சமீபத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை மரணக் காடாக மாற்றிப் போட்டிருக்கிறது பிரளயமாகப் பெய்த மழை. ஆனால், தமிழ்நாட்டில்? ஏற்கெனவே, தென்மேற்குப் பருவமழை கண்ணாமூச்சி போல பொய்த்து விட்டுப் போய்விட்டது; வடமேற்குப் பருவ மழையாவது வருமா என்பதுதான் மாபெரும் கேள்வி!
அதே சமயம், தென்மேற்குப் பருவமழை எதிர்பாராத நேரத்தில் திண்டுக்கல், கரூர், மதுரை போன்ற பகுதிகளில் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களை சரியாக வஞ்சித்துவிட்டது.
அது மட்டுமா? ஜூலை மாத வாக்கில் கோடை வெப்பம் தணிந்து, குளிர் காற்று வீசி... வருடா வருடம் நிலவும் இதமான சூழலையும் இப்போது காணவில்லை! அக்டோபர் மாதத்தில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் கொளுத்துகிறது!
எப்படி நிகழ்கிறது இந்த இடறல்கள்?
பூமியின் வெப்பம் கூடிக்கொண்டே வருவதுதான் மிக முக்கியக் காரணம்! அது பற்றி பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்துவிட்ட நிலையில், பருவநிலை மாற்றங்களைப் பற்றிய கவலை கூடியிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆடம்பரமும், படாடோபமும், எரிபொருள் பயன்பாடும் சூழல் மாற்றங்களைச் சுண்டிவிட்டன. அதற்கு ஒரு பாவமும் அறியாத ஆப்பிரிக்க நாடுகளும் பலியாவதுதான் கொடுமை!
மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் மிகுந்த புவி வெப்பமாதலினால் பாதிப்புக்குள்ளாகிறது. அதை விரிவாகச் சுட்டிக் காட்டலாம்...
*கடந்த 1990-லிருந்து பத்தாண்டுகள் மிக வெப்பமான ஆண்டாகவும் 1998-ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டது.
*ஐக்கிய நாடுகளின் குழும அறிக்கை, இமயமலையின் பனிக்கட்டிகள் உருகத்தொடங்கி உள்ளது எனவும், 2035-ம் ஆண்டுக்குள் அவை மறைந்துவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவிக்கிறது.
*கடல் மட்டம் 40 சென்டிமீட்டர் வரை உயரலாம். அதனால் 50 மில்லியன் மக்கள் வீடுகளை இழக்க நேரிட லாம்.
*தண்ணீர் பற்றாக்குறையால் 50 கோடி மக்கள் பாதிப் படையலாம்.
*குளிர்கால மழையளவு இந்திய துணைக்கண்டத்தில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
*அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 30 சதவிகித உணவு உற்பத்தி குறையலாம்.
*உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம்.
ஆக, சுருக்கமாக கூறினால் இந்தியர்கள் பல கோணங்களில் பாதிப்படையலாம்!
என்ன செய்யலாம்...
உலக நாடுகள் அறிவியல் நுட்பத்தினால் தட்பவெப்ப மாற்றத்தைக் குறைக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு தனி மனிதனும் தன் அன்றாட வாழ்வின் பழக்கவழக்கங்கள் மூலம் 'புவி வெப்பமடைதல்'-ஐக் குறைக்கப் பல்வேறு செயல்களைச் செய்யலாம்.
நம் அன்றாட வாழ்க்கையில் சூழலுக்கு உகந்த செயல்களைச் செய்வதால் ஆற்றல் வளங்களைக் காக்க உதவ முடியும். நடவடிக்கைகளை முறைப்படுத்துவது, குறைவான நுகர்வு, புலால் உண்ணாமை, நடைபயணங்கள், வளங்களை வீணாக்காமை ஆகியவை சிறந்த தட்பவெப்ப மாற்றத்தைக் குறைக்க உதவும்.
பி.கு:
இந்தியாவை ஒட்டிய அரபிக் கடல் நீரின் மேற்புற வெப்பத்தில் விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடருமானால் எதிர்வரும் வருடங்களில் பருவமழை குறைந்து கொண்டே போய், இன்னும் 150 ஆண்டுகளில் தென்மேற்குப் பருவக்காற்றே வராது என்று ஒரு அபாய அறிவிப்பு சமீபத்தில் வந்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் தட்ப வெப்ப மாற்றங்களும், நீரோட்டத் திசை மாற்றங்களும் எல் நிரோ என்ற பருவநிலைத் திருப்பத்தை உருவாக்குவதும் சிக்கலான விஷயம்.
தென்மேற்குப் பருவ மழை பொய்த்துவிட்டால் வடகிழக்குப் பருவக்காற்றாவது வழக்கம்போல் வீசுமா... மழை பொழியுமா என்பதுதான் இப்போதைய தமிழக மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு. அதோடு, தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரமே அதன் மூலம்தான் என்பதால் அச்சமும் கூடியுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் தோன்றுவதைப் பொறுத்தும், அது தீவிரமடைவதைப் பொறுத்தும் தான் பெய்யும் மழையின் அளவும், திசையும் நிகழும் என்பதால் எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலை.
No comments:
Post a Comment