Tuesday, June 23, 2009

உதவுங்கள் நண்பர்களே

நான் என் வலைப்பூவை தொடங்கி 5 மாதங்கள் ஓடி விட்டன. சமூக அவலங்களை உங்களுக்கு தெரிவிப்பதுடன்,எனது கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பதிவுகள் பற்றிய மாற்று கருத்து இருந்தால் வரவேற்கிறேன் முழுமனதாக.

வெறும் எழுத்திலேயே ஓட்ட நினைக்காமல் செயலில் இறங்க ஆசைபடுகிறேன். நண்பர் மூலமாக என் கவனத்திற்கு வந்த 'குமுதம் கட்டுரை' ஒன்றை உங்களுக்கு அப்படியே தருகிறேன்...

குமுதம் ஜூன் 10,2009


உயிர் வாழத் துடிக்கும் இதயம்


மரணத்தைவிட அதைப் பற்றிய பயம் கொடியது.அதுவும் இளம்-வயதில் அப்படியொரு பயம், வாழ்க்கையையே சூனியமாக்கிவிடும். அந்த சூனியத்தின் நிழல் ராஜேஷின் முகமெல்லாம் படர்ந்திருக்க, மௌன-மாகவே இருக்கிறான்.

ஆனால், அவனின் இதயம் துடிக்கும் சப்தம் மட்டும், உலையில் சோறு கொதிப்பதைப்போல் எதிரில் இருக்கும் நமக்கும் கேட்கிறது. சந்தேகப்பட்டு அவன் சட்டை பட்டனை விலக்கினோம்...


ஒவ்வொரு துடிப்புக்கும் விலா எலும்புகளை துருத்திக்கொண்டு ராஜேஷின் இதயம் வெளிவராத குறையாக, `உதவி... உதவி...' என்று தவிப்பதைப் பார்த்ததும், அவன் கண்கைளக்கூட பார்க்க சக்தியற்று கவிழ்ந்துகொண்டோம்.


``இரவில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க அவன் இதயத்துடிப்பைக் கேட்டு தூங்காமல் நான் அழுத இரவுகள் பல'' என அவன் அம்மா லெட்சுமி சொல்ல, தன் மகனுக்கு நேர்ந்த சோகத்தை விளக்கினார் அப்பா பாஸ்கரன்... கூலிக்கு மீன் பிடிக்கச் செல்லும் சாதாரண மீனவர். ராஜேஷைத் தவிர்த்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு...

``சுனாமி வந்த 26.12.2004 எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அப்பொழுது காசிமேடு சுடுகாட்டுக்கு எதிரில் உள்ள திடீர் நகரில் குடியிருந்தோம்...

கடற்கரையெங்கும் கற்பாறைகள் உயர்ந்து நிற்க, அதனை ஒட்டியிருந்த 516 வீடுகளில் நானூறை அடித்துச் சென்றது சுனாமி.என் இரண்டு பெண் குழந்தைகளை நானும் மனைவியும் தூக்கிக்கொள்ள, மூத்தவன் ராஜேஷை `கரையை நோக்கி ஓடு' என்றேன். அவசரத்தில் பாறையில் தடுமாறி விழுந்த அவனை என் கண் முன்னே நூற்றுக்கணக்கானோர் ஏறி மிதித்துச் சென்றனர். அலை ஓய்ந்து நான் அவனைத் தேடிய போது ஒரு பாறையில் குப்புற விழுந்து மயங்கிக் கிடந்தான்...

பிள்ளை கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்தில் இரண்டு நாள்தான் இருந்திருப்பேன். அதற்குப் பின் அவன் இதயம் நெஞ்சில் துருத்திக்கொண்டு காதில் கேட்கும் சத்தத்துடன் படபடத்தபொழுது பயந்து போனேன்....


பல டாக்டர்கள் பார்த்த பிறகு இதயத்தில் இரத்தம் தவறான பாதையில் வெளியேறுகிறது. தடுப்பதற்கு ஆபரேஷன் செய்ய இரண்டு லட்சம் ஆகும் என்றார்கள். அவ்வளவு பணத்திற்கு வழியில்லாமல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய டெபுடி கலெக்டர் பிரபாகரனைச் சந்தித்து உதவி கேட்டேன். அவரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஆபரேஷன் செய்ய உதவி செய்தார். அதற்குப்பின் தினமும் நூறு இருநூறு செலவு செய்து ஆட்டோவில் என் மகனையும் அழைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் மாதக் கணக்கில் அலைந்தேன். சிகிச்சைக்கு முழுப்பணமும் தருவதாக அவர்கள் சொன்னதை முழுமையாக நம்பினேன். ஆனால், பிரபாகரன் மாற்றலாகிச் செல்ல அந்தத் தொண்டு நிறுவனமும் எங்களைக் கைவிட்டுவிட்டது.


`இந்த ஏழை அப்பாவால் என்ன செய்யமுடியும்?' என்ற சந்தேகம் மகனுக்கும் வந்துவிட்டதோ என்னவோ? எப்பொழுதும் அமைதியாக தனிமையில் இருக்கிறான். எப்பொழுதாவது ஆர்வத்தில் பிள்ளைகளுடன் ஓடி விளையாடினால் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறான். அதன்பின் அவன் கண்திறந்து பார்க்கும் வரை எங்களுக்கு உயிர் போய் வருகிறது'' என்று அப்பா கண்ணீர்விட, பெற்றவர்களின் துயரத்தைப் பார்த்து, அழுவதா அமைதியாக இருப்பதா என்று தெரியாமல், நம்மையே ஏக்கத்துடன் பார்த்தனர் ராஜேஷின் தங்கைகள். இருவரின் பார்வையும், நம்மிடம் ஏதோ உதவியை எதிர்பார்க்கின்றன என்பதை மட்டும் உணர முடிந்தது...


`ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான்' என்று நாமும் மனதிற்குள் நினைத்ததைச் சொல்ல வார்த்தை வராமல் விடை பெற்றோம்..


மண்ணில் பிறந்த அனைவரும் நல்லவர்களே , உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் யாருக்கு, யார் மூலமாக என்பதே அனைவருக்கும் மிகப்பெரிய சந்தேகம்.


No comments: