Wednesday, November 3, 2010

இந்தியா ஊழல்...

1,39,652,00,00,000.

ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?

இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.

தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.

தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.

பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். அதுவும் செய்யவில்லை.

அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும். செய்ய வில்லை.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும். அதற்கும் பதில் இல்லை.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.

இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.

ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன;

மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பார்த்து கொண்டிருக்கிறோம், பார்த்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க இந்தியா...

Thursday, October 14, 2010

சிலி என்னும் நாடு

கனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்!

இந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை.

ஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக் கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று.
அதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு.

இதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர்.

வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான்.

நெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.

இன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன? ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான்.

சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

Thursday, September 30, 2010

அயோத்தி - ஒரு நிஜ பார்வை...

தலைநகர் தில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். இது 7-ம் நூற்றாண்டில் பல கோயில்களை உள்ளடக்கி கோயில் நகரமாக இருந்தது என்று சீனத் துறவி யுவான் சுவாங் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார். அங்கு ராமர் கோயில் இருந்ததாக 12-ம் நூற்றாண்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1527: மொகலாய மன்னர் பாபர் இந்தியா மீது படையெடுத்தார். அவர் பல ஹிந்து மன்னர்களை வெற்றிகண்டார். தான் வெற்றிகண்ட பகுதிகளில் ஆட்சிபுரிய ஜெனரல் மீர் பாகியை வைஸ்ராயாக நியமித்தார். மீர் பாகி அயோத்திக்கு 1528-ல் வருகை தந்தார். சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் பாபரின் பெயரை அந்த மசூதிக்கு சூட்டினார்.

1853: சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த நேரத்தில் சீதா ரசோய் (சமையல் கூடம்), ராம் சபூத்ரா (வேள்விக் கூடம்) கட்டப்பட்டன.

1855 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்தி வந்துள்ளதாக பிரிட்டிஷ் காலனி ஆட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

1859: ராமஜென்ம பூமியில் ஹிந்துக்கள் வழிபட தனி இடமும், முஸ்லிம்கள் வழிபட தனி இடமும் ஒதுக்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்பி வலை அமைத்தனர்.

1936-ம் ஆண்டுக்குப் பின் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவில்லை என்று ஹிந்துக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1949 டிசம்பர் 22: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அந்த இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்ற படி ஏறினர். அப்போது சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு வளாகத்துக்கு பூட்டுப் போடப்பட்டது.

1950: கோபால் சிங் விஷாரத் மற்றும் மஹந்த் பரமஹம்ச ராமச்சந்திர தாஸ் ஆகிய இருவரும் ராமர் சிலையை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று ஃபைஸôபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது உள்பகுதி பூட்டப்பட்டது. ஆனால் வளாகத்தில் பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டது.

1959: நிர்மோஹி அகடா என்ற ஹிந்து அமைப்பினர் மற்றும் மஹந்த் ரகுநாத் ஆகியோர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய தாங்கள்தான் உரிமை உள்ளவர்கள் என்று அவர்கள் கோரினர்.

1961-ல் சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதிக்கு உரிமை கொண்டாடியதோடு அதனைச் சுற்றியுள்ள இடம் சமாதி என்று கூறியது.

1986: ஃபைஸôபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹரிசங்கர் துபே என்பவர் தொடர்ந்த வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த பிப்ரவரி 1-ல் அனுமதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூட்டுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து முஸ்லிம்கள் சார்பில் பாபர் மசூதி நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.

1989: நவம்பர் 9-ம் தேதி ராமர் கோயில் கட்ட பூமி பூஜைக்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுமதியளித்தார். இதே ஆண்டில் மசூதியை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி வி.எச்.பி. முன்னாள் துணைத் தலைவர் நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் வழக்குத் தொடர்ந்தார்.

2002: சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதா என ஆய்வு செய்யுமாறு தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது.

2010: இந்த பெஞ்ச் தனது விசாரணையை கடந்த 2 வாரங்களுக்கு முன் நிறைவு செய்து செப்டம்பர் 24-ல் தீர்ப்பு என்று அறிவித்தது. ஆனால் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
இந்தத் தடை உத்தரவை செப்டம்பர் 28-ம் தேதி விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தீர்ப்பு :

அயோத்தி உரிமை தொடர்பான நான்கு வழக்குகளில் நீதிபதி அகவர்வால், எஸ்.யு.கான் மற்றும் டி.வி.ஷர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகளின் தீர்ப்பும் தனித்தனியே வெளியிடப்பட்டன.

அதன் முக்கிய அம்சங்களாவன:
* சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் பிரித்துக்கொள்ள வேண்டும்.
* சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மையே என்று இரண்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
* சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். (1/3 என்ற விகிதம்)
* மூன்றாக பிரிக்கப்படும் நிலத்தின் ஒரு பகுதி - நிர்மோகி அகாரா அமைப்புக்கும், இரண்டாவது பகுதி - பாபர் மசூதி கமிட்டிக்கும், மூன்றாவது பகுதி - இந்து மகா சபைக்கும் பிரித்து வழங்கப்பட வேண்டும்.
* நிலத்தை பிரிக்கும் நடவடிக்கை, மூன்று மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும்.
* அவ்வாறு, மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதை நிலை தொடர வேண்டும்.
* சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரிய இந்து மகா சபை மற்றும் சன்னி வஃபு வாரியத்தின் மனுக்கள் தள்ளுபடி.
* 1949 டிசம்பர் 22-ல் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை அகற்றப்படக் கூடாது.
* சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம், இரண்டு சமூகத்துக்குமே சொந்தம் என்றார், நீதிபதி எஸ்.யு.கான்.

Thursday, September 23, 2010

உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்... இந்த வாக்கியத்தை பல இடங்களில், பல முறை, பல பேர்களின் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் நான் எனது வலை பூவில் இப்படியொரு இக்கட்டான நிலையில் 'உறுப்பு தானம்' என்னும் மிக சிறந்த மனிதாபிமானத்தை தெரிய படுத்துகிறேன்.

அருள்பிரகாஷ் என்னும் நண்பனின் மாமா திரு.கே.பாலச்சந்தர் சாலை விபத்து ஒன்றில் மிக பலமாக காயமடைந்தார்.தீவிர பரிசோதனைக்கு பிறகு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்து, உயிர் பிழைப்பது கடினம் என்றும், ஓரிரு நாட்களில் இறந்து விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்து, avarin இருதயம், நுரையீரல், கண்கள், சிறு நீரகங்கள் உயிருக்கு போராடும் சிலருக்கு பொறுத்தப்பட்டது.
பாராட்டப்பட வேண்டியவர் அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே...
மிக அவசரமாக இந்த செய்தியை தெரியபடுத்துவதால், உறுப்பு தானம் பற்றிய அறிய விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் சேகரித்து தருகிறேன்...

Monday, September 6, 2010

அவனும் அவளும்

அவன்
சிணுங்கும் அலைபேசியை

செல்லமாய் எடுத்தனைக்க

யாரோ ஏதோ எதற்கோ பேச

தாமரை இலை தழுவும் நீராய்

ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக

அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்

அமிர்தச் சுவை தேடி அள்ளி

காது மடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தை

அடடே, உனக்கு வந்திடுச்சா

மாத்தி பண்ணிட்டேனா”துடிதுடிக்கத்

துண்டிக்கிறாய் இணைப்பை

கூடவே நம்பிக்கை நரம்பையும்

அவள்

சிணுங்கும் இதயத்தை செல்லமாய் தட்டி

அமைதிப்படுத்தி நின்று, நிதானமிழந்து

உன் எண் ஒத்திஏதோ இணைப்பில் இருக்கும்

உன்னை தொடமுடியாமல் துவண்டு

இன்னொரு முயற்சியில் இணையும் இணைப்பில்

காது மடலோடுஇனிக்கும் உன் குரல்தேட

பதட்டத்தில் உதடு உதறி

பொய் உதிர்கிறது ”அடடே, உனக்கு வந்திடுச்சா,

மாத்தி பண்ணிட்டேனா” துவண்டு துண்டிக்கிறேன்

இணைப்பை தோல்வி வலையில் இறுக பிணைந்தபடி

---- ஈரோடு கதிர் -----

Tuesday, July 27, 2010

இந்தியா...


நமது இந்தியா நிலநடுக்கோட்டிற்கு வடக்கில் ஆசியக்கண்டத்தில் தென்பகுதியில் அமைந்துள்ளது.
உலக நிலப்பரப்பில் 2.5 சதவிகிதம் கொண்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 16 % பெற்றுள்ளது.
நம் நாடு உலகில் உள்ள எல்லா நாடுகளுடன் வணிகதொடர்பிர்க்கும்,கடல்போக்குவரதிர்க்கும் எளிமையாக உள்ளது.
நம் நாடு ப்விப்பரப்பின் அடிப்டையில் ஏழாவது இடத்தில உள்ளது.
இந்தியாவின் மோதப்ப்பரப்பு 3.3 கி.மீ ஆகும்.


உலகில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நமது இரும்பு பாதையின் மண்டலங்கள்...
1.மத்திய இரயில்வே மண்டலம் =மும்பை

2.கிழக்கு இரயில்வே மண்டலம் =கொல்கத்தா

3.வடக்கு இரயில்வே மண்டலம் =புதுடெல்லி

4.தென்னக இரயில்வே மண்டலம் =சென்னை

5.வடகிழக்கு இரயில்வே மண்டலம்=கோரக்பூர்

6.தென்மத்திய இரயில்வே மண்டலம் =செகந்திராபாத்

7.வடகிழக்கு எல்லைப்பகுதி இரயில்வே மண்டலம் =மாளிகான்

8.தென்கிழக்கு இரயில்வே மண்டலம் =கொல்கத்தா

9.மேற்கு இரயில்வே மண்டலம் =மும்பாயில் உள்ள சர்க்கேட்


இந்தியாவின்
சிறப்புகள் :

*முதன் முதலில் என் முறையை கண்டு பிடித்தது. ஆரியப்பட்டாதான் பூஜியத்தை கண்டு பிடித்தார்.

*உலகின் மதல் பல்கலைக்கழகமான தக்க்ஷிமுகி கி.மு.700 ம் ஆண்டில் நிறுவப்பட்டது.10,500க்கும் அதிகமான் மாணவர்கள் உலகெங்கிலுமிருந்து வந்து 60க்கும் மேற்ப்பட்ட கலைகளை கற்றனர். நாலந்தா பல்கலைக்கழகம் கி.மு 4 ம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றது.சமஸ்கிருதம் எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய் மொழியாக விளங்கியது.

*17 ம் நூற்றாண்டில் வெள்ளைக்கார காலனியாதிக்கம் ஏற்ப்படும் வரை இந்தியா செல்வம் கொழிக்கும் நாடாகவே இருந்துள்ளது.

*சிந்து நதியில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்வழிப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.

*பாஸ்கராச்சார்யா பூமி சூரியனச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடித்தார்.5 ம் நூற்றாண்டிலேயே பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகும் என கண்டுபிடிக்கப்பட்டது.

*கணிதத்தில் "பையின்" மதிப்பை கண்டறிந்தவர் "புத்தயனார்" என்பவர் ஆவார்.மேலும் அல்ஜீப்ரா,ஜியோமேதி,கால்குலஸ் ஆகியவை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.

*அமெரிக்காவின் இயற்கைத் தாக்கங்கள் பற்றி ஆராயும் நிறுவணன் 1896 ஆம் ஆண்டு வரை இந்தியாதான் வைரத்திற்கு ஆதாரமாக விளங்கியுள்ளது என்று கூறியுள்ளது.(ஆனால் அவையெல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை).மேலும் அந்நிறுவனம் கம்பியில்லாத போக்குவரத்தை மார்கொனிக்கு முன்னரே "ஜகதீச்போஸ்" தான் கண்டுபிடித்தார் என நிரூபித்துள்ளது.

*சதுரங்க விளையாட்டு இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப்பற்றி மற்ற நாட்டவர் கூற்று :

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்:"நாம் இந்தியாவுக்கு கடமைப் பட்டிருக்கிறோம்".எவ்வாறு எண்ணுவது என்பதை கண்டறிந்தவர்கள் அவர்கள்.அவ்வாறு கண்டுபிடிக்காவிட்டால் எந்தவித ஆய்வியல் கண்டுபிடிப்பும் இல்லாமல் போயிருக்கும்.

மார்க் தைவான்: இந்திய மனித இனத்தின் தொட்டில்,மனிதப் பேச்சின் பிறப்பிடம்,சரித்திரத்தின் தாயகம்,நினைவுச்சின்னங்களின் மூதாட்டி,பாரம்பரியத்துக்கு முன்னோடி,மேலும் மனித வரலாற்றின் விலைமதிக்கமுடியாத சுவடுகள் இந்தியாவில்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பிரஞ்சு கல்வியாளர் ரொமைன்ரோலன்ட்: உலகில் ஓரிடத்தில் மனிதர்களின் கனவெல்லாம் நினைவானது என்றால் அது நிச்சயமாக இந்தியாவாகத்தான் இருந்திருக்கும்.

சில கசப்பான உண்மைகள் :

1. 2050-இல் மக்கள்தொகையில் உலகின் #1 நாடு - இந்தியா (161.38 கோடி, அப்போது சீனா வெறும் 141.7 கோடி)

2. உத்திரப்ரதேசத்தின் மக்கள் தொகை = பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் - 18.5 கோடி. (பிரேசில் இந்தியாவைவிட நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடு)

3. மகாராஷ்டிராவின் மக்கள் தொகை = மேக்சிகோ நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் (10.4 கோடி)

4. பீகாரின் மக்கள் தொகை = ஜெர்மனி நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் (8.3 கோடி)

5. மனிதவள மேம்பாட்டில் இந்தியாவின் இடம் = 134

6. Indian's ranking in Global Hunger Index = 65

7. சுகாதாரம் - இந்தியாவின் இடம் = 114

8. Indian's rank on Gender equality = 113

9. மாசுக்கட்டுபாட்டில் இந்தியாவுக்கான இடம் = 123

10. ஊழல் - இந்தியாவின் இடம் = 8


இறுதியாக கண்ணுக்கு எதிரே நடை பெரும் இன படுகொலைகளை, இறையாண்மை என்ற பெயரில் தட்டி கேட்க வக்கில்லாத நாடு...

Saturday, July 24, 2010

ஒரு ஆற்றின் கதறல்...


இரு மருங்கிலும்
கெண்டைகள் விளையாட
துள்ளி குதித்து
சிரித்து கொண்டிருந்த காலம்
இப்போது என் கனவுகளில்

பிறந்ததில் இருந்தே
கொடுத்தே பழக்கப்பட்ட நான்
எடுத்தே பழக்கபட்ட மனிதர்கள்
சந்தோசமாக உதவினேன்
பயன்படுத்தப்பட்டேன்

மனிதர்களின் புத்தியில்
வழக்கமான கோணல்கள்
என் கரையோர மரங்கள் வெட்டபட்டன
என் தண்ணீர் மாசுபடுத்தபட்டது

என் ரத்தம் அசுத்தமானது.
என் சேமிக்கும் பெட்டகங்கள்
கொள்ளை போயின

மணல் லாரிகளிலும்
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றன
தண்ணீரல்ல...
என் கண்ணீர்

களைத்தும்
கலைந்தும் நான்
மெல்ல முனகியபடி...

என்னுள் எலும்புகள் தெரிகிறது
தயவு செய்து அதையும் டெண்டர்
விட்டு விடாதீர்கள்
என் பாறைகளாவது மிஞ்சட்டும்...

உங்கள் நாளைய தலைமுறைக்கு
ஓர் ஆற்றின் கதை (கதறல்) சொல்ல...!

Thursday, July 22, 2010

நேர்மைக்கு கிடைத்த வெற்றி...



குடும்பத் தகராறால் ரூ.300 கோடி விரயம்:

"குறைந்தவிலையில்,உயர்ந்த தரம் வாய்ந்த கேபிள் டிவி இணைப்பு கொடுப்பதற்கு" என்று மக்களின் காதில் பூசுற்றி துவங்கப்பட்ட நிறுவனம்தான் அரசு-கேபிள் டி.வி. உண்மையில், ஆளுங்கட்சித் தலைவரின் வாரிசுகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போட்டியின் விளைவுதான் அரசு-கேபிள் டி.வி. ஆகஸ்ட் 2007ல் துவங்கப்பட்ட அரசு-கேபிள் டி.வி, ஜுலை 2008ல் ஒளிபரப்பைத் துவங்கியது. மிகவிரைவாக அதிகாரபூர்வமில்லாத மூடுவிழாவைக் கண்டது. குடும்பத் தகராறு தீர்ந்துவிட்டது. அரசுகேபிள் டிவிக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. குடும்பத் தகராறால் அரசு கேபிள் டிவியில் விரயமாக்கப்பட்ட மக்கள்வரிப் பணம் ரூ.300கோடி !!

தனியாரின் கைக்குப்போன அரசின் சொத்து ரூ.700கோடி:
அரசுநிறுவனமான எல்காட்(ELCOT) தனியாருடன் இணைந்து உருவாக்கியதுதான் "எல்நெட் சாப்ட்வேர் கம்பெனி(தரமணி, டைடல் பார்க்கில் உள்ளது)". இந்த எல்நெட் நிறுவனம், ETL என்ற துணை நிறுவனம் ஒன்றை நிறுவுகிறது. எப்படி? கோடிக்கணக்கில் அரசுப் பணத்தை செலவழித்து நிலம்வாங்கி, அரசின் சொத்துகளை ரூ.81கோடிக்கு அடமானம் வைத்துத்தான். பழைய மகாபலிபுர சாலையில் உள்ள இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.700கோடி. இந்த நிறுவனம் தற்போது முழுக்க முழுக்க தனியார் ஒருவரின் சொத்தாகிவிட்டது. இதனால் களவுபோன மக்கள்வரிப்பணம் ரூ.700கோடி !!

ஊழலை கண்டுபிடித்ததால் தண்டிக்கப்பட்ட அதிகாரி:

எல்காட்,அரசு கேபிள் டி.வி யில் மேலாண் இயக்குனராகப் பணியாற்றிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி , மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இந்த நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்,முறைகேடுகளைத் தட்டிக்கேட்டார். ஆதாரப்பூர்வமாக ஊழலை அம்பலப்படுத்தினார். கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய அத்தனை இடங்களிலும் நேர்மையாக,மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர் இவர்.

ஊழலுக்கு உடன்படாத இவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுகள் என்ன தெரியுமா? தொடர்ச்சியான பணிமாற்றம்(Transfer), வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று பொய்யான விசாரணை, பதவி உயர்வுக்குத் தடை ! கடைசியாக இன்று பனி இடை நீக்கம்.

மடியில் கணமில் லாததால், அரசின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை இவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எல்காட்,அரசு கேபிள் டி.வியில் நடைபெற்ற ரூ.1000கோடி ஊழலை 150பக்க ஆவணத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் !!

அரசு,பொதுமக்கள் நலன் கருதி அவர் எடுத்த நேர்மையான நடவடிக்கைகளுக்காக இன்று நீதிமன்றத்தின் படியேறி தன்னை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அவர் - திரு.உமாசங்கர்.ஐ.ஏ.எஸ்

தஞ்சை மாவட்ட ஆட்சியாளராக இருந்த பொழுது, அங்கு மின் ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தியவர்.. பின் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது(99-01) திருவாரூரை இந்தியாவின் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட முதல் மாவட்டமாகியவர். இவர் தான் இன்று நேர்மைக்காக தண்டிக்கப்பட்ட அதிகாரி.

ஐ.ஏ.எஸ் போன்ற உயர் அதிகாரப் பணிகளில் உள்ளவருக்கே இந்த நிலை என்றால்,எந்த செல்வாக்கும் இல்லாத சாமானியனுக்கு எப்படி கிடைக்கும் நீதி !!? நேர்மையான ஒருசில அதிகாரிகளும் இப்படி தண்டிக்கப்படும்போது, மற்றவர்கள் ஊழல்,முறைகேடுகளை எதிர்த்து நிற்க எப்படி முன்வருவார்கள்....?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுதே காதினிலே...

Monday, July 19, 2010

இந்தியாவும், அதன் வளமும்...

சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்!

உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்!

இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்!

இவ்வளவு பணத்தை சும்மா வைத்துக் கொண்டு, மாதச் சம்பளக்காரர்களையும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் வரிமான வரி வரம்பை ரூ 2 லட்சம் வரை ஏற்றுவதற்கே வருடக்கணக்கில் யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு… என்ன தேசமோ!

இருக்கட்டும்…

70 லட்சம் கோடின்னா… எவ்வளவு? அதை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்றெல்லாம் ஜஸ்ட் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தால்… பிரமிப்பில் தலை கிர்ரடித்துவிடும்.
இதோ… அந்த விவரமும்…

1. உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்புப் பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. சற்றே எண்ணிப் பாருங்கள்… சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும்.

2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப் பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.

3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவே இல்லை. மேலும் இது குறித்து எதிர்க்கட்சியினரும் அப்போது எந்த ஆர்வமும் கட்டவில்லை.

காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும். தேர்தலின்போது மட்டும் கூப்பாடு போட்டார்கள்.

5. இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை பற்றாக்குறை இல்லாமலேயே சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்காது. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.


6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.

7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் ‘கர்ம வினை’ என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

8. இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்கள் பங்குக்காக காத்திருக்கிறார்கள்.

அன்றாடங்காய்ச்சிகள் இதையெல்லாம் படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாள் கழிந்தால் போதும் என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

எனினும் இதுவும் ஒரு விடுதலை போராட்டமே”. ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். யார் எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு இன்னும் கூட வலு சேரவில்லை என்பதுதான் இதில் மகா சோகம்.

10. இந்திய ஆட்சியாளர்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டு ஜி 20, ஐஎம்எப், எக்மண்ட் குழு போன்றவர்களிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்து வலியுறுத்தல்களைத் தொடங்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த வேலையை எப்போதோ ஆரம்பித்துவிட்டன.

இந்தியா ஆரம்பிக்குமா...?

Wednesday, July 14, 2010

வீட்டு மனைகளாகும் விளை நிலங்கள்


இன்றைய தினமணியில் வந்த ஒரு செய்தி...

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிகளில் பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் வந்து சேராததால் பல ஏக்கர் நிலங்கள் தரிசாகிவிட்டன. விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை வீட்டுமனைகளுக்காக விற்று வருகின்றனர்.

இம் மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்கு கடந்த ஒரு மாதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தெங்கம்புதூர், கோட்டார், ராஜாக்கமங்கலம், முட்டம் கால்வாய் பகுதிகளுக்கு தண்ணீர் சரிவர வந்து சேரவில்லை.

முக்கிய கால்வாய்களை கோடையில் முறையாகத் தூர்வாரி செப்பனிடாமல்விட்டதாலும், தனியார் ஆக்கிரமிப்புகளாலும் கால்வாய்கள் சுருங்கி தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனந்தனார் கால்வாயின் கிளைக் கால்வாயான தெங்கம்புதூர் கால்வாய் வழியாக கன்னிமூலக்குண்டு ஓடைக்குளத்துக்கு தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்த குளம் ஒரு ஏக்கர் 4 சென்ட் பரப்பளவு கொண்டது. இதையொட்டிய பாசன பரப்பளவு 15 ஏக்கர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் இங்கு பாசனப் பரப்பு குறைந்தது.

கடந்த கும்பப்பூ பருவத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இங்கு நெற்பயிர் பாசனம் நடைபெற்றது. குளத்தின் மடை மற்றும் குளம் ஆழப்படுத்தும் பணி 2002-2003-ம் நிதியாண்டில் கண்துடைப்பாகவே செய்யப்பட்டது. குளத்தின் மடையில் தற்போதும் உடைப்பு உள்ளது. இதை உடனுக்குடன் சீரமைக்கவில்லை என்பதாலும், குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயை புனரமைக்காததாலும் தண்ணீர் வரத்து குறைந்தது.

பாசனப்பரப்பு குறைந்து பல ஏக்கர் நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளதால், தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் இவற்றை விலைபேசி பிளாட் போட்டுள்ளனர்.
இங்குள்ள கால்வாயை ஓட்டியுள்ள நில உரிமையாளர்கள் வீட்டுமனைகளுக்கு நிலத்தை விற்க மண்ணைக் கொட்டி மேடாக்கியுள்ளதால் கால்வாய் குறுகி குளத்துக்கு தண்ணீர் வரவில்லை.

மேலும், கால்வாய் கரையோரம் வசிப்போர் குப்பைகள் மற்றும் கழிவுகளை கால்வாயில் கொட்டுவதாலும் கால்வாய் பாழடைந்துள்ளது. இதனால் பறக்கை கால்வாய், மணக்குடியான் கால்வாய் போன்ற நிலைக்கு இக் கால்வாயும் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்னிமூலக்குண்டு ஓடைக்குளத்துக்கு தண்ணீர் வரும் என நினைத்து அப்பகுதி விவசாயிகள் நடப்பு கன்னிப்பூ பருவத்துக்கு நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்திருந்தனர். சில விவசாயிகள் நாற்று பாவியிருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் வந்து சேராததால், நெற்பயிர் கருகும் அபாயம் உருவாகியுள்ளது.
தெங்கம்புதூர், புத்தளம் பகுதிகளில் 700 ஏக்கருக்குமேல் நெல் விவசாயம் இருந்தது.

தண்ணீர் இல்லாத காரணத்தால் அவற்றில் 500 ஏக்கருக்குமேல் தரிசாகிவிட்டன. விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் வீட்டுமனை நிலங்களுக்காக விற்று வருகின்றனர் என்று வேதனை தெரிவிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு செயலர் சி. பொன்னுலிங்க ஐயன்.
இந்த பிரச்னைகள் தொடர்பாக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆளுநருக்கு தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ராஜாக்கமங்கலம், முட்டம் பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இப் பகுதிகளில் கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை என்பதால் 100 ஏக்கர் அளவுக்கு நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

சாந்தபுரம் கால்வாயை தூர்வாரி செப்பனிடவில்லை. அழகன்விளை, முஞ்சிரவிளை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயத்துக்குக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

இவ்வாறு கடைவரம்பு பகுதி பாசனத்துக்கு தண்ணீர் வராததால் நெல் விவசாயத்திலிருந்து தென்னை விவசாயத்துக்கு பலர் மாறி வருகிறார்கள். நெற்பயிர் விவசாயப் பரப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்து வருகிறது என்று மாவட்ட நஞ்சில்லா வேளாண்மை சங்கப் பொருளாளர் டி. தேவதாஸ் தெரிவித்தார்.

நெல் விவசாயத்தை உயிர்ப்பிக்க ஆட்சியாளர்களும், மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

கடைமடை பகுதிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் வரவில்லை என்பதால், தெங்கம்புதூர் பகுதியில் கருகும் அபாயத்தில் உள்ள நெற்பயிர்.

விவசாய விளைநிலங்கள் வீட்டு மனைகலாகும் அவல நிலை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நகரமயமாக்கல் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு இது.

சமீபத்தில் எனது சொந்த ஊருக்கு செல்லும் போது சாலையின் இரு மருங்குகளிலும் ஏராளமான புதிய புதிய நகர்களின் பெயர்ப் பலகைகள். பல மனைப் பிரிவுகள். சின்னஞ்சிறு கிராமத்தில் கூட புதிதாக ஏதோ ஒரு நகருக்கான பெயர் பலகை. சமீப சில மாதங்களில் நடந்து முடிந்துள்ள நிகழ்வு இது.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த புதிய வீட்டுமனைப் பிரிவுகள் இருந்த இடம் சில மாதங்களுக்கு முன்பு வரை பச்சை பசேல் என நெல் வயல்களாக இருந்தது தான். நஞ்சை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது என்று அரசு விதி இருப்பதாக தெரிகிறது. இருந்தும் எப்படி, எதற்காக, இவ்வாறு மாற்றினார்கள் என்பதே புரியவில்லை.

விவசாயம் ஒரு இலாபகரமான தொழிலாக இல்லாமல் போனது தான் இதற்கான காரணம் என்று நினைக்கிறேன். வந்த விலைக்கு நிலங்களை விற்றுவிட்டு நகரங்களை நோக்கி மக்கள் வேலை தேடி கிளம்பி விடுகின்றனர்.

இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் அண்ணல் காந்தி. இந்தியாவில் இன்னும் கொஞ்சம் காலத்தில் கிராமங்களே இருக்கப் போவதில்லை.

இதயம்...???

Tuesday, June 22, 2010

தமிழ் செம்மொழி மாநாடு

இன்று உலகின் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கேள்விக்குறியாய் இருக்கும் நிகழ்வு நடக்கப் போகும் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு". இந்த மாநாடு தேவைதானா என யோசிக்காத தமிழர் ஒருவரும் இல்லை. நம்மைப் போன்ற மக்களின் வரிப்பணத்தில் 200 கோடிக்கும் மேல் செலவு செய்யப் பட்டிருக்கிறது.

இதில் 118 கோடி ரூபாய் 3840 அடுக்ககங்கள் அமைப்பதற்கும், 59.85 கோடி சாலை சீரமைப்பு பணிகளுக்கும் பயன் படுத்தப் படுகின்றனவாம். மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஒரு பலூனில் நான்கு கேமராக்கள் பொருத்தப் பட்டு விண்ணில் பறக்க விடப் பட்டுள்ளது. ஒரு கேமராவின் விலை மட்டும் 50 லகரம்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 200 கோடி என்பது சும்மா என்றே தோன்றுகிறது. எத்தனை கோடிகள் ஆனதோ? இன்னும் எத்தனை ஆகுமோ? நாட்டில் விவசாயப் படுகொலைகள், பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படிப் பட்ட மாநாடு இவ்வளவு பொருட் செலவில் தேவைதானா?

3840 அடுக்ககங்கள் இவ்வளவு விரைவில் சாத்தியமாகும் போது ஏழை மக்களுக்கும், சுனாமியால் வீடிழந்தோருக்கும் கட்டிக் கொடுக்கப் படும் வீடுகள் மட்டும் ஏன் வருடக் கணக்காகிறது?

இத்தனை கோடிகள் செலவில் இவ்வளவு நாள் கவனிப்பாறற்றுக் கிடந்த சாலைகள் துரிதமாக சீரமைக்கப் படும் போது, இவ்வளவு நாள் செய்யப் படாதது ஏன்?

இதுவரை சாலைகள் சீரமைப்பு என்ற பெயரில் கோவையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன.ஊட்டி சாலையில் 600க்கும் மேற்பட்ட மரங்களும், திருச்சி செல்லும் சாலையில் 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டித் தள்ளியிருக்கின்றனர். இங்கு வெட்டப் பட்டவை வெறும் மரங்கள் அல்ல. நம் மனிதமும் தான்.

மரங்களைக் கொன்று இப்படி ஒரு விழா தேவைதானா? மரங்களுக்காக மக்கள் ஏங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் போது இவ்வளவு மரங்கள் கொலை செய்யப் பட்டு ஒரு தலைவனின் ஆசைக்கு விழா எடுப்பது நியாயம் தானா?

"ஒரு பக்கத்து மரங்களை மட்டும் வெட்ட சொல்லிருக்கோம், தேவைப் பட்டா இன்னொருப் பக்க மரத்தையும் வெட்ட சொல்லிருக்கொம்" என கலக்டர் முன்னர் கூறியிருந்தார். மரங்களை வெட்டி மனிதம் அழிக்கும் இந்த மிருகப் பணிக்கு எடுக்கப் படும் விழாவிற்கு பெயர் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு".

இதெல்லாம் பார்த்தப் பின்பும் நம் மக்கள் ஒரு ரூபாய் அரிக்காகவும், ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கலர் டி.விக்காகவும் மீண்டும் வாககளிக்கப் போவது உறுதியே. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தேர்தலின் போது என்ன சொல்லி ஓட்டு வாங்கலாம் என்பது அந்த அரசியல்வியாதிகளுக்குத் தெரியும்.

"இந்த மாநாட்டின் மூலம் எத்தனைப் பேருக்கு வேலைக் கிடைச்சிருக்குத் தெரியுமா?" என என் நண்பன் கேட்டான்.

எத்தனை பேருக்கு?
எவ்வளவு நாளைக்கு?
எவ்வளவு ரூபாய்க்கு? என்றேன்.

அவனிடம் பதிலில்லை.

எத்தனை உயிர்கள் இலங்கையில் அழிக்கப் பட்டது தெரியுமா?
எத்தனை மரங்கள் கோவையில் கொல்லப் பட்டது தெரியுமா?
அதனால் என்ன நடக்கப் போகிறது எனத் தெரியுமா?
விவசாயப் படுகொலைகள் பற்றித் தெரியுமா?
பட்டினி என்றால் என்னவென்றுத் தெரியுமா?
உழைக்கும் வர்க்கத்தின் நிலைத் தெரியுமா? என்றேன்.

என்னை ஏளனமாகப் பார்த்து விட்டு எதற்கும் பதில் சொல்லாமல் திரும்பிப் போனான்.

Friday, June 18, 2010

நெற்களஞ்சியம் இன்றைய நிலை...

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைப் போன்ற ஒரு கேள்விதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? இதற்கான பதில் நேற்றுவரை தஞ்சை என்பதுதான். ஆனால், இனிமேல் இந்தப் பதிலைச் சொல்ல முடியுமா என்பதில் ஐயம் இருக்கிறது. ஏனென்றால், தஞ்சை டெல்டா பகுதியில் மிகக் குறைவாகவே குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 3 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுவந்த நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறியிருக்கிறது. முந்தைய ஆண்டு 56,500 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 53,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, தஞ்சை டெல்டா மாவட்டப் பகுதிகளில் இந்த அளவு வெறும் 14,000 ஹெக்டேர் மட்டுமே.

இதற்குக் காரணமான மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 50 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், தற்போது மேட்டூர் அணையில் 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், அணை திறக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும், இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாமே தவிர, இதுவே முழுமையான காரணம் கிடையாது. சரியாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத ஆண்டுகள் பல. தண்ணீர் திறக்கப்படுவது தாமதமானாலும்கூட, குறுவையை கிணற்றுப்பாசனம் அல்லது ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி தொடங்கிவிடுவார்கள். மேட்டூர் அணை தாமதத்தால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்தது.

மேலும், திறமையான பொறியாளர்கள் பொதுப்பணித் துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும்போது, இத்தகைய குறைபாடுகளைச் சரியாகக் கணித்து சீர்செய்த சம்பவங்களும் உண்டு. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் துணை நதிகளில் உள்ள அணைகள் அனைத்திலும் உள்ள நீர் இருப்பு, அடுத்த சில வாரங்களில் பெய்யக்கூடிய மழையளவு, இதனால் கர்நாடக அரசு எத்தனை முயன்றாலும் முடியாமல் திறந்த ஆக வேண்டிய நீரின் அளவு அனைத்தையும் கணித்து, அணையில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருந்தாலும்கூட, திறந்துவிடச் செய்த காலமும் உண்டு. சில ஆண்டுகளில் சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால், இப்போது அத்தகைய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. அமைச்சர்களுக்கு இதுகுறித்து ஆலோசனைகளும் வழங்குவதில்லை. அமைச்சர்களுக்கும் இதை யோசிக்க நேரமில்லை.

அடுத்ததாக, நெல் சாகுபடிக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதும், அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடிக்கான விதைநெல் கொள்முதல், உரம், பண்ணை வேலையாள்களுக்குப் பெரும்தட்டுப்பாடு (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் சேர்ந்து கொள்கிறது) கரும்புக்குக் கொடுக்கப்படும் அதிக விலைபோல நெல்லுக்கு விலை கிடைப்பதில்லை என்ற மனக்கசப்பு ஆகிய இவை யாவும்தான் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்குக் காரணம். பலர் கரும்பு சாகுபடிக்கு மாறி விட்டார்கள்.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறைந்த பரப்பளவும்கூட, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் இறைக்க வாய்ப்புகள் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் பலர் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியும் என்றாலும், கோடையின் மின்தடை விவசாயத்துக்கும் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள இந்த "நோய்' வழக்கமான சம்பா சாகுபடிக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அரசு இப்போதே இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக, நெல் கொள்முதல் விலையை சாகுபடி செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தித் தருவதுதான் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும்.

அடுத்ததாக, ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக்கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே.அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது).

தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது. நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார்...

Saturday, June 12, 2010

சிந்தனை செய் மனமே...

இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளரும் 'மைண்ட் ட்ரீ' நிறுவனத்தைத் தொடங்கியவருமான சுப்ரதோ பக்ஷியின் பேட்டி கொஞ்சம் கவனம் ஈர்க்கும் விதமாக இருந்தது. சமீப காலங்களில் உயர்பதவியில் இருப்போரிடமிருந்து இப்படியொரு சிறந்த பேட்டி வந்ததில்லை. என்னை போன்ற கோடானுகோடி இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்த அவரது விளக்கங்களின் தமிழாக்கம் கீழே...

உடல் உழைப்புக்கு மரியாதை வேண்டும்!

அன்றொருநாள் பெங்களூருவில் ஓர் இளைஞனைப் பார்த்தேன்... 21 வயதுதான் அவனுக்கு. கையில் உறையில்லை; காலில் செருப்பு இல்லை. ஆனாலும், யார் யாரோ வீசியெறிந்த குப்பையை கடமை உணர்வோடு அள்ளி, அந்த இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய ஒருநாள் சம்பளம் வெறும் 80 ரூபாய்தான்.

இன்னொருநாள், முக்கியமான அந்த மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வீட்டுவேலை செய்யும் ஒரு பெண்மணியைப் பார்த்தேன். ஒரு மணி நேரம் வேலை பார்த்தால் அவருக்குக் கிடைப்பது வெறும் 15 ரூபாய் மட்டுமே. உச்சி வெயில் என்றும் பார்க்காமல் நிலத்தை உழுது, விதையைத் தூவி, நமக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் கிராமத்து விவசாயிகளைப் பாருங்கள். விஷத்துக்கு ஒப்பான ரசாயன உரத்தை வெறும் கைகளால் அவர்கள் அள்ளி வீசுகிறார்கள். அதற்குப் பலனாக அவர்களுக்குக் கிடைப்பது, நஷ்டம் மட்டுமே!

உடலால் உழைக்கிற இந்த மக்கள் மீது நமக்கு எந்த அக்கறையும் இல்லை. குப்பை அள்ளும் இளைஞன் முப்பது வயதில் அகால மரணம் அடைகிறான். வீட்டுவேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. வயதான காலத்தில் வயிற்றைக் கழுவ அந்தப் பெண்ணுக்கு பென்ஷன் கிடையாது. திடீரென உடம்பு சரியில்லை என்றாலும் அந்தப் பெண் அரசு ஆஸ்பத்திரியை அண்டியிருக்க வேண்டிய கட்டாயம். ஏழை விவசாயி என்றும் ஏழையாகவே இருக்கிறான்.

உலகத்தின் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன். நம் நாட்டில் மட்டுமே டாக்ஸி டிரைவர்கள் மிகக் கேவலமாக உடை உடுத்தும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யாரையோ தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குப் போகிறார்கள். ஆனால், ஒருநாள்கூட அவர்கள் தன் மனைவியையும் குழந்தைகளையும் அதே காரில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்ல முடிவதே இல்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் வேண்டாம்; வருடத்துக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று ஒரு பட்ஜெட் ஓட்டலில்கூட தங்க முடிவதில்லையே! ஏன்?

அனைவருக்கும் கல்வி வேண்டும்!

எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையானது கல்வி. ஆனால், நாம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் நம்மால் நூறு சதவிகித கல்வி கொண்டுவர முடியவில்லை. இதனால் மனிதசக்தியை மிகப்பெரிய அளவில் வீணாக்குகிறோம்.

இந்தியாவில் கல்வி தொடர்பாக இரண்டு பிரச்னைகள். ஒன்று, எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற கல்வியை நம்மால் கொடுக்க முடியவில்லை. இரண்டு, தரம் குறைந்த கல்வி. நான்கூட சாதாரண பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். ஆனால், தரமான கல்வியை நான் தேடிச் சென்றதற்குக் காரணம் கிடைத்ததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு திருப்தி அடையும் சிந்தனை எங்களுக்கு இருந்ததில்லை என்பதால்தான். வாழ்க்கை பற்றிய முழுமையான புரிதலைக் கொடுக்கும் தீர்க்கதரிசனம்தான் கல்வி என்று நாங்கள் நினைத்தோமே ஒழிய, வெறும் எழுத்துக்களைப் படிப்பதால் வருவது அல்ல என்றே நாங்கள் நினைத்தோம்.

நம் கல்வியானது நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, தீர்க்கதரிசனத்தோடு எதிர்காலத்தை உருவாக்குகிற மாதிரியும் இல்லை. எல்லா நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழுகிற மாதிரி மனிதசக்தியை உருவாக்கும் ஓர் அமைப்பாகவும் இல்லை. நம்நாட்டின் மனித சக்தியை தொலைநோக்குப் பார்வையோடு வளரச்செய்து உலகத்துக்கு ஒரு புதிய நாகரிகத்தை அளிக்கவேண்டும். நம்மிடமிருந்து மிகப் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த உலகம். இந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றத் தவறினோமெனில் தவறு நம் மீதுதானே ஒழிய, வேறு யார் மீதும் அல்ல.

நம் குழந்தைகள் வரலாற்றைப் பற்றி பக்கம் பக்கமாகப் படிக்கிறார்கள், வரலாறு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமலே! மொழிப் பாடங்களை விழுந்து விழுந்து படிக்கிறார்கள், மொழியின் மீது எந்தக் காதலும் இல்லாமலே. நம் கட்டடக்கலை பற்றியோ, நம் மரங்கள், செடிகொடிகள் பற்றியோ, நம் கலாசாரத்தில் எந்த ஓர் அங்கத்தைப் பற்றியோ அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று நுட்பமாக பின்னப்பட்டிருக்கும் விதத்தை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முழுக்க அறிவியல் கண்ணோட்டத்தையாவது வளர்த்துக்கொள்கிறார்களா, என்றால் அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில், கல்வி என்கிற பெயரில் சிறு மகிழ்ச்சி அடைந்துவிட்டு புதுமையாக எதுவும் செய்யாமல் திருப்தி பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஊழலை ஒழிக்கவேண்டும்!

ஒருபக்கம் இந்தியா மிகப்பெரிய பணக்கார நாடு. இன்னொருபக்கம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நாடு. இதற்குக் காரணம், ஊழல் என்கிற விஷம் இங்கே ஆழமாக வேரூன்றிப் போயிருக்கிறது. உலக நாடுகளில் ஊழல் பட்டியலை ஆண்டு தவறாமல் வெளியிடும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்கிற அமைப்பு 2006-ல் வெளியிட்ட அறிக்கைபடி, சின்னச் சின்ன அளவில் கொடுக்கப்படும் லஞ்சம் மட்டும் இந்தியாவில் 21,068 கோடி ரூபாய்.

இது மனித வளத்துக்காக நாம் செலவழிக்கும் தொகையைவிட 10% அதிகம். மத்திய அரசாங்கம் வசூலிக்கும் சேவை வரியைவிட 20% அதிகம். மத்திய அரசின் உதவி திட்டங்களைவிட 33% அதிகம். தொடக்கக் கல்விக்காக நாம் செலவழிக்கும் பணத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம்! அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு நாம் செய்யும் செலவைவிட இது 8 மடங்கு அதிகம். இந்தியாவின் நான்கு திசைகளையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையை அமைக்க இந்தத் தொகையைப் போல மூன்று மடங்கு அதிகத் தொகையை நாம் செலவழிக்கிறோம். அதாவது, மூன்று ஆண்டுகளில் நம்நாட்டில் கொடுக்கும் லஞ்சப் பணத்தை செலவழித்தால் இந்தியா முழுக்க சாலை வசதியைக் கொண்டு வந்துவிட முடியும். உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் போய்ப் பாருங்கள்; விமானங்களை வாங்குவதற்காக, ஆயுதங்களை வாங்குவதற்காக சன்மானம் எதையும் யாரும் வாங்குவதில்லை. வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாட்டுக்கு நீங்கள் ஒருமுறைப் போய்ப் பாருங்கள். பிறப்புச் சான்றிதழ் வாங்க, பாஸ்போர்ட் வாங்க, ரேஷன் கார்டு வாங்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, சொத்து வாங்க என்று எங்கேயும் அரசாங்கத்தின் இன்னொரு கேவலமான முகத்தை நீங்கள் பார்த்தாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது. ஆனால், இந்தியாவில் அந்த முகத்தைப் பார்க்காமல் உங்களால் எந்த சின்ன காரியத்தையும் செய்யமுடியாது. அந்த அளவுக்கு அது சர்வ இடங்களிலும் வியாப்பித்துக் கிடக்கிறது.

பல ஆண்டுகளாகியும் என்னால் மறக்கவே முடியாத ஒரு சம்பவம்... ஹெளரா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன். 15 வயது மதிக்கத்தக்க ஒரு பிச்சைக்காரச் சிறுமியிடம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தான் ஒரு ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரன். அந்தச் சிறுமிக்கு தொழுநோய் பிடித்ததிருந்ததைக்கூட அவன் சட்டை செய்யவே இல்லை. இதைப் பார்த்து வேதனைப்பட்டேன். ஆனால், சட்டத்துக்கு? இது ஒரு விஷயமே இல்லை.

அரசாங்கத்தின் அனைத்து அங்கங்களிலும் லஞ்சம் என்கிற விஷயம் பிரிக்கமுடியாமல் இரண்டறக் கலந்திருப்பதால் போலீஸிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை யாருமே தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. இதனால் அதிருப்தி அடையும் மக்கள் அரசாங்கத்தை நிர்வாகம் செய்ய தெரியாதவர்களை நம்பி அவர்கள் பின்னால் போய் நிற்கிறார்கள்.''

என்ன எப்பிடி இருக்கிறது? தீர்கமான சிந்தனை... அனைவரும் இவ்வாறு சிந்திக்க முயற்சித்தாலே போதும்... விளைவுகள் தானாக நடக்கும்....

Thursday, June 10, 2010

நாளைய உணவு...

மீண்டும் மீண்டும் நான் பின்வரும் இந்த கருத்தை பதிவிடும் நோக்கமே, அதன் முக்கியத்துவத்தை பல பேருக்கு கொண்டு சேர்ப்பது தான்.

தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள்...
என் மனதில் தோன்றியதை இங்கே பதிவிடுகிறேன்...

* இன்று எங்கள் கிராமத்தில் சுமார் 45-50 வயதுக்கு குறைவான யாரும் விவசாயத்தில் இல்லை.

* விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பங்களிலிருந்து 35 வயதிற்குட்பட்ட எவர் ஒருவரும் இன்று விவசாயத்தில் இல்லவே இல்லை. ஒன்று படித்து வெளியூரில், வெளிநாட்டில் வேலையில் இருந்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது பக்கத்து நகரங்களில் விவசாயம் தொடர்பில்லாத வியாபாரம், தொழிலில் இருக்கிறார்கள்.

* இன்று விவசாயம் நிலம் வைத்திருப்பவர் அல்லது விவசாய நிலத்தில் உழைப்போரின் ஒரே இலக்கு தன் பிள்ளைகளை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் அல்லது ஒரு தொழில் ஆரம்பித்திட வேண்டும்.

*விளைவித்த தக்காளி கிலோ நாலாணாவிற்கு விற்க வேதனைப்பட்டு, கூடை கூடையாய், வருடா வருடம் நடுச் சாலையில் கொட்டி அழிக்கப்படும் அவலம் இன்றும் இருக்கத்தானே செய்கிறது. எந்த அரசாங்கம் அக்கறையோடு தேவையறிந்து, விவசாயிக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது அல்லது உதவியிருக்கிறது?

*எப்போது தேவை அதிகமாகும், எப்படி ஏற்றுமதி செய்வது அல்லது எப்படி அதை பதப்படுத்திப் பாதுகாத்து சரியான நேரத்தில் விற்பது என்று?
(2009 ஆம் ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் சர்க்கரைத் தட்டுப்பாடு வருமென்று, நிறைய வெளிநாட்டு விவசாயிகள் முன்னரே அறிந்து, அதிக விளைச்சலை உருவாக்கி, நமக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றனர்)*கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மற்றும் வியாபார மேலாண்மை படிப்புகளின் எண்ணிக்கையில் ஒரே ஒரு சதவிகிதமாவது விவசாயக் கல்லூரிக்கோ அல்லது விவசாயம் குறித்த படிப்புகளுக்கோ கவனம் கொடுக்கப் பட்டிருக்கிறதா?

இப்போது நிலம் வைத்திருப்போர் அல்லது உழைப்போரின் உழைக்கும் திறன் இன்னும் அதிகபட்சம் 10-15 ஆண்டுகளில் மங்கித்தானே போய்விடும். அதன்பின் அந்த நிலங்களில் யார் விவசாயம் செய்வது?

சமீபத்தில் கண்டமேனிக்கு திறக்கப்பட்டது பொறியியல் கல்லூரிகளே. சிவில் படித்தார்கள், சாரம் போட்டு வருடக்கணக்கில் கட்டியதை, இன்று எங்கேயோ செய்து பத்திரமாக எடுத்து வந்து கிரேன் வைத்து தூணின் மேல் ஏற்றி அழகாகப் பொருத்தி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆச்சரியமான ஒன்றுதான், தவறேதுமில்லை. இது போல் ஒவ்வொரு துறை பிரிவிலும் படித்தவர்கள் பிரமிக்கக்கூடிய அதிசயத்தை விநாடி நேரத்தில் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன என்னவோ படிப்பென்று சொல்லி, எத்தனை எத்தனையோ கல்லூரிகளைத் திறக்கப்பட்டதே... வளர்ச்சி என்ற அடிப்படையில், விவசாய பூமியை விலகிச் சென்ற மனிதர்களால் தங்கள் விஞ்ஞானத்தால், அரசியலால் அல்லது ஏதோ ஒரு தொழிலால் ஒரே ஒரு நெல் மணியை உருவாக்க முடியுமா?

ஐக்கிய நாடுகள் சபை ஒரு மனதி இறுதியில் 'இன்னும் நாற்பது வருடங்களில் இந்தியாவிலும், சீனாவிலும் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிடில் மிகப் பெரிய உணவுத் தட்டுப்பாடு வருமென்று' சுட்டி காட்டி இருக்கிறது.. எனக்கென்னமோ அதற்கு நாற்பது வருடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

காடுகளை அழிப்பதில் சிறிதும் குற்ற உணர்வில்லாத நாம், பருவ மழை பொய்த்துப் போவதைப் பற்றி என்றாவது, ஒரு விநாடி மனம் கலங்கியிருகிறோமா?

காமராஜருக்குப் பின் தமிழ்நாட்டில், யாராவது அணை கட்டியிருக்கிறார்களா?

சாகடிப்பட்ட அணைகள் ஒன்றா, இரண்டா? சாமாதி கட்டப்பட்ட ஏரிகள், குளங்கள் எத்தனை ஆயிரம் இருக்கும்?

இது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாதவர்களைத் தானே மாற்றி மாற்றி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறோம்.

விவசாயத்தை, விவசாயிகளை வஞ்சித்த உலகம் அதன் பலன்களை அனுபவிக்கப் போவது மிக அருகாமையில் தான் இருக்கிறது.

அப்போது பசிக்கும் வயிற்றுக்கு யார் வந்து சோறு போடுவது.

Tuesday, June 8, 2010

போபால் - புதைக்கப்பட்ட நீதி

போபால் விஷ வாயு விபத்து! விபத்து என்று தற்செயலாகச் சொல்ல முடியாத படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பொறுப்பற்ற நிர்வாகம் விளைவித்த கோரம், பதினைந்தாயிரம் மக்கள் மாண்டனர் ஐந்து லட்சம் பேர்களுக்கு மேல் பாதிக்கப் பட்டனர்.

செத்துப் போனவர்களைவிட இப்போது வாழ்பவர்கள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 1999-ம் ஆண்டு போபாலில் ஆய்வு நடத்திய கிரீன்பீஸ் அமைப்பு கூறியது.​ இன்னமும் அந்த மண்ணில் சயனைடு நஞ்சு கலந்து கிடப்பதாகவும்,​​ நீர்நிலைகளில் அந்த நச்சு எச்சம் இருப்பதாகவும் கூறியது.​ இருந்தும்கூட,​​ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​

வாரன் ஆண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர், கைது செய்யப் படுகிறார்! வெறும் இரண்டாயிரம் டாலர் பிணைத் தொகையைக் கட்டிவிட்டு விடுவிக்கப் படுகிறார்.விசாரணைக்குத் திரும்புவதாக ஒரு வெற்று வாக்குறுதி! பத்தாவது குற்றவாளியாக யூனியன் கார்பைட் நிறுவனம்! தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப் பட்ட ஆண்டர்சனை, நீதி மன்றத்தின் முன் கொண்டு வர இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதோடு மட்டுமில்லை, தன்னுடைய சொந்த ஜனங்களைப் பாதுகாக்க எந்த நிவாரண நடவடிக்கையையும் இந்திய அரசு முயற்சிக்கவே இல்லை.

ஆனால் மக்களுடைய கோபத்தைத் தணிக்க, தாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ஒரு நாடகத்தை இந்திய அரசு திட்டமிட்டே அரங்கேற்றிய மாதிரித் தான் பின்னால் நடந்த சம்பவங்கள் அத்தனையும் சுட்டிக் காட்டுகின்றன.
1986 இல் அமெரிக்க நீதி மன்றத்தில் இருந்த இந்த வழக்கு இந்தியாவுக்கு மாற்றப்பட்டதே, பாதிக்கப் பட்ட ஜனங்களுக்கு இழைக்கப் பட்ட மிகப் பெரிய துரோகம். அதைவிட, 3300 கோடி டாலர்கள் நஷ்ட ஈட்டைக் கோரி வழக்குத் தொடர்ந்தது இந்திய அரசு., மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் 1989 இல் வெறும் நானூற்று எழுபது கோடி டாலர்களை நட்ட ஈடாகப்பெற்றுக் கொள்வதற்கு சம்மதிப்பதாக, நீதி மன்றத்திற்கு வெளியே செய்து கொள்ளப் பட்ட சமரசத் தீர்வாக இந்திய அரசு ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் என்ன நடந்திருக்கும்?

நாட்டு நலனைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகள், முதுகெலும்பில்லாத அரசு, அமெரிக்க நிர்பந்தத்தை எதிர்த்து நிற்க முடியாத கோழைத் தனம், அப்புறம் இருக்கவே இருக்கிறது, கண்ணசைவுக்கு ஆடினால் கிடைக்கும் சன்மானங்கள்!

உச்ச நீதிமன்றமே 1996 இல் இந்தக் குற்றச்சாட்டை நீர்த்துப் போகச் செய்கிற மாதிரியான ஒரு முடிவை எடுக்கிறது. வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு வரவழைக்க இந்திய அரசு அமெரிக்க நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. வழக்கம் போலவே குளறுபடிகளுடன்! இருபது வருடங்களுக்குப் பின்னால் அமெரிக்க அரசு, அந்தக் கோரிக்கையில் ஏதேதோ ஓட்டை இருப்பதாக, மறுத்து விடுகிறது.

இந்தக் கண்ணராவிகள் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! சம்மதம் சொல்லி வாங்கினார்களே நட்ட ஈடு, அதையாவது பாதிக்கப் பட்டச மக்களுக்கு நிவாரணமாக வழங்கினார்களாமா?

அதுவும் இல்லை! இன்றைக்கு வரைக்கும் இல்லை! பெயரளவுக்கு ஒரு மருத்துவ மனை, சிகிச்சை என்று ஆரம்பித்ததோடு சரி! நட்ட ஈட்டை இன்னும் காலதாமதம் செய்யாமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இருபத்து நான்கு வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு சொல்லி இருக்கிறது!

நச்சுவாயுவின் கோரம் இறந்த பதினைந்தாயிரம் மக்களோடு முடிந்து விட்டதா? இல்லை! இன்னமும் பூட்டிக் கிடக்கும் யூனியன் கார்பைட் ஆலையின் உள்புறத்தில் பாதரச நஞ்சுக் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமலேயே அப்படியே தான் இருக்கின்றன! கிரீன் பீஸ் இயக்கத்தினர் காட்டும் அக்கரையில் ஒரு கோடியில் ஒரு பங்கைக் கூட, இந்திய அரசு தன்னுடைய சொந்த ஜனங்களுடைய நலனில் காட்டவில்லை!

அரசியல் வாதிகளை நம்ப முடியவில்லை! அரசு இயந்திரம், ஊழியர்களை நம்பிப் பயனில்லை! நீதித் துறையாவது கொஞ்சம் நீதி கிடைக்கச் செய்யுமா என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கு, நீதித் துறையும் பலவீனப் பட்டுப் போயிருப்பதையே சமீப காலத் தீர்ப்புக்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இதை இங்கே மீண்டும் மன்மோகன் சிங் நிறைவேற்றத் துடிக்கிற அணு உலை விபத்துக்கான நட்ட ஈட்டு மசோதாவோடு சேர்த்துப் பாருங்கள்!

அணுஉலைகள் விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவுக்கு பரவலாக எழுந்த கடும் எதிர்ப்புகள் மிகமிக நியாயமானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது நேற்று வந்த தீர்ப்பு.

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சறுக்கல். இவர்கள் செய்துவிட்டுப் போய் விடுகிற கிறுக்குத்தனங்களை, ஜனங்கள் அல்லவா சுமந்தாக வேண்டி இருக்கிறது?

பிரச்சினை வந்தால் சமாளிக்கும் திறமை, உறுதி, நேர்மை,அப்புறம் கொஞ்சமாவது முதுகெலும்பு இருக்கிறதா என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கே அது தெரியாது!

Thursday, May 27, 2010

கிருஷ்ணன்

அவருக்கு வயது 27. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் நிர்வாகத் துறை படித்து அதில் தங்கப்பதக்கமும் பெற்றவர். பிரபல தாஜ் ஹோட்டலின் பெங்களூர் கிளையில் செஃபாகப் பணி புரிந்து கொண்டிருந்தார். அவரது திறமையைக் கண்ட நிர்வாகம் அவரைத் தமது ஸ்விட்ஸர்லாந்துக் கிளையில் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தது. ஒருவாரத்தில் கிளம்ப வேண்டும். பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொள்வதற்காக மதுரைக்குச் சென்றார்.

அங்கே, அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக ஒருநாள் காலையில் தாய், தந்தை, சகோதரியுடன் காரில் புறப்பட்டார். மேம்பாலம் அருகே கார் செல்லும்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்தது. பாலத்தின் அடியில் ஒரு முதியவர், தனது கழிவைத் தானே சுண்டுவிரலால் எடுத்து வாயில் வைப்பதைப் பார்த்தார். பசியின் கொடுமை! பதைத்துப் போய் நடுச்சாலையில் அப்படியே காரை நிறுத்தியவர், அருகில் இருந்த கடைக்கு ஓடிச் சென்று பத்து இட்டலிகளை வாங்கி அவரிடம் கொடுத்தார். ஒரு நிமிடத்திற்குள் பத்தையும் விழுங்கிவிட்டு நிமிர்ந்த முதியவரின் கண்களில் கண்ணீர். தனது கையை வேஷ்டி நுனியில் துடைத்துக் கொண்டு விட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நன்றி என்றும் சொல்லவில்லை. சொல்லவும் தெரியாது. காரணம், அவர் ஒரு மனநோயாளி.

அவர் ஒரு மனநோயாளி என்றறிந்ததும் அந்த இளைஞருக்கு ஒரே அதிர்ச்சி. குடும்பத்தினருடன் ஆலயத்திற்குச் சென்று மீனாட்சியை வழிபட்ட போதும் அவரது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அந்தப் பெரியவரையே சுற்றிச் சுற்றி வந்தது. மதியம் தனக்கான தயிர் சாதத்தைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு போய் அவருக்குக் கொடுத்தார். பெரியவர் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் அதையும் வாங்கி உண்டார்.

வாழ்க்கையின் இன்னொரு புறத்தைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலே மதுரை மாநகரத்தைத் தனது மோட்டார் சைக்கிளில் சுற்றி வரும்போது ஆங்காங்கே இதுபோன்று இன்னும் பல மனநோயாளிகள் பசியோடு தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் படித்ததும், தங்கப் பதக்கம் பெற்றதும் வெளிநாட்டுக்குச் சென்று பணம் சம்பாதிப்பதற்காகத் தானா என்று சிந்தித்தார். நேரடியாக பெங்களூர் அலுவலகத்திற்குச் சென்றவர், ஒரே வாரத்தில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு மதுரைக்குத் திரும்பி விட்டார்.

அவருக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் என்பதால் இட்டலி, தயிர்சாதம் ஆகியவற்றைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு தினந்தோறும் தனது மோட்டார் சைக்கிளில், மனநோயாளிகளைத் தேடிச்சென்று கொடுக்க ஆரம்பித்தார். அப்படித் தொடங்கியதுதான் அக்ஷயா. அதே மதுரையில்தானே மணிமேகலை அள்ள அள்ளக் குறையாத தனது அக்ஷய பாத்திரத்திலிருந்து எடுத்து அழிபசி தீர்த்தாள்.

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் அந்த உணவை நாம் அளித்திடுவோம்" என்ற முனைப்புடன் கடந்த 8 வருடங்களாக ஆதரவற்றோருக்கு அன்னம் அளிக்கும் நற்பணியைச் செய்துவரும் அந்த இளைஞர் என். கிருஷ்ணன். ஜூன் 2002 அன்று 40பேருக்கு உணவளிப்பதாக ஆரம்பித்தது அந்தத் திட்டம்.


வெளிநாடு சென்று லட்சக்கணக்காகச் சம்பாதிக்க வேண்டிய மகன், இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கின்றானே என்று பெற்றோர் கவலைப்பட்டனர். "நான் செய்வது தவறாக இருந்தால் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன்" என்று சொன்ன கிருஷ்ணன் தனது தாய், தந்தையரை அழைத்துக் கொண்டு போய் தனது செய்வதைக் காட்டியிருக்கிறார். நெகிழ்ந்து போன கிருஷ்ணனின் தாய், "நீ இவர்களுக்குச் சாப்பாடு போடு. நான் இருக்கும்வரை உனக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடுகிறேன்" என்று கூறியிருக்கிறார். பெற்றோரின் ஆசியுடன் சேவையைத் தொடர்ந்தார் கிருஷ்ணன். இன்று தினம்தோறும் நூற்றுக்கணக்கான மைல் பயணம் செய்து, 400க்கும் மேற்பட்ட மனநோயாளிகளுக்கும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் மூன்று வேளை பசிபோக்கி வருகிறார். "இந்தப் பணி ஆரம்பித்த நாள்முதல் இன்று வரை ஒருநாள், ஒருவேளை உணவுகூடத் தவறியதில்லை" என்கிறார் அவர்.

மணி, கிருஷ்ணமூர்த்தி போன்ற நண்பர்கள் இந்தப்பணியில் கிருஷ்ணனுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். விடியற்காலை 4 மணிக்கே உணவு தயாரிக்க ஆரம்பிக்கின்றனர். காலை 7. மணிக்கெல்லாம் இரண்டு வேன்கள் உணவுப் பொட்டலங்களோடு கிளம்புகின்றன. 170 கி.மீ. தூரத்துக்கு மேல் உணவுப் பொட்டலங்களை வழங்கியபடி சுற்றி வருகின்றன. மதிய உணவு 11:30 மணிக்கும், இரவு உணவு 7 மணிக்கும் வினியோகத்துக்குச் செல்கின்றன. ஒவ்வொரு நாளைக்கும், ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு மெனு. "அவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் நம்மைப் போல வயிறாரச் சாப்பிட்டவர்கள். குடும்பத்தின் புறக்கணிப்பாலும், சமூகச் சூழ்நிலைகளாலும் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். நாம் சாப்பிடுவதைத்தானே அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அதுதானே நியாயம்!" என்கிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் பணி உணவு கொடுப்பதோடு மட்டும் முடிந்து விடவில்லை. மனநோயாளிகளுக்கு நகம் வெட்டுவது, முடி திருத்துவது, குளிப்பாட்டுவது என்று அனைத்துப் பணிகளையும் அவர் சளைக்காமல் செய்கிறார். அதற்காக அவர் முடிதிருத்தும் பயிற்சியையும் பெற்றிருக்கிறார். இதுபோன்றவற்றிற்காக மனநோயாளிகளை நெருங்கும்போது சிலர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். சிலரால் கிருஷ்ணனுக்குக் காயம் ஏற்பட்டதும் உண்டு. "இது என் சமூகக் கடமை. நம் வீட்டில் இப்படி ஒருவர் இருந்தால் நாம் அவர்களை கவனித்துக் கொள்ள மாட்டோமா? அதைப் போலத் தான் இதுவும்." என்கிறார்.

இதுமட்டுமல்ல. கேட்பாரற்று இருக்கும் அனாதைப் பிணங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் பணியையும் கிருஷ்ணன் செய்து வருகிறார். மதுரை மாநகராட்சியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும் இறுதிச் சடங்குகள் செய்யச்சொல்லி அவருக்கு அழைப்பு வருகிறது. உடலை அனுமதி பெற்று வாங்கி, குளிப்பாட்டி, தானே தன் கையால் கொள்ளி வைத்து உரிய முறையில் நல்லடக்கம் செய்கிறார். இவரது கையால் இதுவரை 300க்கும் மேற்பட்ட உடல்களுக்கு ஈமச் சடங்கு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வடமாநிலங்களிலிருந்து இங்கு வந்து சுற்றிக் கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட மனநோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களது முகவரியை விசாரித்து, குடும்பத்தாரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். பனிரெண்டுக்கும் மேற்பட்ட மனநோயாளிகளைக் குணப்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கிறார்.

"நான் பிச்சைக்காரர்களுக்கு உணவு கொடுப்பதில்லை. உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட மனநிலை குன்றியவர்களுக்கும்தான் உதவுகிறேன். அவர்களுக்கு பசித்தால் சொல்லத் தெரியாது. யாரிடமும் உணவோ, காசோ கேட்கத் தெரியாது. இதுபோல் ஒவ்வொருவரும் தாம் வாழும் பகுதியில் வசிக்கும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஒரு டீயும், பன்னுமாவது வாங்கிக் கொடுத்தால் அதுவே மிகப் பெரிய சேவை" என்கிறார் கிருஷ்ணன்.

ஆதரவற்ற மனநோயாளிகள், குறிப்பாகப் பெண்கள், சமூக விரோதிகளால் துன்புறுத்தப்படுவதுண்டு. பல சமயம் பாலியல் பலாத்காரத்திற்கும் ஆளாகிறார்கள். அதனால் கருத்தரிக்கும் இவர்கள் அதுபற்றிய உணர்வே இல்லாமல், சாலை ஓரத்திலேயே பிரசவிக்கிறார்கள். இத்தகைய பெண்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும், பிரசவத்திற்கான உதவிகளையும் தற்போது கிருஷ்ணன் செய்து வருகிறார். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை முறையாகத் தத்தெடுக்க ஏற்பாடு செய்கிறார். இப்பெண்களின் மற்றும் ஆதரவற்றோரைப் பராமரிக்க மதுரை சோழவந்தான் அருகே 2.6 ஏக்கர் நிலத்தில் 'அக்ஷயா ஹோம்' என்ற ஒரு மிகப் பெரிய சேவை இல்லத்தைக் கட்டி வருகிறார்.

பண வசதி கொண்ட ஒரு பெரிய நிறுவனம் அல்லது அரசாங்கம் செய்ய வேண்டிய பணியைத் தனி ஒருவராகக் கிருஷ்ணன் செய்து வருகிறார். இந்த நற்பணியில் நீங்களும் பங்குபெறலாம். நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு இந்தியாவில் வருமான வரிவிலக்கு உண்டு.

தொடர்பு கொள்ள: +91 98433 19933 - என். கிருஷ்ணன்

வலைத்தளம் : www.akshayatrust.org

Wednesday, May 26, 2010

மன்மோகன் சிங் ஒரு பார்வை

சுதந்திர இந்தியாவின் சரித்திரம் எழுதப்படும்போது,​​ தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் என்றும்,​​ ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் பிரதமர் பதவியில் நீடிக்க முடிந்த நேரு குடும்பத்தைச் சேராத முதல் நிர்வாகி என்றும்,​​ சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பிரதமர் என்றும் பதிவு செய்யப்படுமே தவிர,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொல்லிக் கொள்ளும்படியான சாதனை வேறு ஏதாவது இருக்குமா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.​

பதவியில் எத்தனை நாள்கள் இருந்தோம் என்பதைவிட,​​ எப்படிப் பதவி வகித்தோம் என்பதுதான் முக்கியம் என்பதை யாராவது நமது பிரதமருக்குச் சொன்னால் நலம்."


முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அரசின் முதலாண்டு நிறைவை ஒட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர், சுமார் 90 நிமிடங்கள் பொறுமையாக, தெளிவாக பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.


ஐந்தாண்டு கால ஆட்சியில்,​​ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள்.​ கூட்டணிக் கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டிய நிர்பந்தங்கள்.​ இடதுசாரிகளின் ஆதரவை இழக்க முடியாத தர்மசங்கடம்.​ ஆனால்,​​ இந்த முறை அப்படி எந்தவிதமான கட்டுப்பாடுகளும்தான் இல்லையே,​​ பின்னும் ஏன் இந்த ஓராண்டு ஆட்சியில் சாதனை என்று சொல்லிக் கொள்ளப் பெரிய அளவில் எதுவுமே இல்லை?

இந்த முறை மன்மோகன் அரசு முன்வைத்த எந்தவொரு முக்கியமான முடிவையும் செயல்படுத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று பத்திரிகையாளர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை.​
அணு விபத்து நஷ்டஈடு மசோதாவும் சரி,​​ மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் சரி,​​ நாடாளுமன்றத்தில் குறைப் பிரசவமாகி விட்டதே,​​ ஏன்?​ சர்க்கரை ஏற்றுமதி இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஐ.பி.எல்.​ ​ ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட தேசியவாத காங்கிரûஸப் பகைத்துக் கொள்ள முடியாமல்,​​ சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறதே,​​ ஏன்?

மேலே குறிப்பிட்ட எல்லாமே அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் பற்றியவை.​ இதில் பிரதமர் சமர்த்தர் அல்லர் என்று அவரே ஏற்றுக்கொள்வார்.​ ஆனால்,​​ நிதிநிர்வாகத்தின் மேதை என்று ​ ​ ​வர்ணிக்கப்படும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரும்,​​ முன்னாள் நிதியமைச்சருமான பிரதமர் மன்மோகன் சிங்கால்,​​ விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையே,​​ ஏன்?​

பங்குச் சந்தையிலிருந்து,​​ பிளாட்ஃபார வியாபாரம் வரை எதுவுமே நமது அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்கிற விபரீத நிலைமை அல்லவா ஏற்பட்டிருக்கிறது.​ "கார்ப்பரேட்' கொள்ளைகளும்,​​ குளறுபடிகளும்,​​ ஊழல்களும் எந்தவிதமான கட்டுப்பாடோ,​​ பயமோ இல்லாமல் தொடர்வதை வேடிக்கை பார்க்கும் மௌனியாக ஒரு பிரதமர் தொடர்கிறார் என்பதும்,​​ அவரது அரசில் அங்கம் வகிக்கும் பலர் இந்தச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதும் சாதனையா இல்லை வேதனையா?

தேசத்தை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் என்று மீண்டும் ஒருமுறை மாவோயிஸ்டு தீவிரவாதத்தை வர்ணித்திருக்கிறார் பிரதமர்.​ ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் பிரதமராகப் பதவி ஏற்றபோது இதையேதான் சொன்னார்.​ இப்போதும் சொல்கிறார்.​ ஆறு ஆண்டுகளாகியும் தான் மிகப்பெரிய சவால் என்று கருதும்,​​ ஒரு பிரச்னையைச் சமாளிக்க முடியாமல்,​​ விடைகாண வழி தெரியாமல் தவிக்கும் ஒருவர் நமது பிரதமராகத் தொடர்கிறார்.

பிரதமர் பதவிக்கு யாராவது விஷயம் அறிந்த ஆட்கள் வரமாட்டார்களா...? என்று ஏங்கிய கோடானுகோடி சாமான்ய மக்களில் நானும் ஒருவன். பொருளாதார புலி என்று வர்ணிக்கப்பட்ட மன்மோகன் சிங் பதவிக்கு வந்தவுடன் 'அப்பாடா' என்றிருந்தது. ஆனால் இன்று 'அடபோடா' என்றாகி விட்டது.

மற்றுமொரு...

மற்றுமொரு சோர்வு, மற்றுமொரு இடைவெளி, மற்றுமொரு தெளிவு, மற்றுமொரு எழுச்சி...

இதோ மீண்டும் உங்கள் முன்னே...

Iam BACK...