-தமிழகத்தில் இப்படியொரு அறிமுகத்துக்குத் ‘தகுதியான’ அரசியல்வாதிகள், இன்று யாராவது இருப்பார்களா தெரியவில்லை… ஆனால் நேற்று வரை ஒருவர் இருந்தார். அவர் திரு பொ மோகன் (60). மதுரையின் முன்னாள் எம்பி.
கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணத்தைத் தழுவினார் மோகன்.
பதவியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் கடைசி வரை மக்களுக்கான பணியாளனாக இருந்தவர் மோகன்.
பதவிக்கு வருவதற்கு முன் ஒரு சைக்கிளும், பதவிக்கு வந்த பிறகு கட்சி வாங்கிக் கொடுத்த ஒரு எம் 80 ஸ்கூட்டரும்தான் மோகன் என்ற நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்த வாகனங்கள் என்றால் உங்களுக்கு அதிசயமாகத்தான் இருக்கும். இந்தியாவிலேயே சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற ஒரே எம்பி மோகன் என்பது நீங்கள் வாழ்நாளில் கேள்விப்பட்டிராத ஒன்றுதானே!
எம்பியான பிறகும்கூட ரேஷன் கடைக்கு தனது வாகனத்தில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த மனிதர் இவர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிறந்தவர் மோகன். அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ படித்தார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மதுரை லோக்சபா தொகுதியிலிருந்து 1999 மற்றும் 2004 ஆகிய தேர்தலில் அடுத்தடுத்து வெற்றி பெற்றார்.
மதுரை மக்களின் அன்பைப் பெற்றவர். சர்ச்சையில் சிக்காதவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் என்ற பெயரெடுத்தவர். யாரையும் கடுமையாக பேசாதவர். அமைதியாக செயல்பட்டவர்.
இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும் போது அவர்களின் அருமை மக்களுக்குத் தெரிவதில்லை. அதனால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரை தோற்கடித்தும் காட்டினார்கள், அந்த தோல்வி அவருக்கல்ல என்பது புரியாமலே.
மோகன் என்ற மக்கள் ஊழியனுக்கு மனதார அஞ்சலி செலுத்துகிறேன்,
இந்த மாதிரி ஊழியர்கள் நிறைய உருவாக வேண்டும் என்ற நப்பாசையுடன் ஸ்ரீராம் எனும் சாமானியன் ஒன்பத்துவேலியிலிருந்து.
No comments:
Post a Comment