Thursday, September 10, 2009

வர்த்தக இந்தியா

வறுமையை ஒழிக்க, வர்த்தகம்'

-இதை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் உலகப் பொருளாதாரத் திலகம் பிரதமர் மன்மோகன் சிங்.

'வீட்டை விற்றாலும் பரவாயில்லை, நாட்டை விற்றாலும் பரவாயில்லை, வியாபாரம் ஒன்றுதான் நாட்டின் செல்வத்தைப் பெருக்க ஒரே வழி' என்று திடமாக நம்புகிறார் மன்மோகன் சிங். அதற்கு சரியாக வால் பிடித்துச் செல்கின்றனர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகிய இருவரும்.


பொருளாதார முடக்கம் நீங்க வேண்டுமானால், சுதந்திரமான, கட்டுப்பாடுகள் அற்ற வர்த்தகம் ஒன்றுதான் வழி' என்ற அமெரிக்காவின் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக, உலக வர்த்தக அமைப்பு நாடுகளின் (கீஜிளி) 35 வர்த்தக மந்திரிகளை டெல்லிக்கு அழைத்து, கடந்த வாரத்தில் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா. இதையடுத்து, வருகிற 14-ம் தேதி ஜெனீவாவில் கூடி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, எப்படியாவது விவசாயத்தை, கட்டுப்பாடுகளற்ற காளையாகத் திரியும் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்த்துவிடுவது என்கிற ஒரு வரி அஜெண்டாவோடு தீவிரமாக சுழன்று வருகிறது இந்திய அரசு.

இந்தியாவின் 63-ம் சுதந்திர தினத்தன்று, ஆந்திராவில் 13 விவசாயிகளும், விதர்பாவில் 6 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகள் வீடு, நிலங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர். கடந்த மாதம் மட்டும் மத்திய பிரதேசம் ஜான்சி ரயில் நிலையம் வாயிலாக 1.5 லட்சம் விவசாயிகள் வெளியேறியதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் இப்போதே இந்த நிலை. அப்படியிருக்கும்போது விவசாயத்தை உலக வர்த்தகத்தில் சேர்த்தால், விவசாயிகளின் நிலைமை என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அதனால்தான், ‘உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து விவசாயத்துக்கு விலக்கு அறிவியுங்கள்' என்று நீண்ட காலமாகவே உலகம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் பேராடி வருகின்றன.

இப்போதுகூட டெல்லியில் வர்த்தக அமைச்சர் மாநாடு நடந்தபோது, இந்தியா முழுக்கவிருந்து லட்சக்கணக்கில் விவசாயிகளை டெல்லிக்கு கூட்டி வந்து அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் யூத்வீர் சிங். ஆனால், அமெரிக்கா என்ன சொக்குப் பொடி போட்டதோ தெரியவில்லை, எதையும் கண்டு கொள்கிற நிலையில் இல்லை இந்தியா.

அமெரிக்கா யானை... படுத்தாலும் குதிரை மட்டம்தான். ஆனால், இந்தியா..? புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட கதையாகத்தான் முடியப்போகிறது.

-பசுமை கட்டுரை

No comments: