Wednesday, October 21, 2009

தீபாவளி SPECIAL

குடியிற் சிறந்த தமிழகம் என்ற பட்டப் பெயர் சூட்டாததுதான் பாக்கி. இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை அத்தனை ஜோராக இருந்துள்ளது!

தீபாவளி தினதத்தன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.200 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடந்தது. இது போன தீபாவளியைவிட 25 சதவிகிதத்துக்கும் மேல் என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த தீபாவளி வாரக் கடைசி நாளில் அமைந்து விட்டதால், பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பிருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடிப்பிரியர்களுக்குப் பிடித்தமான அத்தனை ஐட்டங்களும் கடைகளில் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததால், ஒவ்வொரு கடையிலும் விற்பனை அமோகமாக இருந்தது.

ஆனால் அப்படியும் வெளியூர்களில் பல கடைகளில் குறிப்பிட்ட சில வகை சரக்குகள் மட்டுமே இருந்ததால் 'குடி'மக்கள் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானாலும், வேறு வழியின்றி 'இருப்பதைக் கொடுப்பா' என்று வாங்கிக் குடித்துள்ளனர்.

தீபாவளி தினத்தன்று (17-ந் தேதி, சனிக்கிழமை) காலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் பெரும் கூட்டம் வரிசை கட்டி நின்றது. 'பழக்கத்துக்காக' எப்போதாவது குடிப்பவர்கள் கூட்டம் அன்று பெருமளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு பத்துமணிக்கு மேலாகியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையாம்.

இதனால் விற்பனையின் அளவு முந்தைய தீபாவளிகளை மிஞ்சும் விதத்தில் இருந்துள்ளது. பெரும்பாலான புறநகர் மற்றும் கிராமப்புற டாஸ்மாக் கடைகளில் கூட 2 மடங்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது இந்த தீபாவளியன்று மட்டும்.

15 கேஸ்கள் மது விற்பனையாகும் கடைகளில் 25-க்கும் மேற்பட்ட கேஸ்கள் விற்பனை ஆகி பெரும் 'சாதனை' நிகழ்ந்துள்ளது. இதனால் ரூ.40 ஆயிரத்துக்கு மது விற்பனை ஆகும் கடைகளில், தீபாவளியன்று மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. சில கடைகளில் ரூ. 2 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

நகர்ப்புறங்களில் கேட்கவே வேண்டாம்... ரேஷன் கடை க்யூ மாதிரி கூட்டம் அலைமோதியது.

விற்பனை பற்றிய கணக்கை சரிபார்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அதுபற்றி அறிவிக்கப்படும் என்றும், உண்மையான கலெக்ஷன் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மது விலக்கை அறிமுக படுத்திய மகாத்மா வாழ்ந்த நாடும் இது தான்,
கள்ளை ஒழிக்க தன்னிடமிருந்த ஏக்கர் கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் வாழ்ந்த நாடும் இது தான்,
இன்று 2009 தீபாவளி அன்று விற்பனையில் சாதனை புரிந்திருக்கும் நாடும் இதுவே தான்.

No comments: