மீண்டும் மீண்டும் நான் பின்வரும் இந்த கருத்தை பதிவிடும் நோக்கமே, அதன் முக்கியத்துவத்தை பல பேருக்கு கொண்டு சேர்ப்பது தான்.
தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள்...
என் மனதில் தோன்றியதை இங்கே பதிவிடுகிறேன்...
* இன்று எங்கள் கிராமத்தில் சுமார் 45-50 வயதுக்கு குறைவான யாரும் விவசாயத்தில் இல்லை.
* விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பங்களிலிருந்து 35 வயதிற்குட்பட்ட எவர் ஒருவரும் இன்று விவசாயத்தில் இல்லவே இல்லை. ஒன்று படித்து வெளியூரில், வெளிநாட்டில் வேலையில் இருந்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது பக்கத்து நகரங்களில் விவசாயம் தொடர்பில்லாத வியாபாரம், தொழிலில் இருக்கிறார்கள்.
* இன்று விவசாயம் நிலம் வைத்திருப்பவர் அல்லது விவசாய நிலத்தில் உழைப்போரின் ஒரே இலக்கு தன் பிள்ளைகளை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் அல்லது ஒரு தொழில் ஆரம்பித்திட வேண்டும்.
*விளைவித்த தக்காளி கிலோ நாலாணாவிற்கு விற்க வேதனைப்பட்டு, கூடை கூடையாய், வருடா வருடம் நடுச் சாலையில் கொட்டி அழிக்கப்படும் அவலம் இன்றும் இருக்கத்தானே செய்கிறது. எந்த அரசாங்கம் அக்கறையோடு தேவையறிந்து, விவசாயிக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது அல்லது உதவியிருக்கிறது?
*எப்போது தேவை அதிகமாகும், எப்படி ஏற்றுமதி செய்வது அல்லது எப்படி அதை பதப்படுத்திப் பாதுகாத்து சரியான நேரத்தில் விற்பது என்று?
(2009 ஆம் ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் சர்க்கரைத் தட்டுப்பாடு வருமென்று, நிறைய வெளிநாட்டு விவசாயிகள் முன்னரே அறிந்து, அதிக விளைச்சலை உருவாக்கி, நமக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றனர்)*கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மற்றும் வியாபார மேலாண்மை படிப்புகளின் எண்ணிக்கையில் ஒரே ஒரு சதவிகிதமாவது விவசாயக் கல்லூரிக்கோ அல்லது விவசாயம் குறித்த படிப்புகளுக்கோ கவனம் கொடுக்கப் பட்டிருக்கிறதா?
இப்போது நிலம் வைத்திருப்போர் அல்லது உழைப்போரின் உழைக்கும் திறன் இன்னும் அதிகபட்சம் 10-15 ஆண்டுகளில் மங்கித்தானே போய்விடும். அதன்பின் அந்த நிலங்களில் யார் விவசாயம் செய்வது?
சமீபத்தில் கண்டமேனிக்கு திறக்கப்பட்டது பொறியியல் கல்லூரிகளே. சிவில் படித்தார்கள், சாரம் போட்டு வருடக்கணக்கில் கட்டியதை, இன்று எங்கேயோ செய்து பத்திரமாக எடுத்து வந்து கிரேன் வைத்து தூணின் மேல் ஏற்றி அழகாகப் பொருத்தி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆச்சரியமான ஒன்றுதான், தவறேதுமில்லை. இது போல் ஒவ்வொரு துறை பிரிவிலும் படித்தவர்கள் பிரமிக்கக்கூடிய அதிசயத்தை விநாடி நேரத்தில் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன என்னவோ படிப்பென்று சொல்லி, எத்தனை எத்தனையோ கல்லூரிகளைத் திறக்கப்பட்டதே... வளர்ச்சி என்ற அடிப்படையில், விவசாய பூமியை விலகிச் சென்ற மனிதர்களால் தங்கள் விஞ்ஞானத்தால், அரசியலால் அல்லது ஏதோ ஒரு தொழிலால் ஒரே ஒரு நெல் மணியை உருவாக்க முடியுமா?
ஐக்கிய நாடுகள் சபை ஒரு மனதி இறுதியில் 'இன்னும் நாற்பது வருடங்களில் இந்தியாவிலும், சீனாவிலும் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிடில் மிகப் பெரிய உணவுத் தட்டுப்பாடு வருமென்று' சுட்டி காட்டி இருக்கிறது.. எனக்கென்னமோ அதற்கு நாற்பது வருடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
காடுகளை அழிப்பதில் சிறிதும் குற்ற உணர்வில்லாத நாம், பருவ மழை பொய்த்துப் போவதைப் பற்றி என்றாவது, ஒரு விநாடி மனம் கலங்கியிருகிறோமா?
காமராஜருக்குப் பின் தமிழ்நாட்டில், யாராவது அணை கட்டியிருக்கிறார்களா?
சாகடிப்பட்ட அணைகள் ஒன்றா, இரண்டா? சாமாதி கட்டப்பட்ட ஏரிகள், குளங்கள் எத்தனை ஆயிரம் இருக்கும்?
இது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாதவர்களைத் தானே மாற்றி மாற்றி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறோம்.
விவசாயத்தை, விவசாயிகளை வஞ்சித்த உலகம் அதன் பலன்களை அனுபவிக்கப் போவது மிக அருகாமையில் தான் இருக்கிறது.
அப்போது பசிக்கும் வயிற்றுக்கு யார் வந்து சோறு போடுவது.
Thursday, June 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Wat u have said is fate, but we stand at a point and do rapidly for farming and agri revolution, our childrens will be able to survive, good ninformation. David 9790681447
Post a Comment