நம் பாரதத் திருநாட்டில், ஏழைகளுக்காக உழைக்கும் இந்த மக்கள் சேவகர்களின் சில திருவிளையாடல்களைப் பாருங்கள்.
கொள்கையே இல்லாத வெளியுறவுத் துறைக்கு இரண்டு மந்திரிகள். ஒருவர் கேபினட் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா. தினம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் இல்லாத கொள்கையைப் பற்றி 'ரூம்' போட்டு யோசிக்கிறார்.
இன்னொருவர் இணையமைச்சர் சசிதரூர். இவர்தான், விமானத்தில் சாதாரண வகுப்பை, 'மாட்டுத் தொழுவம்' என்று வர்ணித்தவர். இவரும் தன் பங்குக்கு தினம் 40,000 ரூபாய் செலவில் ரூம் போட்டு தன் 'சிந்தனாசக்தி'யைப் பட்டைத் தீட்டி, நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்பவர்.
'சீனா தலையில் குட்டுகிறது. இலங்கை காலை வாருகிறது. பாகிஸ்தான், பர்மா இரண்டும் பக்கத்துக்கு ஒன்றாக இடிக்கிறது. நட்பு நாடான நேபாளம்கூட இப்போது 'நோ' சொல்லி விட்டது. ஆனால், இது எதைப் பற்றி- யும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய வெளியுறவுத் துறையும், மத்திய அரசும் மவுனச் சாமியார்களாக இருக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலம், விதர்பாவில், விவசாயிகள் கடன் பிரச்னையால், கொத்துக் கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருப்பதை யாரும் மறந்து விட முடியாது. அங்கு 80% விவசாயிகள் கட்டமுடியாமல் போன அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு தெரியுமா? சொன்னால் நம்ப முடியாது. ஒவ்வொருவருக்கும் வெறும் 50,000 ரூபாய்தான். அதாவது, பாரதத் திருநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவின் அரைநாள் அறை வாடகை.
தனிவிமானத்திலும், ஹெலிகாப்டர்களிலும் மட்டுமே பறந்து வழக்கப்பட்டவர்களுக்கு, வறட்சி திடீரென்று ஞானக் கண்களைத் திறந்து விட்டிருக்கிறது. மாட்டு வண்டிகளிலும் ரயிலிலும் பயணம் செய்து செலவைக் குறைப்பதாக, செய்திகள் கசிகின்றன. விமானத்தில் சென்றால்கூட, ஒருவரோடு செலவு முடிந்து விடும்.
ரயிலில் போனால்... 10-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் புடைசூழ, அக்கம்பக்க பயணிகள் அடிவயிற்றில் அக்னியைச் சுமக்க, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவலர்கள் கெடுபிடியில் சிக்கி பயணிகள் தவிக்க, ஏழை இளவரசர் ராகுல் பயணம் செய்தாராம். சமீபத்தில், தமிழகத்தில் ராகுல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆன செலவு 1 கோடியைத் தாண்டுமாம். கேட்டால்... சிக்கன நடவடிக்கை...
விமானப் பயணத்தையே, 'மாட்டுத் தொழுவம்' என்று பரிகாசம் செய்யும் கதர் கண்மணிகளே! தமிழ்நாட்டில் ஒரு முறை பஸ்சில் பயணம் செய்து பாருங்கள்... செம்மறி ஆட்டுத் தொழுவத்தைவிட கேவலமாக இருக்கிறது. மூன்று பேர் அமரும் இருக்கையில், முக்கால் மனிதன் சீட்டுக்கு வெளியில்தான் தொங்க வேண்டும்.
முன்பதிவு இல்லாத ரயில் பயணமோ, நரகத்தில் இருப்பதைவிட கொடுமையானது. 72 பேர் பயணம் செய்ய வேண்டிய பெட்டியில், இருநூறுக்கும் அதிகமானவர்களைச் செம்மறி ஆடுகளைப் போல அடைக்க வேண்டியிருக்கிறது. கழிவறையிலும் கால் வைத்து நிற்க இடமில்லாமல், பயணம் செய்யும் மக்களுக்காகத்தான், தினம் ஒரு லட்சம் செலவில் ரூம் போட்டு யோசிக்கிறார்கள், நமது பாரததேசத்தின் அமைச்சர் பெருமக்கள்...
ஊழலும் ஊதாரித்தனமும், நமது அரசியல்வாதிகளின் உடன் பிறப்புக்கள். கோடிகோடியாக கருப்புப் பணம் சுவிஸ் வங்கியிலும் இந்திய நிலச் சந்தையிலும் புதைந்து கிடக்கிறது.
இந்தக் கொடூர நாடகமாடிகளின் கூத்துக்களை எண்ணிப் பார்க்கும்போது, யாரோ ஒரு கவிஞன் எழுதிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.
'நான்முகனே...
மீண்டும்
என்னை
இந்தியாவில்
பிறக்க வைக்க நினைத்தால்...
இரைப்பை இல்லாமல்
பிறக்க வைக்கவும்!'
2 comments:
ஸ்ரீராம். முடிந்தால் உங்கள் ஈமெயில் ஐ.டி யை எனக்குத் தெரிவியுங்கள். :)
--வித்யா
gsram83@gmail.com
Post a Comment