Monday, October 26, 2009

தூங்கும் கருணாநிதி

பருவமழை காலதாமதம் ஆவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற முதல்வர் கருணாநிதி போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவது வழக்கம். ஐப்பசி மாதம் என்றாலே அடைமழை பெய்யும் என்ற நிலைமை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் கடைசி வாரம் ஆகியும் இதுவரை பருவ மழை தொடங்கவில்லை.


மேட்டூர் அணையின் நீர் இருப்பும் நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 77 அடியாக இருந்தது. அதாவது, 39 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,500 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த டெல்டா பாசனப் பகுதியில் சுமார் 13 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 10 சதவீத நடவுப் பணிகள் மீதம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரம் வரை நீர் தேவைப்படுகிறது. ஆனால் இப்போதைய மேட்டூர் நீர் இருப்பைக் கொண்டு இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும். அதையும்கூட இப்போது நிலவுகிற வறட்சியால் அனைத்துப் பகுதி வயல்களுக்கும் சீராக வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே. எனவே பருவமழை பெய்தால் மட்டுமே நெல் வயல்களைக் காப்பாற்ற முடியும் என்ற அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பருவமழையை எதிர்பார்த்து இன்னமும் காலதாமதம் செய்யாமல், பொதுப்பணித் துறையையும் கவனிக்கும் முதல்வர் கருணாநிதி உடனடியாக இப்பிரச்னையில் தலையிட வேண்டும்; கர்நாடக அரசிடம் பேசி கூடுதல் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கர்நாடக அணைகளில் மொத்த கொள்ளளவில் இப்போது 92 சதவீத நீர் இருப்பு உள்ளது. எனினும் ஜூலை முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 159.38 டி.எம்.சி. தண்ணீரில் பெரும்பகுதியை கர்நாடகம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. இன்னும் 3 டி.எம்.சி. மட்டுமே பாக்கி உள்ளது.

கடந்த 2001 முதல் 2004 வரை நிலவிய கடும் வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகின. இதனால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் 2005-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வறட்சியின் பாதிப்பு இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டைப் பொருத்த வரை இதுவரை நெல் சாகுபடி சிறப்பாக உள்ளது. வயல்கள் பசுமையாக, செழிப்பாக உள்ளன. ஆனால் இந்த நிலை தொடருமா? என்பது முதல்வர் கருணாநிதி மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்தே உள்ளது என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

வரும் முன் காப்பதே சிறந்தது ---

இதை விட்டு விட்டு எல்லாம் முடிந்த பின் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் என மத்திய அரசிடம் கெஞ்சி கூத்தாடி நிதி ஒதுக்கி, அதில் அமைச்சர் முதல் MLA,MP,மாவட்டம்,வட்டம்,கிராம அலுவலர்,கட்சி நிர்வாகி,கட்சி உறுப்பினர் வரை கமிஷன் அடித்து கடைசியில் பொறை துண்டு போல் கொஞ்சமாக விவசாயிக்கு நிவாரணம் என அத்தனையும் செய்ய தயாராகிறது தமிழக அரசு.

பாருங்கள் இன்னும் என்னென்ன நடக்க போகிறதென்று...

No comments: