Thursday, October 29, 2009

குடியரசுத் தலைவர்

ஆண்டாண்டு காலமாக இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு - குடியரசுத் தலைவர் என்னும் பொம்மை பதவி தேவை இல்லை என்பது. அதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் சமீப காலமாக எனக்கும் அது சரி தானோ என்றே எண்ண தோன்றுகிறது. காரணம் தேவை இல்லாத ஆடம்பரங்கள் , தேவை இல்லாத செலவினங்கள்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், கவலைப்படாமல் அயல்நாட்டு சுற்றுலாவிற்கு கிளம்பி விடுகிறார் நாட்டின் முதல் குடிமகன். பொதுமக்களின் வரிபணத்தை செலவு செய்வதற்கு ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பாங்களோ...

ஒரு பக்கம் புயல் வெள்ளம் மறு பக்கம் வறட்சி என காலநிலை மாற்றம், அமைச்சரின் SPECTRUM ஊழல், ரயிலையே கடத்தும் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம், பாகிஸ்தான் சீனா இலங்கை என அண்டை நாடுகளின் நிலையற்ற உறவு, தீவிரவாத அச்சுறுத்தல், வேலையின்மை, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என நாட்டின் பிரச்சனைகள் நீண்டு கொண்டே போகும்.

கடந்த ஓராண்டில் பிரதீபா படேல் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் கீழே :

October 26 to October 29, 2009 - The President's visit to United Kingdom

September 06 to September 08, 2009 - The President's visit to Tajikistan

September 02 to September 06, 2009 - The President's visit to Russia

April 23 to April 27, 2009 - The President's visit to Poland

April 20 to April 23, 2009 - The President's visit to Spain

November 29 to December 01, 2008 - The President's visit to Indonesia

November 24 to November 28, 2008 - The President's visit to Vietnam

November 05 to November 08, 2008 - The President's visit to Bhutan

April 20 to April 25, 2008 - The President's visit to Chile

April 16 to April 20, 2008 - The President's visit to Mexico

April 12 to April 16, 2008 - The President's visit to Brazil

இந்த செலவில் பாதியை குறைத்திருந்தால் கூட எத்தனை பள்ளிகள் கட்டியிருக்கலாம், எத்தனை மருத்துவ மனைகள் உருவாக்கி இருக்கலாம், எத்தனை விவசாயிகளின் தற்கொலையை தவிர்த்திருக்கலாம், எத்தனை குழந்தை தொழிலாளர்களின் வாழ்கையை காப்பாற்றி இருக்கலாம்... இன்னமும் ஒரு ரூபாய் அரிசியை வாங்க ரேஷனில் கால் கடுக்க வரிசையில் நிற்கும் மக்கள் எத்தனை கோடி...

இதையெல்லாம் உணர்வாரா ஜனாதிபதி...?
ஊர் சுற்றி திரிவதை நிறுத்துமா பாட்டி...?

Monday, October 26, 2009

தூங்கும் கருணாநிதி

பருவமழை காலதாமதம் ஆவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற முதல்வர் கருணாநிதி போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவது வழக்கம். ஐப்பசி மாதம் என்றாலே அடைமழை பெய்யும் என்ற நிலைமை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் கடைசி வாரம் ஆகியும் இதுவரை பருவ மழை தொடங்கவில்லை.


மேட்டூர் அணையின் நீர் இருப்பும் நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 77 அடியாக இருந்தது. அதாவது, 39 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,500 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த டெல்டா பாசனப் பகுதியில் சுமார் 13 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 10 சதவீத நடவுப் பணிகள் மீதம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரம் வரை நீர் தேவைப்படுகிறது. ஆனால் இப்போதைய மேட்டூர் நீர் இருப்பைக் கொண்டு இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும். அதையும்கூட இப்போது நிலவுகிற வறட்சியால் அனைத்துப் பகுதி வயல்களுக்கும் சீராக வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே. எனவே பருவமழை பெய்தால் மட்டுமே நெல் வயல்களைக் காப்பாற்ற முடியும் என்ற அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பருவமழையை எதிர்பார்த்து இன்னமும் காலதாமதம் செய்யாமல், பொதுப்பணித் துறையையும் கவனிக்கும் முதல்வர் கருணாநிதி உடனடியாக இப்பிரச்னையில் தலையிட வேண்டும்; கர்நாடக அரசிடம் பேசி கூடுதல் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கர்நாடக அணைகளில் மொத்த கொள்ளளவில் இப்போது 92 சதவீத நீர் இருப்பு உள்ளது. எனினும் ஜூலை முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 159.38 டி.எம்.சி. தண்ணீரில் பெரும்பகுதியை கர்நாடகம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. இன்னும் 3 டி.எம்.சி. மட்டுமே பாக்கி உள்ளது.

கடந்த 2001 முதல் 2004 வரை நிலவிய கடும் வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகின. இதனால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் 2005-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வறட்சியின் பாதிப்பு இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டைப் பொருத்த வரை இதுவரை நெல் சாகுபடி சிறப்பாக உள்ளது. வயல்கள் பசுமையாக, செழிப்பாக உள்ளன. ஆனால் இந்த நிலை தொடருமா? என்பது முதல்வர் கருணாநிதி மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்தே உள்ளது என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

வரும் முன் காப்பதே சிறந்தது ---

இதை விட்டு விட்டு எல்லாம் முடிந்த பின் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் என மத்திய அரசிடம் கெஞ்சி கூத்தாடி நிதி ஒதுக்கி, அதில் அமைச்சர் முதல் MLA,MP,மாவட்டம்,வட்டம்,கிராம அலுவலர்,கட்சி நிர்வாகி,கட்சி உறுப்பினர் வரை கமிஷன் அடித்து கடைசியில் பொறை துண்டு போல் கொஞ்சமாக விவசாயிக்கு நிவாரணம் என அத்தனையும் செய்ய தயாராகிறது தமிழக அரசு.

பாருங்கள் இன்னும் என்னென்ன நடக்க போகிறதென்று...

Wednesday, October 21, 2009

உலகம் எதை நோக்கி...?

உலகம் முழுவதும் தினமும் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கை, அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவில்லை என்றால், மிகவும் மோசமான பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு - வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் (United Nation's The Food and Agriculture Organization and the World Food Program) அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "2009-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை 1.02 பில்லியன் (100 கோடிக்கும் மேல்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 40 ஆண்டுகளில் உச்சபட்ச அவல நிலை," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள 20 நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 30 நாடுகளில் அவசரகால உதவிகள் தேவைப்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளிலும் ஊட்டக் குறைவு காரணமாக ஒரு குழந்தை மரணத்தைத் தழுவுகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவிக்கும் ஐ.நா., "இந்த அபாய நிலையை உணர்ந்து, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் ஆகியவை இணைந்து உலக அளவில் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என்று அறிவுறுத்துகிறது.

சோமாலியாவில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே கொடுக்கக் கூடிய அவலத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.

கென்யாவில் விலங்குகள் அழிவதாலும், வேளாண்மை பாதிப்புக்குள்ளானதாலும் 30 லட்ச மக்களுக்கு அவசரகால உணவு தேவைப்படுகிறது.

வேளாண் உற்பத்தியின் வீழ்ச்சி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுடன் உலகப் பொருளாதார நெருக்கடியும் இணைந்து சதிராட்டம் ஆடியாதால், 2009-ல் 100 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியால் அவதியுறும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் 62 கோடியே 20 லட்சம் மக்கள் அன்றாடம் பட்டினியால் வாடி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக இருக்கிறது.

இந்த அவலநிலைக்குத் தீர்வாக இருவழிப் பாதை அணுகுமுறையை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைக்கிறது...

"திடீர் உணவுப் பஞ்சத்தால் ஏற்படும் பட்டினிப் பிரச்னையை தீர்ப்பதற்கு குறுகிய கால நடவடிக்கையாக பணத்தை செலவிடுவதோடு மட்டுமின்றி, உணவு உற்பத்தியைக் கூட்டும் வகையில் வேளாண் துறையில் நீண்ட கால முதலீடுகளுக்கு வழிவகுக்க வேண்டும்," என்பதே அந்த அணுகுமுறை. உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் வேளாண் துறையில் மிகுதியான அளவில் முதலீட்டை ஒதுக்கினால் மட்டுமே, எதிர்வரும் காலத்தில் பட்டினி அவலத்தைக் களைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு ஒரு வேலை உணவு கூட நம்மால் அளிக்க இயல வில்லை என்றால், உலகம் எதை நோக்கி செல்கிறது என்று சற்றே யோசியுங்கள். மிக பெரிய வன்முறைக்கு இது அடிகோலிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி...