வழக்கமான புலம்பல்
எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியெனப் பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய
தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
'இந்தியா ஒளிர்கிறது' என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோஷம்தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்...
'கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?
சரியான பதிலடி...
எல்லோரும்
வருமான மாமிசம் தின்கிறவர்களே..!
ஆனால், அதை மாலையாய்த் தோளில் போட்டு
தேசத்தை வீச்சச் செய்தது நீங்கள் மட்டுமே
ஜே.கே.ரித்தீஷூக்கே செலவழிக்கக் கற்றுத் தந்தவர்கள்
நீங்களாகவே இருக்கக்கூடும்.
தவறு கணினி மொழி கற்றதல்ல
நண்பனே...
'கசிந்த கண்' உடன்பிறப்புகளின்
'காய்ந்த வயிற்று' பெற்றோரின்
கசங்கல் நிமிர்த்தாத தன் முனைப்பே.
வாங்கிய வருமானத்தைக்கொண்டு
வாடகைகளை ஏற்றினீர்கள்.
ஒண்டுக்குடித்தனங்கள்
வாகனங்கள் குறைந்த
சாலைகளில் வாழ வந்தன.
மனை விலை உயர்த்தினீர்கள்
பிணம் வைத்து அழவும் வீடின்றி
நடுத்தரச் சுமை தாங்கிகளுக்கு
நாக்குத் தள்ளி நாடி குறைந்தது
'என்ன விலை அழகே'
உங்களின் விருப்பப் பாடலானபோது
'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்'
எங்களுக்கே எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டது.
கணினிகளைக் கையாண்ட கன்னிகளையே
கணினிகளாய்க் கையாண்டும்
அதை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் இறுமாந்த
கலாசாரக் காவலர்கள்
நீங்கள் அன்றி வேறு எவர்..?
வரி போகிறதே என்று உங்களுக்கும்
உயிர்போய் விடக் கூடாதே என்று
எங்களுக்கும் கவலைகள் மாறுபட்டன.
உங்களைப் பற்றி
சினிமா எடுத்தோம்
பத்திரிகைகளில் எழுதினோம்
நிஜம்தான்,
வளர்ச்சிகளே வாழ்த்தப்படும்
வீக்கங்கள் எப்போதும்
விமர்சிக்கத்தானே படும் நண்பனே..?
உதிர்ந்த பிட்டைக் கூட
இந்த சொக்கர்களுக்குத் தராத
நீங்கள் பற்றிச் சண்டை போடக் கூட
எங்களிடம் சட்டை இல்லையே
யாது செய்வோம் நண்பனே..?
போகட்டும் நண்பனே...
மன்னிக்கத் தெரிந்ததால் தமிழனாய் இருப்பவர்கள்
வீதிக்கு வந்த உங்களுக்காக
பழைய சோற்றிலும்
பச்சை மிளகாயிலும் பாதி தருவோம்.
பாவி நண்பா!
பர்கருக்கும் பீட்ஸாவுக்கும் எங்கே போவோம்?
பெற்றவர்கள் இருப்பதை
பெரும்பாலும் மறந்தவர்களே...
நினைவிருக்கட்டும்,
உங்களின் கணினி யுகத்தில்
முற்பகல் செய்யின் முற்பகலே விளையும்.
பிற்பகலிலாவது
உலகத்தின் மேல் பிரியமாயிருங்கள்!
நன்றி :செல்வேந்திரன்,பி.ஜி.கதிரவன்
கரு : விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment