என அக்கா மகனுக்கு 3 வயது, அவனுக்கு தெரிந்த சொந்தம் அம்மா அப்பாவை தவிர தாதா,பாட்டி,மாமா அவ்வளவே. இன்றைய குழந்தைகள் கிட்ட தட்ட அனைவரும் இப்படியே. அந்நிய கலாச்சாரத்தாலும், பணம் ஈட்டுவதே ஒரே நோக்கமாக எந்திர வாழ்க்கை, சுயநலம், குறுகிய மனப்பான்மை போன்றவற்றின் விளைவு. ஆனால் பாதிக்கபடுவது நமது சந்ததியினர் தானே.
எனக்கு தெரிந்த சித்தப்பா,சித்தி,பெரியம்மா,பெரியப்பா, அத்தை, மாமா, மாமி என சொந்த பந்தகளின் முறை கூட இன்றைய தலைமுறைக்கு தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்பாவுடன் கூடப்பிறந்த தம்பிகூட இன்று தூரத்துச் சொந்தமாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். இதற்கு நானும் பலிகடா.
கால ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவும், பொருளாதார வசதியில் முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வேகத்திலும் கிராமத்தைவிட்டு வெளியேறி நகரை நோக்கி ஓடியவர்களில் பெரும்பாலானோர், அந்த வேக ஓட்டத்துக்குப் பழகி, அதை விரும்பி ஏற்று மீண்டும் அங்கேயே தங்களின் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள் என்பதும் உண்மை.
உங்களின் குடும்பம் வசதியாக வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதும் சரிதான். அதற்கு நீங்கள் நகரத்தில் இருந்துகொண்டு பகல், இரவு பார்க்காமல் உழைப்பதும் சரி. ஆனால், அந்த வேகத்தை இப்பொழுதே உங்களின் செல்ல மகன் அல்லது மகள் மீதும் செலுத்துவது சரியா என்று கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை.
மெட்ரோபாலிட்டன் சிட்டிகளிலுள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பலர், தங்களின் ரத்த உறவுகளையும், தூரத்து உறவுகளையும் பற்றித் தெரியாமலேயே வளர்ந்து வருகிறார்கள் அல்லது வளர்க்கப்பட்டு வருகிறார்கள். கிராமத்தில் சொந்தக்காரங்க இருக்காங்கன்னு எங்க அப்பா சொல்லியிருக்காங்க என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த விஷயம். முன்பெல்லாம் நகர வாழ்க்கை சூழலில் சிக்கியிருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கோடை விடுமுறை எப்பொழுது விடும் என்று ஆவலுடன் காத்திருந்து, விடுமுறை விட்டவுடன் உடனே குடும்பத்துடன் கிராமத்துக்குச் சென்று தங்கள் மூத்த குடும்ப அங்கத்தினரின் வீடுகளில் தங்கியிருந்து மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்து வந்தார்கள்.
தங்கள் வேலை காரணமாகப் பெற்றோர்கள், மீண்டும் நகரத்துக்குச் சென்றுவிட்டாலும்கூட அவர்களின் பிள்ளைகளை விடுமுறை முடியும்வரை கிராமத்திலேயே விட்டுவிட்டுச் சென்றனர். இதனால் வளரும் தலைமுறைக்கு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை எனப் பலதரப்பட்ட உறவுகள் குறித்தும், உறவுகளிலுள்ள அன்னியோன்மும், உறவுகளின் பாசமும் முழுமையாகத் தெரிய வாய்ப்பிருந்தது. இதனால் நல்ல பழக்கவழக்கங்களும் இளம் தலைமுறையினருக்குத் தாமாகவே உருவாகி வந்தன.
ஆனால், இன்றோ கிராமம் என்றாலே அதைப் படத்தில்தான் பார்த்திருக்கிறோம். கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் சில பிள்ளைகளுக்கும் இன்றைய போட்டி நிறைந்த உலகம் அதற்கான வாய்ப்பை அளிக்க மறுத்து வருகிறது.
கீழ் வீட்டு அம்பரீஷ் சம்மர் லீவில் டான்ஸ் கிளாஸ் போறான். அடுத்த வீட்டு ராகுல் கோடை விடுமுறையில் புது சாப்ட்வேர் படிக்கப் போறான். அந்தப் பொண்ணு பரதநாட்டியம் கத்துக்கப் போகுது, அப்ப நம்ம பிள்ளையையும் சம்மர் ஸ்பெஷல் கோர்ஸýக்கு அனுப்புவோம் என்பதே இன்றைய பெற்றோர்களின் எண்ணம். அக்கம்பக்கத்தாரின் இந்தப் போட்டியால் விடுமுறையில் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நினைக்கும் ஒரு சிலருக்கும்கூட அந்த வாய்ப்பு, பெற்றோர்களால் பறிக்கப்பட்டே வருகிறது.
இதற்கிடையே நகரத்திலுள்ள பல பள்ளிகளில் கோடை விடுமுறையிலும்கூட சிறப்பு வகுப்புகள் அரங்கேறி வருகின்றன. ஓராண்டு தொடர்ந்து படித்த மாணவ, மாணவிகள் ஓய்வெடுப்பதற்காக அரசு அளித்துள்ள இந்த விடுமுறையிலும்கூட மாணவர்களுக்கு ஓய்வளிக்காமல் படிக்கச் சொன்னால் அவர்களின் ஆர்வம் குறைந்து போகாதா?
எங்கோ ஒரு கிராமத்தின் மூலையில், அதுவும் வாழ்க்கையின் விளிம்பில் இருந்துகொண்டு, தங்களின் பேரன், பேத்தி, மகன், மருமகன் என எல்லோருடைய நலனுக்காகவும், இன்றும் வேண்டிக் கொண்டிருக்கும் தாத்தா, பாட்டியின் மனதைப் புரிந்தாவது, கிராமத்துக்கு வர நகரத்து சொந்தங்கள் முயல வேண்டும்.
இந்திய கலாசாரத்தின் பெரிய அடிப்படையான விஷயமே இந்த உறவுகள்தான் என்பதை வரும் தலைமுறையினருக்கும் உணர்த்த வேண்டும். செய்வார்களா?
2 comments:
ஸ்ரீராம் அவர்களுக்கு,
அன்புடன் வித்யாசாகரன் எழுதிக்கொள்வது. விவசாயம் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடியதில் தங்கள் வலைப்பூ வந்தடைந்தேன். எனக்கு சில தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களுக்கு நேரம் இருக்குமானால், சற்றே பேச விருப்பம். தங்கள் மின்னஞ்சல் முகவரி தந்தால் மகிழ்வேன். எனது: vidyasakaran at gmail dot com.
அருமை
Post a Comment