Saturday, May 7, 2011

சொந்தம்

 என அக்கா மகனுக்கு 3 வயது, அவனுக்கு தெரிந்த சொந்தம் அம்மா அப்பாவை தவிர தாதா,பாட்டி,மாமா அவ்வளவே. இன்றைய குழந்தைகள் கிட்ட தட்ட அனைவரும் இப்படியே. அந்நிய கலாச்சாரத்தாலும், பணம் ஈட்டுவதே ஒரே நோக்கமாக எந்திர வாழ்க்கை, சுயநலம், குறுகிய மனப்பான்மை போன்றவற்றின் விளைவு. ஆனால் பாதிக்கபடுவது நமது சந்ததியினர் தானே.

எனக்கு தெரிந்த சித்தப்பா,சித்தி,பெரியம்மா,பெரியப்பா, அத்தை, மாமா, மாமி என சொந்த பந்தகளின் முறை கூட இன்றைய தலைமுறைக்கு தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்பாவுடன் கூடப்பிறந்த தம்பிகூட இன்று தூரத்துச் சொந்தமாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். இதற்கு நானும் பலிகடா.

கால ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவும், பொருளாதார வசதியில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வேகத்திலும் கிராமத்தைவிட்டு வெளியேறி நகரை நோக்கி ஓடியவர்களில் பெரும்பாலானோர், அந்த வேக ஓட்டத்துக்குப் பழகி, அதை விரும்பி ஏற்று மீண்டும் அங்கேயே தங்களின் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள் என்பதும் உண்மை.

உங்களின் குடும்பம் வசதியாக வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதும் சரிதான். அதற்கு நீங்கள் நகரத்தில் இருந்துகொண்டு பகல், இரவு பார்க்காமல் உழைப்பதும் சரி. ஆனால், அந்த வேகத்தை இப்பொழுதே உங்களின் செல்ல மகன் அல்லது மகள் மீதும் செலுத்துவது சரியா என்று கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை.



மெட்ரோபாலிட்டன் சிட்டிகளிலுள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பலர், தங்களின் ரத்த உறவுகளையும், தூரத்து உறவுகளையும் பற்றித் தெரியாமலேயே வளர்ந்து வருகிறார்கள் அல்லது வளர்க்கப்பட்டு வருகிறார்கள். கிராமத்தில் சொந்தக்காரங்க இருக்காங்கன்னு எங்க அப்பா சொல்லியிருக்காங்க என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த விஷயம். முன்பெல்லாம் நகர வாழ்க்கை சூழலில் சிக்கியிருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கோடை விடுமுறை எப்பொழுது விடும் என்று ஆவலுடன் காத்திருந்து, விடுமுறை விட்டவுடன் உடனே குடும்பத்துடன் கிராமத்துக்குச் சென்று தங்கள் மூத்த குடும்ப அங்கத்தினரின் வீடுகளில் தங்கியிருந்து மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்து வந்தார்கள்.

தங்கள் வேலை காரணமாகப் பெற்றோர்கள், மீண்டும் நகரத்துக்குச் சென்றுவிட்டாலும்கூட அவர்களின் பிள்ளைகளை விடுமுறை முடியும்வரை கிராமத்திலேயே விட்டுவிட்டுச் சென்றனர். இதனால் வளரும் தலைமுறைக்கு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை எனப் பலதரப்பட்ட உறவுகள் குறித்தும், உறவுகளிலுள்ள அன்னியோன்மும், உறவுகளின் பாசமும் முழுமையாகத் தெரிய வாய்ப்பிருந்தது. இதனால் நல்ல பழக்கவழக்கங்களும் இளம் தலைமுறையினருக்குத் தாமாகவே உருவாகி வந்தன.

ஆனால், இன்றோ கிராமம் என்றாலே அதைப் படத்தில்தான் பார்த்திருக்கிறோம். கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் சில பிள்ளைகளுக்கும் இன்றைய போட்டி நிறைந்த உலகம் அதற்கான வாய்ப்பை அளிக்க மறுத்து வருகிறது.

கீழ் வீட்டு அம்பரீஷ்  சம்மர் லீவில் டான்ஸ் கிளாஸ் போறான். அடுத்த வீட்டு ராகுல் கோடை விடுமுறையில் புது சாப்ட்வேர் படிக்கப் போறான். அந்தப் பொண்ணு பரதநாட்டியம் கத்துக்கப் போகுது, அப்ப நம்ம பிள்ளையையும் சம்மர் ஸ்பெஷல் கோர்ஸýக்கு அனுப்புவோம் என்பதே இன்றைய பெற்றோர்களின் எண்ணம். அக்கம்பக்கத்தாரின் இந்தப் போட்டியால் விடுமுறையில் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நினைக்கும் ஒரு சிலருக்கும்கூட அந்த வாய்ப்பு, பெற்றோர்களால் பறிக்கப்பட்டே வருகிறது.

இதற்கிடையே நகரத்திலுள்ள பல பள்ளிகளில் கோடை விடுமுறையிலும்கூட சிறப்பு வகுப்புகள் அரங்கேறி வருகின்றன. ஓராண்டு தொடர்ந்து படித்த மாணவ, மாணவிகள் ஓய்வெடுப்பதற்காக அரசு அளித்துள்ள இந்த விடுமுறையிலும்கூட மாணவர்களுக்கு ஓய்வளிக்காமல் படிக்கச் சொன்னால் அவர்களின் ஆர்வம் குறைந்து போகாதா?

எங்கோ ஒரு கிராமத்தின் மூலையில், அதுவும் வாழ்க்கையின் விளிம்பில் இருந்துகொண்டு, தங்களின் பேரன், பேத்தி, மகன், மருமகன் என எல்லோருடைய நலனுக்காகவும், இன்றும் வேண்டிக் கொண்டிருக்கும் தாத்தா, பாட்டியின் மனதைப் புரிந்தாவது, கிராமத்துக்கு வர நகரத்து சொந்தங்கள் முயல வேண்டும். 

இந்திய கலாசாரத்தின் பெரிய அடிப்படையான விஷயமே இந்த உறவுகள்தான் என்பதை வரும் தலைமுறையினருக்கும் உணர்த்த வேண்டும். செய்வார்களா?

Sunday, May 1, 2011

வானம்...

தெலுங்கில் வேதம் தமிழில் வானம்... 'எவண்டி உன்ன பெத்தான்' பாடலாலும், அனுஷ்கா உபயத்தாலும் வானத்திற்கு கொஞ்சம் நல்ல openinge கிடைத்தது. சிம்பு, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், பரத், 'பசங்க' வேகா, சந்தானம் என மிக பெரிய நட்சத்திர பட்டாளம். இத்தனை இருந்தும் படம் என்னமோ ரசிக்க வைக்க வில்லை. ஐந்து கதைகள் தனி தனியாக, இறுதியில் ஒரு இடத்தில சேர்கிறார்கள் அனைவரும். தேவை இல்லாத காட்சிகள், இழுவையான காட்சிகள், சுவாரசியமில்லா காட்சிகள் என குறைகள் நிறைய.



படத்தின் மிக பெரிய பலம் climax. கடைசி 10 நிமிடங்கள் தான் படமே. முதல் 2 மணி  நேரம் பார்க்காமல் இறுதி 10 நிமிடங்கள் பார்த்தால் மட்டுமே போதுமானது. சிம்பு காட்சிகள் மட்டுமே கொஞ்சம் கலகலப்பாக போகிறது. அனுஷ்கா பொண்ணு அப்பிடி இருக்கு. அந்த 'கடவுள் எங்கிருக்கிறான்' பாடல் வரிகள் கவனம் ஈர்க்கிறது. மற்றபடி படத்தில் சொல்வதற்கு ஒண்ணுமில்ல.

எனது மதிப்பீடு : 3/10

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...


வியர்வைகளால் 
முத்துக்கள் செய்பவனே....

நீ விதைத்த வியார்வைகள் தான்
கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்து
கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது...!


நீ... உடல் முழுவதும் சகதிகள் பூசி
இந்த உலகத்தை மிளிர செய்தவன்...
நீ... அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன... 


நீ உயர்த்திய தோளில்
உயர்ந்திருக்கிறது சமுதாயம்...
நீ உயர்த்திய கரங்களில்
பூத்திருக்கிறது மறுமலர்ச்சி.... 


ன் வியர்வை நாற்றம்...
அது உன் நாட்டை மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்...


ன் கரங்களில் ஏற்படும் வடுக்கள்
அது தேசத்தை அறிமுகப்படுத்த வாய்க்கும்
அடையாளங்கள்....


நீ ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு பட்டாடை ஏது...
நீ பாறைகளை உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள்
ஆயுள் இழந்திருக்கும்...!


தெரியுமா உனக்கு
நீ ஓய்வெடுக்க ஒதுங்கினால்
ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும்
இந்த உலகம்... 

0ன் பார்வையில்
தாயும் நீயும் ஒன்று  தான்
தாய் ரத்தத்தை பாலாக்குகிறாள்...
நீ.. அதை வியர்வையாக்குகிறாய்...

ழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு
விடியலை கண்டுவிடமுடியாது
எந்த ஒரு தேசமும்..
எந்த ஒரு மனிதனும்...

ன் இனிய வியர்வையாளனே..!
உன் நெற்றியில் பிரகாசிக்கும் 
ஒவ்வோறு வியர்வைத்துளிக்கும்
சாமரம் வீசும் என் கவிதை....



ண்பர்களே....
வியர்வைகள் சிந்துவோம்
பிறகு ஏன் கண்ணீர்....

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் !!!

                                                                                                              --- கவிதை வீதி வலைப்பூ 

Wednesday, April 27, 2011

பட்டினி சாவுகள்

இந்தியா சக்தி வாய்ந்த நாடு என்கிறீர்கள். அதேநேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானியம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. மக்களுக்குப் பயன்படாமல், குடோன்களில் அவை நிரம்பி வழிவதால் என்ன பயன்? பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என இரண்டு இந்தியா இருக்க முடியாது'
-இது, மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு மாவோயிஸ்ட் தலைவர் கொடுத்த குரல் அல்ல... இந்திய நாட்டின் உச்சபட்ச அதிகார அமைப்புகளில் ஒன்றான உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் குரல்தான்!

பட்டினிச் சாவுகள், பொதுவினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின்போதுதான் அரசுக்கு எதிராக சவுக்கு சொடுக்கி இருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர்.


'விளைச்சல் நன்றாக இருக்கிறது. தானிய கையிருப்பு போதுமானதாக இருக்கிறது' என்று அரசு சொல்வதே ஒரு நாடகம். மக்களின் வாங்கும் சக்தி மோசமாக இருப்பதால், எதையும் வாங்கி உண்ண முடியவில்லை. அதனால்தான் உபரியாகி குடோனில் குவிகின்றன தானியங்கள். அந்த விஷயத்தை மறைத்துவிட்டு, 'ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விளைந்து குவிந்து இருக்கிறது' என ஏமாற்றுகிறார்கள்.

'வாங்கும் சக்தி கூடி விட்டது... விலைவாசி உயர்வு ஒரு பெரும் பிரச்னை இல்லை’ என்று கூறும் அரசியல்வாதிகளை நீதிமன்றக் கூண்டுகளில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் உண்மை புரியும்... அவர்களின் பொய் முகமும் கிழியும்.

இன்றைய நிலையில் ஒரு நபருக்கு ஓராண்டுக்கான உலக சராசரி உணவு 309 கிலோ கிராம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 180 கிலோ கிராம் மட்டுமே. இதன் காரணமாக, இந்தியாவில் கர்ப்பிணிகள் சத்துக்குறைந்தவர்களாக உள்ளனர்... குழந்தைகளும் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது எதிர்கால இந்தியாவையே முற்றிலும் முடக்கிவிடக் கூடியது என்பதை அரசு உணரவேண்டும்.

இந்த விஷயம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் சபையும் பல முறை எச்சரிக்கை சங்கை ஊதி விட்டன. ஆனாலும் அரசு விழித்து கொள்ளவில்லை. நல்லவேளையாக உச்ச நீதிமன்றம் சவுக்கு எடுத்துள்ளது. இனியாவது நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

நன்றி : தூரன் நம்பி

மீண்டும்...

வணக்கம். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு வந்துவிட்டேன் உங்கள் பார்வைக்கு. 

தேர்தல், 80% வாக்குபதிவு,உலகக்கோப்பை கிரிக்கெட், அண்ணா ஹஜாரே போராட்டம், ஜப்பான் சுனாமி,சாயி பாபா  என மிக முக்கிய நிகழ்வுகள் அத்தனையும் தவற விட்டு இறுதியாக இன்று முதல் மீண்டும் எனது கருத்துக்களை இங்கே பதிவதின் மூலம் உங்களை வந்தடையும்.


I AM BACK... :)