நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.
ஒன்பத்துவேலி. தஞ்சை ஜில்லா,பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் வழியே சென்றால் வரும் அழகிய கிராமம். நான் பிறந்து,வளர்ந்து, பள்ளிப்பருவம் வரை சுமார் 18 ஆண்டுகாலம் வாழ்ந்த ஊர். பின் கல்லூரி,வேலை என பல்வேறு காரணங்களினால் ஊரில் வசிக்க பாக்கியம் இன்று வரை இல்லை.
எங்கள் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பிடி மண்ணிலும் என் கால் பதிந்திருக்கும். நான் செல்லாத வீடே இல்லை, நாங்கள் விளையாடாத விளையாட்டே இல்லை.
கிரிக்கெட், கிட்டிப்புள், பலுங்கி, பம்பரம், கண்ணாமூச்சி, கபடி, ஏழு கல் மலை, பிள்ளையார் பந்து, volley ball, shuttle cock, கொக்கோ, கல்லா மண்ணா, கரண்ட், நொண்டி, நாடு, நிழல் மிதி, சீட்டுக்கட்டு, கேரம், நாலு தூண், தாயம், கொலகொலையா முந்திரிக்காய், பாட்டுக்கு பாட்டு என நினைவிற்கு தெரிந்தவை இவை. கிரிக்கெட்டிலேயே throw, bowling, one pitch, fultoss என விதவிதமாக ஆடுவோம். தெரு, திண்ணை, கொல்லை, ஆறு, கோவில், வயல் என ஆடாத இடமில்லை.
தினமும் மாலை விளையாடுவது போக சனி, ஞாயிறு நாட்களில் காலை முதல் இரவு வரை நீளும். கோடை விடுமுறை என்றால் தொலைந்தது ஊர். வெயில் அனைத்தும் எங்கள் தலையில் தான் விழும்.
காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் கரையோரத்தில் இருப்பதால், எங்கள் ஊருக்கு beech ஆறு தான். எங்களை போல என் ஊர் மக்கள் பல பேருக்கு வயல் அக்கரையில் தான் உள்ளது. எனவே ஆறு வழியாக கடப்போரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகமாக வரும்பொழுது 2 கி.மீ. சுற்றி பாலம் வழியாக போக வேண்டும். கோடை காலத்தின் மாலை நேரங்களில் ஆறே ஜெகஜோதியாக இருக்கும். தினமும் இல்லை என்றாலும் வாரம் இரண்டு, மூன்று முறையாவது ஆற்றில் குளித்து கும்மாளம் போடுவோம். ஆடி பெருக்குக்கு வணங்குவது, மாடு,ஆடு,நாய் என இறந்த விலங்கினங்களை ஆற்றில் இழுத்து விடுவது,திருவிழா களம், கரையோரத்தில் சுடுகாடு கொட்டகை என ஊர் மக்களின் வாழ்க்கையுடன் ஒட்டி இணைந்து விட்டது எங்கள் ஊர் ஆறு.
உடம்பு சரி இல்லை என்றாலோ, விபத்து என்றாலோ வந்து குவியும் விசாரிப்புகள்,அறிவுரை , கேள்விகளுக்கு பதில் சொல்லி தாளாது. இன்று கூட நான் ஊர் சென்றால் 'வாங்க தம்பி எப்போ வந்தீங்க? என்ற கேள்விக்கு பதில் சொல்லியே வாய் வலித்து போகும். முக்கால் வாசி ஊரே சொந்த பந்தமாக இருக்கும். எந்த வீட்டில் எத்தனை பேர், யார் யார் என அத்தனையும் அனைவருக்கும் அத்துப்படி. (இன்றோ பெங்களூரில் என் பக்கத்தில் வீட்டில் இருப்பவரின் பெயரே தெரியாது,ஒரு வார்த்தை பேசியது கிடையாது. இத்தனைக்கும் அவரும் தமிழர்)
ஊரில் மொத்தம் ஐந்தாறு தெருக்கள் மட்டுமே இருந்தாலும் 'கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்' என்ற கூற்றின் ஏற்ப நான்கு கோவில். உதவி பெரும் துவக்க பள்ளி , அங்காடி, பால்வாடி, அஞ்சலகம் என சற்றே வளர்ந்த கிராமம். ஆனால் பேருந்து வசதி ஒன்றே ஒன்று தான், அதுவும் நான்கே நான்கு முறை ஒரு நாளிற்கு.அவ்வளவே.
கோடை விடுமுறைக்கு அனைவரது வீட்டிற்கும் விருந்தாளிகள் வருவர். ஊரே திருவிழா கூட்டம் போல் இருக்கும். (கோடை விடுமுறை பற்றி நிறைய இருப்பதால் அதை தனி பதிவில் பார்ப்போம்)
அப்புறம் பசங்க.எங்கள் செட்டில் பதினைந்து பேர் இருப்போம்.பண்டிகை நாட்களில் இருபதை தாண்டும். என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே நாள் முழுக்க பேசுவோம். வீட்டில் கேட்டால் சொல்ல தெரியாது. கிரிக்கெட் tournament போனால் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுவோம். ஆனால் ஒரு tournament விட மாட்டோம்.
நடை பயின்ற வீடு, சைக்கிள் கற்று தந்த சாலை, சோறூட்டிய சொந்தம் என அத்தனையும் அளித்த ஊர் எனக்கு உலகத்தையே அறிமுக படுத்தியது.இங்கே அருகில் நீங்கள் காணும் slideshow கூட அக்மார்க் ஒன்பத்துவேலி தான். நான் நேசிக்கும், நான் காதலிக்கும், நான் பெருமைப்படும் எனது ஊருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
இப்ப புரியுதா முதல் வரியின் அர்த்தம்.
Thursday, August 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உங்கள் ஊரைப்ப்ற்றியும் உங்களின் விளையாட்டைப்பற்றியும் படிக்கையில் நானும் சற்று நேரம் மெய் மறந்து போனேன், எனக்குள் பழைய நினைவுகள் ஓடியன............... உங்களின் அடுத்த பதிப்பில் உங்களின் கோடை விடுமுறையைப்பற்றி ஆவலாய் காத்திருக்கிறேன் .....
நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்பது எனக்கு புரிந்தது.....
sriram, Are you brother of Jayashri and Charu??
-Vidhya
Post a Comment