உலகம் முழுவதும் தினமும் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கை, அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவில்லை என்றால், மிகவும் மோசமான பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு - வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் (United Nation's The Food and Agriculture Organization and the World Food Program) அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "2009-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை 1.02 பில்லியன் (100 கோடிக்கும் மேல்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 40 ஆண்டுகளில் உச்சபட்ச அவல நிலை," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள 20 நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 30 நாடுகளில் அவசரகால உதவிகள் தேவைப்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளிலும் ஊட்டக் குறைவு காரணமாக ஒரு குழந்தை மரணத்தைத் தழுவுகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவிக்கும் ஐ.நா., "இந்த அபாய நிலையை உணர்ந்து, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் ஆகியவை இணைந்து உலக அளவில் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என்று அறிவுறுத்துகிறது.
சோமாலியாவில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே கொடுக்கக் கூடிய அவலத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.
கென்யாவில் விலங்குகள் அழிவதாலும், வேளாண்மை பாதிப்புக்குள்ளானதாலும் 30 லட்ச மக்களுக்கு அவசரகால உணவு தேவைப்படுகிறது.
வேளாண் உற்பத்தியின் வீழ்ச்சி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுடன் உலகப் பொருளாதார நெருக்கடியும் இணைந்து சதிராட்டம் ஆடியாதால், 2009-ல் 100 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியால் அவதியுறும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் 62 கோடியே 20 லட்சம் மக்கள் அன்றாடம் பட்டினியால் வாடி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக இருக்கிறது.
இந்த அவலநிலைக்குத் தீர்வாக இருவழிப் பாதை அணுகுமுறையை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைக்கிறது...
"திடீர் உணவுப் பஞ்சத்தால் ஏற்படும் பட்டினிப் பிரச்னையை தீர்ப்பதற்கு குறுகிய கால நடவடிக்கையாக பணத்தை செலவிடுவதோடு மட்டுமின்றி, உணவு உற்பத்தியைக் கூட்டும் வகையில் வேளாண் துறையில் நீண்ட கால முதலீடுகளுக்கு வழிவகுக்க வேண்டும்," என்பதே அந்த அணுகுமுறை. உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் வேளாண் துறையில் மிகுதியான அளவில் முதலீட்டை ஒதுக்கினால் மட்டுமே, எதிர்வரும் காலத்தில் பட்டினி அவலத்தைக் களைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அடுத்த தலைமுறைக்கு ஒரு வேலை உணவு கூட நம்மால் அளிக்க இயல வில்லை என்றால், உலகம் எதை நோக்கி செல்கிறது என்று சற்றே யோசியுங்கள். மிக பெரிய வன்முறைக்கு இது அடிகோலிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி...
Wednesday, October 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment