போபால் விஷ வாயு விபத்து! விபத்து என்று தற்செயலாகச் சொல்ல முடியாத படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பொறுப்பற்ற நிர்வாகம் விளைவித்த கோரம், பதினைந்தாயிரம் மக்கள் மாண்டனர் ஐந்து லட்சம் பேர்களுக்கு மேல் பாதிக்கப் பட்டனர்.
செத்துப் போனவர்களைவிட இப்போது வாழ்பவர்கள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 1999-ம் ஆண்டு போபாலில் ஆய்வு நடத்திய கிரீன்பீஸ் அமைப்பு கூறியது. இன்னமும் அந்த மண்ணில் சயனைடு நஞ்சு கலந்து கிடப்பதாகவும், நீர்நிலைகளில் அந்த நச்சு எச்சம் இருப்பதாகவும் கூறியது. இருந்தும்கூட, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாரன் ஆண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர், கைது செய்யப் படுகிறார்! வெறும் இரண்டாயிரம் டாலர் பிணைத் தொகையைக் கட்டிவிட்டு விடுவிக்கப் படுகிறார்.விசாரணைக்குத் திரும்புவதாக ஒரு வெற்று வாக்குறுதி! பத்தாவது குற்றவாளியாக யூனியன் கார்பைட் நிறுவனம்! தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப் பட்ட ஆண்டர்சனை, நீதி மன்றத்தின் முன் கொண்டு வர இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதோடு மட்டுமில்லை, தன்னுடைய சொந்த ஜனங்களைப் பாதுகாக்க எந்த நிவாரண நடவடிக்கையையும் இந்திய அரசு முயற்சிக்கவே இல்லை.
ஆனால் மக்களுடைய கோபத்தைத் தணிக்க, தாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ஒரு நாடகத்தை இந்திய அரசு திட்டமிட்டே அரங்கேற்றிய மாதிரித் தான் பின்னால் நடந்த சம்பவங்கள் அத்தனையும் சுட்டிக் காட்டுகின்றன.
1986 இல் அமெரிக்க நீதி மன்றத்தில் இருந்த இந்த வழக்கு இந்தியாவுக்கு மாற்றப்பட்டதே, பாதிக்கப் பட்ட ஜனங்களுக்கு இழைக்கப் பட்ட மிகப் பெரிய துரோகம். அதைவிட, 3300 கோடி டாலர்கள் நஷ்ட ஈட்டைக் கோரி வழக்குத் தொடர்ந்தது இந்திய அரசு., மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் 1989 இல் வெறும் நானூற்று எழுபது கோடி டாலர்களை நட்ட ஈடாகப்பெற்றுக் கொள்வதற்கு சம்மதிப்பதாக, நீதி மன்றத்திற்கு வெளியே செய்து கொள்ளப் பட்ட சமரசத் தீர்வாக இந்திய அரசு ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் என்ன நடந்திருக்கும்?
நாட்டு நலனைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகள், முதுகெலும்பில்லாத அரசு, அமெரிக்க நிர்பந்தத்தை எதிர்த்து நிற்க முடியாத கோழைத் தனம், அப்புறம் இருக்கவே இருக்கிறது, கண்ணசைவுக்கு ஆடினால் கிடைக்கும் சன்மானங்கள்!
உச்ச நீதிமன்றமே 1996 இல் இந்தக் குற்றச்சாட்டை நீர்த்துப் போகச் செய்கிற மாதிரியான ஒரு முடிவை எடுக்கிறது. வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு வரவழைக்க இந்திய அரசு அமெரிக்க நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. வழக்கம் போலவே குளறுபடிகளுடன்! இருபது வருடங்களுக்குப் பின்னால் அமெரிக்க அரசு, அந்தக் கோரிக்கையில் ஏதேதோ ஓட்டை இருப்பதாக, மறுத்து விடுகிறது.
இந்தக் கண்ணராவிகள் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! சம்மதம் சொல்லி வாங்கினார்களே நட்ட ஈடு, அதையாவது பாதிக்கப் பட்டச மக்களுக்கு நிவாரணமாக வழங்கினார்களாமா?
அதுவும் இல்லை! இன்றைக்கு வரைக்கும் இல்லை! பெயரளவுக்கு ஒரு மருத்துவ மனை, சிகிச்சை என்று ஆரம்பித்ததோடு சரி! நட்ட ஈட்டை இன்னும் காலதாமதம் செய்யாமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இருபத்து நான்கு வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு சொல்லி இருக்கிறது!
நச்சுவாயுவின் கோரம் இறந்த பதினைந்தாயிரம் மக்களோடு முடிந்து விட்டதா? இல்லை! இன்னமும் பூட்டிக் கிடக்கும் யூனியன் கார்பைட் ஆலையின் உள்புறத்தில் பாதரச நஞ்சுக் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமலேயே அப்படியே தான் இருக்கின்றன! கிரீன் பீஸ் இயக்கத்தினர் காட்டும் அக்கரையில் ஒரு கோடியில் ஒரு பங்கைக் கூட, இந்திய அரசு தன்னுடைய சொந்த ஜனங்களுடைய நலனில் காட்டவில்லை!
அரசியல் வாதிகளை நம்ப முடியவில்லை! அரசு இயந்திரம், ஊழியர்களை நம்பிப் பயனில்லை! நீதித் துறையாவது கொஞ்சம் நீதி கிடைக்கச் செய்யுமா என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கு, நீதித் துறையும் பலவீனப் பட்டுப் போயிருப்பதையே சமீப காலத் தீர்ப்புக்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.
இதை இங்கே மீண்டும் மன்மோகன் சிங் நிறைவேற்றத் துடிக்கிற அணு உலை விபத்துக்கான நட்ட ஈட்டு மசோதாவோடு சேர்த்துப் பாருங்கள்!
அணுஉலைகள் விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவுக்கு பரவலாக எழுந்த கடும் எதிர்ப்புகள் மிகமிக நியாயமானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது நேற்று வந்த தீர்ப்பு.
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சறுக்கல். இவர்கள் செய்துவிட்டுப் போய் விடுகிற கிறுக்குத்தனங்களை, ஜனங்கள் அல்லவா சுமந்தாக வேண்டி இருக்கிறது?
பிரச்சினை வந்தால் சமாளிக்கும் திறமை, உறுதி, நேர்மை,அப்புறம் கொஞ்சமாவது முதுகெலும்பு இருக்கிறதா என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கே அது தெரியாது!
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment