இன்றைய தினமணியில் வந்த ஒரு செய்தி...
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிகளில் பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் வந்து சேராததால் பல ஏக்கர் நிலங்கள் தரிசாகிவிட்டன. விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை வீட்டுமனைகளுக்காக விற்று வருகின்றனர்.
இம் மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்கு கடந்த ஒரு மாதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தெங்கம்புதூர், கோட்டார், ராஜாக்கமங்கலம், முட்டம் கால்வாய் பகுதிகளுக்கு தண்ணீர் சரிவர வந்து சேரவில்லை.
முக்கிய கால்வாய்களை கோடையில் முறையாகத் தூர்வாரி செப்பனிடாமல்விட்டதாலும், தனியார் ஆக்கிரமிப்புகளாலும் கால்வாய்கள் சுருங்கி தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனந்தனார் கால்வாயின் கிளைக் கால்வாயான தெங்கம்புதூர் கால்வாய் வழியாக கன்னிமூலக்குண்டு ஓடைக்குளத்துக்கு தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்த குளம் ஒரு ஏக்கர் 4 சென்ட் பரப்பளவு கொண்டது. இதையொட்டிய பாசன பரப்பளவு 15 ஏக்கர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் இங்கு பாசனப் பரப்பு குறைந்தது.
கடந்த கும்பப்பூ பருவத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இங்கு நெற்பயிர் பாசனம் நடைபெற்றது. குளத்தின் மடை மற்றும் குளம் ஆழப்படுத்தும் பணி 2002-2003-ம் நிதியாண்டில் கண்துடைப்பாகவே செய்யப்பட்டது. குளத்தின் மடையில் தற்போதும் உடைப்பு உள்ளது. இதை உடனுக்குடன் சீரமைக்கவில்லை என்பதாலும், குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயை புனரமைக்காததாலும் தண்ணீர் வரத்து குறைந்தது.
பாசனப்பரப்பு குறைந்து பல ஏக்கர் நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளதால், தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் இவற்றை விலைபேசி பிளாட் போட்டுள்ளனர்.
இங்குள்ள கால்வாயை ஓட்டியுள்ள நில உரிமையாளர்கள் வீட்டுமனைகளுக்கு நிலத்தை விற்க மண்ணைக் கொட்டி மேடாக்கியுள்ளதால் கால்வாய் குறுகி குளத்துக்கு தண்ணீர் வரவில்லை.
மேலும், கால்வாய் கரையோரம் வசிப்போர் குப்பைகள் மற்றும் கழிவுகளை கால்வாயில் கொட்டுவதாலும் கால்வாய் பாழடைந்துள்ளது. இதனால் பறக்கை கால்வாய், மணக்குடியான் கால்வாய் போன்ற நிலைக்கு இக் கால்வாயும் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கன்னிமூலக்குண்டு ஓடைக்குளத்துக்கு தண்ணீர் வரும் என நினைத்து அப்பகுதி விவசாயிகள் நடப்பு கன்னிப்பூ பருவத்துக்கு நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்திருந்தனர். சில விவசாயிகள் நாற்று பாவியிருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் வந்து சேராததால், நெற்பயிர் கருகும் அபாயம் உருவாகியுள்ளது.
தெங்கம்புதூர், புத்தளம் பகுதிகளில் 700 ஏக்கருக்குமேல் நெல் விவசாயம் இருந்தது.
தண்ணீர் இல்லாத காரணத்தால் அவற்றில் 500 ஏக்கருக்குமேல் தரிசாகிவிட்டன. விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் வீட்டுமனை நிலங்களுக்காக விற்று வருகின்றனர் என்று வேதனை தெரிவிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு செயலர் சி. பொன்னுலிங்க ஐயன்.
இந்த பிரச்னைகள் தொடர்பாக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆளுநருக்கு தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ராஜாக்கமங்கலம், முட்டம் பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இப் பகுதிகளில் கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை என்பதால் 100 ஏக்கர் அளவுக்கு நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
சாந்தபுரம் கால்வாயை தூர்வாரி செப்பனிடவில்லை. அழகன்விளை, முஞ்சிரவிளை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயத்துக்குக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.
இவ்வாறு கடைவரம்பு பகுதி பாசனத்துக்கு தண்ணீர் வராததால் நெல் விவசாயத்திலிருந்து தென்னை விவசாயத்துக்கு பலர் மாறி வருகிறார்கள். நெற்பயிர் விவசாயப் பரப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்து வருகிறது என்று மாவட்ட நஞ்சில்லா வேளாண்மை சங்கப் பொருளாளர் டி. தேவதாஸ் தெரிவித்தார்.
நெல் விவசாயத்தை உயிர்ப்பிக்க ஆட்சியாளர்களும், மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.
கடைமடை பகுதிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் வரவில்லை என்பதால், தெங்கம்புதூர் பகுதியில் கருகும் அபாயத்தில் உள்ள நெற்பயிர்.
விவசாய விளைநிலங்கள் வீட்டு மனைகலாகும் அவல நிலை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நகரமயமாக்கல் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு இது.
சமீபத்தில் எனது சொந்த ஊருக்கு செல்லும் போது சாலையின் இரு மருங்குகளிலும் ஏராளமான புதிய புதிய நகர்களின் பெயர்ப் பலகைகள். பல மனைப் பிரிவுகள். சின்னஞ்சிறு கிராமத்தில் கூட புதிதாக ஏதோ ஒரு நகருக்கான பெயர் பலகை. சமீப சில மாதங்களில் நடந்து முடிந்துள்ள நிகழ்வு இது.
இதில் கொடுமை என்னவென்றால், இந்த புதிய வீட்டுமனைப் பிரிவுகள் இருந்த இடம் சில மாதங்களுக்கு முன்பு வரை பச்சை பசேல் என நெல் வயல்களாக இருந்தது தான். நஞ்சை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது என்று அரசு விதி இருப்பதாக தெரிகிறது. இருந்தும் எப்படி, எதற்காக, இவ்வாறு மாற்றினார்கள் என்பதே புரியவில்லை.
விவசாயம் ஒரு இலாபகரமான தொழிலாக இல்லாமல் போனது தான் இதற்கான காரணம் என்று நினைக்கிறேன். வந்த விலைக்கு நிலங்களை விற்றுவிட்டு நகரங்களை நோக்கி மக்கள் வேலை தேடி கிளம்பி விடுகின்றனர்.
இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் அண்ணல் காந்தி. இந்தியாவில் இன்னும் கொஞ்சம் காலத்தில் கிராமங்களே இருக்கப் போவதில்லை.
இதயம்...???
No comments:
Post a Comment