பொத்தாம் பொதுவாக இந்தக் குற்றச்சாட்டை நான் முன் வைக்கவில்லை. அரசுக்கு எரிவாயு எடுத்துத் தரும் காண்டிராக்டராக உள்ளே நுழைந்து, இப்போது அந்த எரிவாயுவுக்கே சொந்தம் கொண்டாடும் அம்பானிகள் தொடங்கி, தங்கள் ஊதாரித்தனம், மோசமான நிர்வாகத்தால் நஷ்டப்பட்டு அதற்கும் அரசிடம் நஷ்டஈடு கேட்டும் தனியார் விமான நிறுவனங்கள் வரை ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தனியார் தொழில்கள் என்பவை முழுக்க முழுக்க லாபநோக்கத்தில் இயங்குபவை. இதில் பொதுமக்கள் நலன் என்பது பூஜ்யமே. ‘அடடா… மக்கள் நன்றாக இருக்க வேண்டுமே என்ற நோக்கத்தில் எந்த முதலாளியும் இன்று தொழில் செய்யவில்லை. வேறு வழியே இல்லாமல், வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்தில் மக்களைத் தள்ளும் வேலையில்தான் தனியார் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
எனவே இதில் வரும் லாபமும் நஷ்டமும் அவர்களையே நூறு சதவிகிதம் சாரும். அந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் வரும்போது மூடிக்கொண்டு போக வேண்டியதுதானே தவிர, மீண்டும் மக்கள் பணத்தை லம்பாகக் கொள்ளையடிக்க வாய்ப்புத் தேடக் கூடாது!
தனியார் விமான நிறுவனங்கள் சலுகைகக் கட்டணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதில்லை. மாறாக 100 சதவிகித இறுதிநிலை லாபம் (Marginal profit) வைத்தே இயக்குகிறார்கள். இந்த விமான நிறுவனங்களுக்கு அரசு அளித்த எரிபொருள் சலுகை உள்ளி்டட எதையும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகச் சேர அனுமதித்ததே இல்லை. எல்லா நேரத்திலும் லாபம் முழுமையாக தங்களுக்கு வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். இப்போது நிலைமை சரியில்லை என்று புலம்புகிறார்கள். அதாவது லாபம் குறைந்துவிட்டது. அதை தாங்க முடியவில்லையாம். எனவே மக்கள் பணத்திலிருந்து தங்களுக்கு 52000 கோடி ரூபாக்குமேல் சலுகை மற்றும் உதவி நிதி வேண்டுமாம்.
இல்லாவிட்டால் ஸ்ட்ரைக் செய்வார்களாம்…
எப்படி இருக்கு இந்த நியாயம்?
தனியார் விமான நிறுவன விமானங்களில் பயணக்கட்டணம் அதிகம் என்பதற்காக அதைப் பாதியாகக் குறைக்குமாறு பயணிகள் போராட்டம் நடத்தினால் ஏற்பார்களா… அல்லது, சில மாதங்களுக்கு முன்பு வரை அரசு அளித்த மொத்த சலுகையையும் தாங்களே ஏகபோகமாய் அனுபவித்து கொள்ளையடித்தார்களே… அதை திருப்பித் தரச் சொன்னால் தருவார்களா…
அட… இன்று நஷ்டத்தில் அரசுக்கு பங்கு தர முன்வருபவர்கள், முன்பு சம்பாதித்த லாபத்தில் சரி பாதியை அரசுக்குத் தருவார்களா…
இன்றைக்கு நஷ்டம் என்றால், நேற்று வந்த லாபத்தில் அதைச் சரிக்கட்டிக் கொண்டு தொழிலைத் தொடர்வதுதானே வியாபார தர்மம்?
அப்படியும் நஷ்டத்தைத் தாங்க முடியாவில்லை என்றால் இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதானே… எதற்காக அந்தத் தொழிலைத் தொடர வேண்டும்?
பெரும்பணக்காரர்கள் தவிர, பிற மக்கள் ஏன் விமானங்களைப் புறக்கணிக்கத் துவங்கினார்கள் என்பதை இவர்கள் யோசிக்க வேண்டும்!
சற்றுமுன் கிடைத்த தகவல் :
தனியார் விமான நிறுவன வேலை நிறுத்தம் வாபஸ் :
வருகிற 18ந் தேதி தனியார் விமான சேவை நிறுவனங்கள் சார்பில் நடக்க இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த வேலை நிறுத்த அறிவிப்பை ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர்ஸ், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட 8 பெரிய தனியார் நிறுவனங்கள் வெளியிட்டு இருந்தன.
இதற்கு கடும் தெரிவித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என்றும், மீறி ஈடுபட்டால், மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தார்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளின் சிரமத்தை போக்குவதற்காக ஸ்டிரைக் நாளன்று கூடுதல் விமானங்களை இயக்கப்போவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இண்டிகோ விமான சேவை நிறுவனம் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தது. எனினும் மற்ற நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் கலந்துகொள்வதில் உறுதியாக இருந்தன.
இதனிடையே, நேற்று ஸ்பைஸ் ஜெட் மற்றும் எம்.டி.எல்.ஆர். ஆகிய தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்தன. இதனால் போராட்டத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு தனியார் விமான சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு 18-ந் தேதி நடத்த இருந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தன.
No comments:
Post a Comment