Thursday, July 22, 2010

நேர்மைக்கு கிடைத்த வெற்றி...



குடும்பத் தகராறால் ரூ.300 கோடி விரயம்:

"குறைந்தவிலையில்,உயர்ந்த தரம் வாய்ந்த கேபிள் டிவி இணைப்பு கொடுப்பதற்கு" என்று மக்களின் காதில் பூசுற்றி துவங்கப்பட்ட நிறுவனம்தான் அரசு-கேபிள் டி.வி. உண்மையில், ஆளுங்கட்சித் தலைவரின் வாரிசுகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போட்டியின் விளைவுதான் அரசு-கேபிள் டி.வி. ஆகஸ்ட் 2007ல் துவங்கப்பட்ட அரசு-கேபிள் டி.வி, ஜுலை 2008ல் ஒளிபரப்பைத் துவங்கியது. மிகவிரைவாக அதிகாரபூர்வமில்லாத மூடுவிழாவைக் கண்டது. குடும்பத் தகராறு தீர்ந்துவிட்டது. அரசுகேபிள் டிவிக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. குடும்பத் தகராறால் அரசு கேபிள் டிவியில் விரயமாக்கப்பட்ட மக்கள்வரிப் பணம் ரூ.300கோடி !!

தனியாரின் கைக்குப்போன அரசின் சொத்து ரூ.700கோடி:
அரசுநிறுவனமான எல்காட்(ELCOT) தனியாருடன் இணைந்து உருவாக்கியதுதான் "எல்நெட் சாப்ட்வேர் கம்பெனி(தரமணி, டைடல் பார்க்கில் உள்ளது)". இந்த எல்நெட் நிறுவனம், ETL என்ற துணை நிறுவனம் ஒன்றை நிறுவுகிறது. எப்படி? கோடிக்கணக்கில் அரசுப் பணத்தை செலவழித்து நிலம்வாங்கி, அரசின் சொத்துகளை ரூ.81கோடிக்கு அடமானம் வைத்துத்தான். பழைய மகாபலிபுர சாலையில் உள்ள இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.700கோடி. இந்த நிறுவனம் தற்போது முழுக்க முழுக்க தனியார் ஒருவரின் சொத்தாகிவிட்டது. இதனால் களவுபோன மக்கள்வரிப்பணம் ரூ.700கோடி !!

ஊழலை கண்டுபிடித்ததால் தண்டிக்கப்பட்ட அதிகாரி:

எல்காட்,அரசு கேபிள் டி.வி யில் மேலாண் இயக்குனராகப் பணியாற்றிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி , மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இந்த நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்,முறைகேடுகளைத் தட்டிக்கேட்டார். ஆதாரப்பூர்வமாக ஊழலை அம்பலப்படுத்தினார். கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய அத்தனை இடங்களிலும் நேர்மையாக,மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர் இவர்.

ஊழலுக்கு உடன்படாத இவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுகள் என்ன தெரியுமா? தொடர்ச்சியான பணிமாற்றம்(Transfer), வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று பொய்யான விசாரணை, பதவி உயர்வுக்குத் தடை ! கடைசியாக இன்று பனி இடை நீக்கம்.

மடியில் கணமில் லாததால், அரசின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை இவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எல்காட்,அரசு கேபிள் டி.வியில் நடைபெற்ற ரூ.1000கோடி ஊழலை 150பக்க ஆவணத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் !!

அரசு,பொதுமக்கள் நலன் கருதி அவர் எடுத்த நேர்மையான நடவடிக்கைகளுக்காக இன்று நீதிமன்றத்தின் படியேறி தன்னை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அவர் - திரு.உமாசங்கர்.ஐ.ஏ.எஸ்

தஞ்சை மாவட்ட ஆட்சியாளராக இருந்த பொழுது, அங்கு மின் ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தியவர்.. பின் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது(99-01) திருவாரூரை இந்தியாவின் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட முதல் மாவட்டமாகியவர். இவர் தான் இன்று நேர்மைக்காக தண்டிக்கப்பட்ட அதிகாரி.

ஐ.ஏ.எஸ் போன்ற உயர் அதிகாரப் பணிகளில் உள்ளவருக்கே இந்த நிலை என்றால்,எந்த செல்வாக்கும் இல்லாத சாமானியனுக்கு எப்படி கிடைக்கும் நீதி !!? நேர்மையான ஒருசில அதிகாரிகளும் இப்படி தண்டிக்கப்படும்போது, மற்றவர்கள் ஊழல்,முறைகேடுகளை எதிர்த்து நிற்க எப்படி முன்வருவார்கள்....?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுதே காதினிலே...

No comments: