Tuesday, April 7, 2009

விவசாயத்தின் எதிர்காலம்? பாகம் 1


விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்துவிட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையில் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.


1993, 94ல் 25 சதவீதமாக இருந்த வேளாண்மை உற்பத்தி 2005, 2006ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல் 2001, 02ல் 76.89 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2004, 05ல் 61.40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.


ஏன் இந்த அவல நிலை என்று பார்த்தால் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் போன்ற பல காரணங்கள் நம் முன் தெரிகின்றன. விவசாய நிலங்களை அரசு எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆர்ஜிதம் செய்யலாம் என்ற சட்டங்கள் விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.


ஆனால் மத்திய மாநில அரசுகள் ஏர் இந்தியா மகாராஜா சின்னத்தை போன்று கையைக் கட்டிக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து உனக்கு என்ன தேவை? அதை செய்ய காத்திருக்கிறேன் என்ற நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவும், நம் நாட்டு விவசாயிகள் செத்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் நடந்து கொள்கின்றன.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:

விண்ணப்பம் பெறப்பட்ட 237 மண்டலங்களில் 148 வரை ஏற்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானவை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களாகும். புதிய தகவல் தொழில்நுட்ப பிரிவுகள், சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பத்தாண்டுகளுக்கு வரிச்சலுகை பெறலாம்.சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள் பறைசாற்றப்பட்டதிலிருந்து ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஏற்பளிப்பு அளிக்கப்படும் என்று "கொள்கையளவில்" ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதானது. சட்டம் இயற்றப்படும் சமயத்தில் அரசு தெரிவித்த கருத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


இதனால் பல ஆபத்தான எதிர்விளைவுகள் ஏற்படும்.சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான உச்சவரம்பை உயர்த்தியதை நியாயப்படுத்துவதற்கு, மேலும் ஒரு காரணத்தைக் கூறி இருக்கிறது அரசு. சந்தை சக்திகள் அவற்றின் போக்கிற்கு ஏற்ப இயங்கிட வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு உச்ச வரம்பை நிர்ணயிப்பது, ஒரு விதமான "உரிமை ராஜ்ஜியம்" உருவாவதற்கே வழிவகுக்கும்.


எனவே தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு உச்சவரம்பு எதுவும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வர்த்தகத் துறை கருதுகிறது (தற்பொழுது இதில் மாற்றம் செய்ய அரசு எண்ணியுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது) என்று அரசின் குறிப்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தாக முடியும். சந்தை சக்திகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அளவினைத் தீர்மானிக்க அனுமதி அளித்தால் நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.


தொடரும்...

No comments: