Monday, August 17, 2009

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி!

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் போதிய அளவு மழைப் பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீரைக் கட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இம்மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறதென அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' தனது ஆய்வறிக்கையில்
எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தேசிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 177 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த மாவட்டமும் இடம்பெறவில்லை. ஆனால், தற்போது போதிய மழையில்லாததால் தமிழகமும் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.


மழை குறைவு... தென்மேற்கு பருவமழையின் மறைவுப் பிரதேசமாக தமிழகம் உள்ளது. இதனால், நடப்பு பருவத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை தமிழகத்தில் மழைப் பொழிவு இயல்பான அளவை விட குறைவாகவே இருந்தது.

பெரும்பாலான மாவட்டங்களில் கோடையைப் போல இன்னமும் வெயில் வாட்டுகிறது. இதனால் வறண்ட காலநிலை நிலவுகிறது.


கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பான அளவை விட மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளது.

இவை தவிர, சென்னை, அரியலூர், நாமக்கல், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர்
ஆகிய 13 மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ளது.

இதனால், இம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில், வறட்சி தலைதூக்கியுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி... மழைப் பொழிவு குறைந்ததால் ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டமும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது.


கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வறட்சி நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் உள்ளது. இதனால் கடல் நீர், நிலத்தடியில் புகுந்து உப்பு நீராகும்.


வடகிழக்கு பருவமழை வலுத்தால் மட்டுமே இந்த அபாயத்தைத் தவிர்க்க இயலும்.

ஆனால், குளிர்பானங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், குடிநீர் பாட்டில்கள், கேன்கள் விநியோகிக்கும் வர்த்தக நிறுவனங்கள் பரவலாக நிலத்தடி நீரைக் கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் தனது இஷ்டம் போல பயன்படுத்தி வருகின்றன. எனவே இந்நிறுவனங்கள் நிலத்தடி நீரைச் சுரண்டுவதைத் தடுக்க விதிகளைப் கடைபிடிக்கிறதா என்பதைக் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும்.

சென்னையில் குடிநீர், சமையல் தேவைக்காக மட்டும் நபருக்கு தினமும் 10 முதல் 20 லிட்டர் தண்ணீர் தான் செலவிடப்படுகிறது.

ஆனால் நீராடுதல், கழிப்பறைகளின் பயன்பாட்டுக்குத் தான், தினமும் நபருக்கு 60 முதல் 210 லிட்டர் தண்ணீர் செலவு செய்யப்படுகிறது.

என்ன செய்ய ... ?

நெஞ்சு பொறுக்குதில்லையே...

No comments: