Tuesday, September 1, 2009

அறிஞர் அண்ணா ஒரு சகாப்தம்

1937 ம ஆண்டு ராஜாஜி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அண்ணாவின் பேச்சைக் கேட்டவர், அண்ணாவை காங்கிரசில் சேர்த்துக் கொண்டால் நல்லது என்று நினைத்தார். ஆனால் முதுகலைப் பட்டம் பெற்ற அண்ணா பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, ஜஸ்டிஸ் கட்சியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தது தெரிய வந்தது. அவருடைய பேச்சு மற்றும் எழுத்துத் திறமையால் மிக குறுகிய காலத்தில் திராவிட கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக முன்னேறினார். "திராவிட நாடு" என்ற பத்திரிக்கையை 1942ம் ஆண்டு தொடங்கினார்.

சமூக அக்கறையுள்ள கதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள் எழுதினார். சமூக நீதி மற்றும் ஏழைகளின் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்பதில் பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தது. மிக சாதுர்யமாக எந்தவிதமான அடிப்படைக் கொள்கைகள் பொருட்டு இல்லாமல், பெரியார் எழுவது வயதில் திருமணம் செய்து கொண்டதை காரணம் காட்டி, திராவிட முன்னேற்றக் கழகம்(தி.மு.க) என்ற கட்சியை தொடங்கி அதன் பொதுச் செயலாளர் ஆனார். அவருடன் தி.க வில் இருந்து பெரிய பட்டாளமே அவருடன் வெளியேறியது. தேர்தலில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியாக தி.மு.க வை அண்ணா முன்னிறுத்தியதால், பலவிதமான சமாதானங்களைச் செய்து கொள்ள வேண்டிய தாகியது. "அரசியல் என்பது முடிந்தவற்றைச் செயல் படுத்தும் ஒரு கலை" என்று அண்ணா நன்கு அறிந்து இருந்தார்.

கடவுள் எதிர்ப்பு என்பது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற அறைகூவலில் திசை மாறியது. பல நூற்றாண்டுகளாக கடவுள் நம்பிக்கையில் ஊறிய சமூகத்தில், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற முழக்கம் அண்ணாவின் மக்களுடனான நெருக்கத்தை அதிகப் படுத்தியது. "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்ற தனி நாடு என்ற கோரிக்கை 1963ம் ஆண்டு நடந்த தி.மு.க மாநாட்டில் கைவிடப் பட்டது. இதை "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்ற சிந்தாந்தத்தின் மூலமாக மாநிலத்திற்கு அதிக அதிகாரம் பெறும் முயற்சியாக அண்ணா மாற்றினார்.

காங்கிரஸ் எதிர்ப்பு, தி.மு.க வின் கொள்கை பரப்புதலுக்கு இடையே கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து வந்தார். இங்கு 1952ம ஆண்டு தேர்தலில் கம்யூனிஸ்டுகள் அதிக இடங்கள் பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து மே தினம், பொருளாதார சமநிலை முதலியவற்றை பெற்று பொங்கல் திருநாள் தான் தமிழர்களுக்கு மே தினம் என்றும், சமதர்ம பூங்கா என்பதே லட்சியம் என்றும் அழகாக மாற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றதால் கம்யூனிஸ்டுகள் வளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டார். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதை சரியான முறையில் கையாளாத காங்கிரஸ் அரசு, பண வீக்கம், தி.மு.க வின் இடைவிடாத பிரச்சாரம், கம்யூனிஸ்டுகள் மற்றும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனான கூட்டு, தி.மு.க விற்கு 1967ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று தந்தது.

பெரியார் அண்ணாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் "கூத்தாடிகள்" என்று கடுமையாக எதிர்த்து வந்தாலும், அண்ணா தி.மு.க பெற்ற வெற்றியை அவருக்கு சமர்பிப்பதாக கூறியதோடு மட்டுமிலாமல், அவரிடம் திருச்சிக்கு சென்று ஆசிர்வாதமும் வாங்கி வந்தார். மேலும் பக்தவத்சலம் மற்றும் காமராஜரையும் சென்று பார்த்தது தமிழ் நாட்டு அரசியல் நாகரீகத்தின் உச்ச கட்ட நிகழ்ச்சி என்றால் மிகையாகது.

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளானஅவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.


ஒரு முதல்வராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு அரசியல்வாதியாகவும் மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுக விலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய MGRஅவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அ.தி.மு.க) கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார் என்பது வரலாறு.

அண்ணாவின் எதிர்பாராத மறைவு, அதற்குப் பிறகு தி.மு.கா வில் ஏற்பட்ட பதவிச் சண்டை, பேராசை எண்ணங்கள் தம்பிகளின் பத்திரிக்கை மற்றும் இலக்கிய முயற்சிகளில் இருந்த ஈடுபாட்டை திசை திருப்பியது. ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை சினிமா ஆக்கிரமித்துக் கொண்டது. ஆட்சியாளர்களும் சினிமா பிண்ணணியில் இருந்து வந்ததால், அதற்கான முக்கியத்துவம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முதன்மை இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது. தொலைக் காட்சிகளின் வரவு அதனை மேலும் அதிகரித்தது. சினிமா என்ற பொழுது போக்கு அம்சமாக இருக்க வேண்டிய ஒன்று, தமிழ் சமூகத்தின் முக்கிய அம்சமாக மாறியது தமிழனின் தலை எழுத்து என்பதை விட வேறு ஒன்றும் சொல்வதிற் கில்லை.

அண்ணாவால் பெருமையாக மொழியப்பட்ட "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" அவரது தம்பிகளால்(தங்கைகளும் தான்) பதவி ஆசை, ஊழல், பேராசை, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று இன்று மாற்றப்பட்ட இழி நிலையை நினைக்கும் போது, மனதிற்கு மிகவும் வேதனையாகவும், வருத்தமாகவும் உள்ளது.

No comments: