Thursday, April 23, 2009

ஈழம்


வணக்கம்

தமிழீழம் பற்றிய எனது நிலைபாட்டை வெளி உலகிற்கு தெரிவிற்கும் பதிவிது.
நான் பிறந்தது முதல் கேட்டு,கண்டு வரும் பிரச்சனைகளில் பிரதானமானது இது. என் ஊர் தஞ்சை மாவட்டம் என்பதாலும், சிறு வயது முதல் இலங்கை வானொலியை கேட்டு வந்ததாலும், ஈழம் பற்றிய தாக்கம் அதிகமாகவே இருந்தது.

சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்ல பட்டுருக்கிறார்கள். அண்டை நாட்டின் பிரதம மந்திரி , உள்ளூர் அரசியல் தலைவர்கள் என நீண்டு கொண்டே இருக்கிறது சாவின் எண்ணிக்கை.
உண்மையில் என்ன தான் நடக்கிறது இலங்கையில்.

கடந்த பல ஆண்டுகளாக கிளிநொச்சியை தலைநகரமாகவும், முல்லைத்தீவை ராணுவ தலைமையிடமாகவும் கொண்டு, திரிகோணமலை, மாங்குளம், அக்கறைப்பட்டு, பூனகரை உள்ளிட்ட பல இடங்களில் தனி அரசாங்கம், தனி நீதிமன்றம்,தனி காவல் நிலையம் என்று தன்னாட்சி செய்து வரும் புலிகள் தான் ஆயுதம் ஏந்தி இலங்கை அரசாங்கத்துடன் போர் புரிந்து வருகின்றனர்.
இலங்கை அரசின் அறிக்கை படி 2002 இல் நாட்டின் வரைபடம் தமிழ் மக்கள் விகிதாசாரப்படி இதோ:

ஒரு பக்கம் புலிகளுடன் அரசு போர் நடத்தினால் மறு பக்கம் சர்வசாதாரணமாக கிரிக்கெட் நடக்கிறது. எங்கோ இருக்கும் நார்வே நாடு தூது குழு அனுப்பி சமாதான பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது மிக அருகில் கூப்பிடும் தூரத்தில் இருந்துக்கொண்டு இறையாண்மை எனும் போர்வையில் அமைதி காத்துவருகிறது இந்தியா. அதுவும் புத்தர் பூமியில் நடந்து வரும் இந்த இனபடுகொலைகளை காந்தி பிறந்த அஹிம்சை தேசம் வேடிக்கை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது.

தனி ஈழம்,புலிகள் தீவிரவாத இயக்கம் என யோசிக்காமல் மனித உயிர்,மனித நேயம் என பாருங்கள். ராஜீவ் காந்தி என்ற ஒரு உயிருக்காக அக்னி பார்வை வீசிக்கொண்டிருக்கும் இந்தியா பல லட்சம் அப்பாவி உயிர்கள் பலி யாவதை சரி என்கிறதா? அதற்காக ராஜீவ் விவகாரத்தை நியாய படுத்தவில்லை, ராஜீவ் உயிரும் 10 மாத குழந்தையின் உயிரும் ஒன்று தான் என்பதே என் கருத்து. கொல்லப்படுவது யாராய் இருந்தால் என்ன ? மனித உயிர் . . . ?

பள்ளி வகுப்பறையில் படிக்க வேண்டிய 12 வயது சிறுவன், பதுங்கு குழிகளில் பயத்துடன் ஒளிந்து கொண்டிருக்கிறான். 10 மாத குழந்தையின் தாலாட்டே வானில் பறக்கும் விமான சத்தம் தான். சொந்த மண்ணிலேயே அகதிகளாக குடிபெயரும் இவர்களது உயிர்களுக்கு உத்திரவாதம் தர வேண்டிய அரசே எமனாக இருக்கிறது.

தமிழ்நாடு,தமிழீழம்,தமிழ் மக்கள்,தமிழ் உயிர் என அணுகாமல் மனித உயிர் என யோசித்து பாருங்கள். ஆனால் தமிழக அரசியல் வாதிகள் இந்த விஷயத்தை மிக கேவலமாக கையாளுகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. கடந்த இருபது ஆண்டுகளாக எத்தனை அறிக்கைகள், எத்தனை உண்ணாவிரதங்கள், எத்தனை பொதுகுழு தீர்மானங்கள், எத்தனை கண்டனங்கள் ,எத்தனை தந்திகள், எத்தனை கடிதங்கள்,எத்தனை ராஜினாமா அறிவுப்புகள், எத்தனை உர்வலங்கள், எத்தனை மனிதசங்கிளிகள், எத்தனை வேலை நிறுத்தங்கள் ?
விளைவு ?
சின்ன துரும்பை அசைக்க முடிந்ததா ?
ஒரு சின்ன உதாரணம் இலங்கையில் நடந்து வரும் இனபடுகொலைகளை தடுக்க இந்த அரசு அயராது பாடுபடும், தேவை பட்டால் பதவிகளை தூக்கி எறிய தயங்க மாட்டோம் என்று 1990 இல் தி.மு.க பொதுகுழுவில் போடப்பட்ட அதே தீர்மானம் வெறும் சொற்களை மட்டும் மாற்றி 2009 இல் மீண்டும் நிறைவேற்றி உள்ளார்கள்.தி.மு.க மட்டுமல்லாமல் அண்ணா.தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்து அரசியல் கட்சிகளும் உண்மையான உணர்வோடு போராடுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விகுறி.

பிராணிகளை காக்க கூட BlueCross என சங்கம் வைத்து பாராட்டும் உலகம், மரங்களை அழிப்பதே குற்றம் என சட்டம் வைத்து போற்றும் உலகம், எப்படி இந்த GENOCIDE எனப்படும் இனப்படுகொலையை உள்வாங்கி கொள்கிறது என்பதே தெரியவில்லை.

வேலுப்பிள்ளை பிரபாகரனாகட்டும்,மஹிந்தா ராஜபக்சே ஆகட்டும் அனைவரும் மனிதர்களே.இருப்பதோ ஒரு உயிர்,ஒரு வாழ்கை. அனைவருக்கும் அமைதியாக வாழும் ஆசை எப்போதும் உண்டு. ஆனால்...
விதி விட்ட வழி...


தீர்வு...?

தமிழகத்தில் இருந்துகொண்டு மிக எளிதாக அறிக்கையோ,கண்டனங்களையோ தெரிவித்துவிடலாம். அல்லது இன்னும் சொகுசாக அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு blog என்னும் பெயரில் கொடூரமான சாவையும் photo வாக போடலாம்.
ஆனால்... பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மக்களே. அவர்களுக்கு தான் தெரியும் எது சரி எது தவறு என்று.
அவர்கள் விருப்பப்படி என்ன இருந்தாலும் அதை செயல்முறை படுத்துவதே மிகச்சிறந்த தீர்வாகும். தனி ஈழம் விரும்ப பட்டால் இலங்கை பிரிவது தவிர்க்க முடியாத ஒன்று. அதை முன்னின்று செயல் முறை படுத்துவது உலக நாடுகளின் தலையாய கடமை.
அதே நேரம் போதுமான ஆதரவு கிடைக்காமல் போகும் பட்சத்தில் புலிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் முயற்சியில் இலங்கை அரசிற்கு உலக நாடுகள் பக்கபலமாக இருக்க வேண்டும்.

பி.கு:
மனதை அறுக்கும் புகைப்படங்கள் பல மின்னஞ்சல் மூலமாகவும், வலைபூ மூலமாகவும் பார்த்து பார்த்து மரத்து போய் இருப்பதால்,அவற்றை இங்கு தவிர்த்திருக்கிறேன்.

No comments: