Wednesday, November 3, 2010

இந்தியா ஊழல்...

1,39,652,00,00,000.

ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?

இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.

தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.

தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.

பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். அதுவும் செய்யவில்லை.

அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும். செய்ய வில்லை.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும். அதற்கும் பதில் இல்லை.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.

இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.

ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன;

மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பார்த்து கொண்டிருக்கிறோம், பார்த்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க இந்தியா...

No comments: