Tuesday, October 6, 2009

பாதிப்பைக் குறைத்திருக்கலாம்

ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சுமார் 400 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 4 லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். கர்நாடகத்தில் 600 முகாம்களில் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்த இயலாத இந்த இயற்கைப் பேரிடர் எதிர்பாராதது. ஆனாலும், இதில் மாநில அரசுகள், மிகக் குறிப்பாக ஆந்திர அரசு, கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டிருந்தால் இந்த இழப்பைப் பாதியாகக் குறைத்திருக்க முடியும். ஏனென்றால், இரு மாநிலங்களிலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பெரும்பாலானவை கிருஷ்ணா நதி, துங்கபத்ரா நதிகளின் கரையோரப் பகுதிகளே.

பலத்த மழையின் தீவிரத்தையும் அதைத் தொடர்ந்து வரப்போகும் வெள்ளத்தையும் முன்னதாகவே உணர்ந்து, அணைகளை 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே திறந்து, இருக்கும் நீரை வெளியேற்றி காலியாக வைத்திருந்தால், வரும் வெள்ளத்தை எதிர்கொள்ளவும், சீராக வெளியேற்றவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். சேதத்தைப் பாதியாகக் குறைத்திருக்க முடியும்.


துங்கபத்ரா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்து, மந்திராலயம் ராகவேந்திர மடம் மூழ்கி, கோசாலையில் அனைத்துப் பசுக்களும் இறந்தன என்ற செய்தி ஆந்திர மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஓடியபோதுதான், ஆந்திர அரசு பதறுகிறது, செயல்படுகிறது. ""கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைக் குறையுங்கள், இங்கே நாகார்ஜுனசாகர் அணை ததும்பி வழிகிறது'' என்று கர்நாடக அரசிடம் ஆந்திரம் கெஞ்சுகிறது. ஆனால் இதை
எப்படிக் கடைசி நிமிடத்தில் செய்ய முடியும்? கர்நாடகம் தனது அணையிலிருந்து வெளியேற்றாமல் இருந்தால் அவர்கள் அணைக்குத்தான் ஆபத்து!

மாநிலங்களைக் கடந்து ஓடும் ஒரு நதியின் வழித்தடத்தில் பல அணைகள் கட்டப்படுகின்றன. அதற்கு நாள்தோறும் வரும் நீர்வரத்து, அதன் துணைநதிகளின் நீர்வரத்து, ஒவ்வோர் அணையிலும் வினாடிக்கு எத்தனை கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது, நீர் இருப்பு எத்தனை கனஅடி என்கிற தகவல்களை எல்லா அணைகளின் அதிகாரிகளும் தினமும் கண்காணித்து, மழைவெள்ளம் எந்த அளவுக்கு வரலாம் என்பதைக் கணித்து நதியின் கீழ்அணைகளில் உள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்வது அவர்களது கடமை.

இவ்வாறு செயல்பட்டிருந்தால், 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே, நாகார்ஜுனசாகர் அணையின் மதகுகளை அதிகமாகத் திறந்து, இருந்த நீரை வெளியேற்றிவிட்டு அணையை காலி செய்திருப்பார்கள். வரப்போகும் உபரி நீரைச் சமாளிக்கும் பணி செவ்வனே நடைபெற்றிருக்கும்.

ஆனால், ஆந்திர அரசின் அதிகாரிகள் இதில் அதிக அக்கறை கொள்ளவில்லை. வெள்ளம் மிகப்பெரும் அளவில் வரத்தொடங்கியபோதுதான், நாகார்ஜுனசாகர் அணையின் மதகுகளை 48 அடி உயரத்துக்கு முழுமையாக-அது கட்டப்பட்டு முதல்முறையாக இவ்வாறு-உயர்த்தி நீரை வெளியேற்றினர்.

அணைகள் கட்டப்பட்ட பிறகு, வழக்கமான நீர் இல்லாமல் மேடுற்ற நதி, இவ்வளவு அபரிமிதமான வெள்ளநீரைச் சமாளிக்கும் திடீர் திறன்பெற முடியாததால், வெள்ளம் இரு கரைகளையும் மீறி ஓடியது. கரையோர நகரங்கள், கிராமங்களை மூழ்கடித்தது.

"இது எங்கள் அணை, இதன் கொள்திறன் இவ்வளவு' என்று குறுகிய பார்வை இல்லாமல், மாநில உணர்வுகளைக் கடந்து, இது நதியின் மீதுள்ள அணைகளில் ஒன்று என்ற பொதுப்பார்வை இருக்குமானால், இத்தகைய இயற்கையின் பேரிடர்களை பாதியாகக் குறைக்கும் சக்தி மனிதருக்கும் ஏற்படும்.

நடந்து முடிந்த தவறுகளை இனி அடுத்த வெள்ள காலத்தில்தான் திருத்திக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்தான் தலையாய கடமை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கர்நாடக, ஆந்திர மக்கள் என்று சும்மா இருக்காமல், தமிழகம்கூட தனது உதவிக்கரத்தை உடனடியாக நீட்ட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அரிசி, மருத்துவ உதவி அளிப்பதில் தாமாகவே முன்வந்து செய்ய வேண்டும்.

இது அண்டை வீட்டுச் சோகம்தானே, நமக்கென்ன என்று நம் வீட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு சும்மா இருந்தால், நம் வீட்டுச் சோகத்தில் அவர்களும் அதேபோலத்தான் இருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்!

No comments: