது. இன்றைய மத்திய அரசு எதைப் பற்றியும் சிந்திக்காமல் 'எந்த நிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க' என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்?


இம்மாதிரி மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டு நிறுவனங்களை கூவிக்கூவி அழைக்கின்றன. பிளாட்பாமில் விலையை கூவி விற்பதைப் போல ஆட்சியாளர்கள் வாவா என்று அழைத்து நாட்டின் முதுகெழும்பான விவசாயத்தைப் படிப்படியாக பாழாக்கி வருகின்றனர்.இந்திய மண் விவசாய மண். அந்த மண் வாசனையை உலக வங்கியிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அடகு வைப்பது தாயை அடகு வைப்பதற்கு சமம். இந்தியாவின் முக்கியமான காரணிகளாக விவசாயமும் விவசாயிகளும் திகழ்கின்றனர்.
இன்றைக்கு அதற்கே சோதனை ஏற்பட்டதற்குக் காரணம் 1991லிருந்து மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்கள் தான். இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இவர்களிடம் நியாயம் கேட்க வேண்டும்


விவசாயிகளே உங்கள் நிலங்களை திமிங்கலங்களுக்கு கொடுத்துவிட்டு அவைகள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறது மத்திய அரசு. மண்டலாதிபதிகளே நீங்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கித் தருகிறோம் ஆணையிடுங்கள் என்கிறது மத்திய அரசு, இதுதான். சிறப்புப் பொருளாதார மண்டலம்.


மேற்கு வங்கத்தை போன்று மும்பைக்கு வெகு அருகில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அமையவிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு 35000 ஏக்கர்களுக்கு மேல் விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகளுக்குத் தாக்கீது வழங்கப்பட்டுள்ளது. இரண்டு போகம் விளையும் இவ்விளைநிலங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் ஹேட்டாவேன் அணை கட்டிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் வர கால்வாய் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
அரசும், அம்பானியும் இந்த நிலங்கள் தரிசு நிலங்கள் தான் என்று தலையில் அடித்து சத்தியம் செய்கின்றனர். மும்பைக்கு அருகில் உள்ள இப்பகுதியில் எல்லா வசதிகளோடும் ஒரு சாட்டிலைட் நகரம் அமைப்பது தான் ரிலையன்ஸின் திட்டம். அணைகள் கட்டுவதற்காக, மும்பை, புனே விரைவு வழிப் போக்குவரத்திற்காக என்று தங்களின் நிலத்தை இழந்த மஹாராஷ்டிர விவசாயிகள், எஞ்சிய நிலங்களையும் ஏய்த்துப் பறிக்கும் அரசின் போக்கை கண்டித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றன.


அடுத்த பாகத்தில் முடிவடையும்.

No comments: