Thursday, September 10, 2009

இறுதி எச்சரிக்கை

'இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 23% குறைவாக பெய்துள்ளது. இதற்கு காரணம், அரபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகரித்ததுதான். நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பத்தின் வேறுபாடு அதிகமாக இருந்தால்தான், கடலில் இருந்து வீசும் காற்றை, தரைப் பகுதி வெப்பம் ஈர்த்து மழை பெய்யச் செய்யும். ஆனால், குளோபல் வாமிங் காரணமாக நிலப்பரப்பைப் போலவே, கடல் பரப்பிலும் வெப்பம் அதிகரித்து வருவதால்' நிலைமை சிக்கலாகிக் கொண்டிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள் புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள்.

இத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. 'இந்த நிலை நீடித்தால்... இந்தியாவில், 150 ஆண்டுகளுக்குப் பிறகு தென்மேற்கு பருவ மழை என்பதே இருக்காது' என்றும் அதிர்ச்சி கிளப்பியுள்ளனர்.

இதை இறுதி எச்சரிக்கை என்று சொல்வதே சரியாக இருக்கும்!

ஆம், பல ஆண்டுகளாவே, குளோபல் வாமிங் பற்றி எச்சரித்துக் கொண்டுதான் உள்ளனர் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் ஆர்வலர்களும். இதற்காகவே உலகளாவிய அமைப்புகளும்கூட உருவாக்கப்பட்டு அடிக்கடி மாநாடுகள் கூட்டப்படுகின்றன. ஆனால், அங்கு எடுக்கப்படும் முடிவுகள் எல்லாமே 'ஏட்டுச் சுரைக்காய்' என்பதாக கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

சூழலைப் பற்றி கவனம் கொள்ளாமல் பூமிக்கு கேடு விளைவிக்கும் வேலைகளை மனித இனம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. தேவைக்கு மிஞ்சிய வகையில் வாகனப் பெருக்கம்; கட்டுப்பாடில்லாத தொழில் வளர்ச்சி; தாறுமாறான காடு அழிப்பு என்று ஒவ்வொரு செயலுமே, நுனிமரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டும் மூடனின் வேலையாக தொடரும்போது... இயற்கை தன் கோபத்தைக் காட்டாமல் என்ன செய்யும்?

தயவு செய்து இப்பொழுதாவது விழித்துக்கொண்டு , பூமித் தாய்க்கு பசுமைக் குடை பிடிக்கும் வேலையை ஆரம்பிப்போம்.

இல்லாவிட்டால்...?!

சம்போ சிவசம்போ...

1 comment:

Naresh Kumar said...

இறுதி எச்சரிக்கை .....நாம் வரும் காலத்திற்கு என்ன பதில் சொல்லபோகிறோம் !!