Wednesday, April 27, 2011

பட்டினி சாவுகள்

இந்தியா சக்தி வாய்ந்த நாடு என்கிறீர்கள். அதேநேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானியம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. மக்களுக்குப் பயன்படாமல், குடோன்களில் அவை நிரம்பி வழிவதால் என்ன பயன்? பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என இரண்டு இந்தியா இருக்க முடியாது'
-இது, மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு மாவோயிஸ்ட் தலைவர் கொடுத்த குரல் அல்ல... இந்திய நாட்டின் உச்சபட்ச அதிகார அமைப்புகளில் ஒன்றான உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் குரல்தான்!

பட்டினிச் சாவுகள், பொதுவினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின்போதுதான் அரசுக்கு எதிராக சவுக்கு சொடுக்கி இருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர்.


'விளைச்சல் நன்றாக இருக்கிறது. தானிய கையிருப்பு போதுமானதாக இருக்கிறது' என்று அரசு சொல்வதே ஒரு நாடகம். மக்களின் வாங்கும் சக்தி மோசமாக இருப்பதால், எதையும் வாங்கி உண்ண முடியவில்லை. அதனால்தான் உபரியாகி குடோனில் குவிகின்றன தானியங்கள். அந்த விஷயத்தை மறைத்துவிட்டு, 'ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விளைந்து குவிந்து இருக்கிறது' என ஏமாற்றுகிறார்கள்.

'வாங்கும் சக்தி கூடி விட்டது... விலைவாசி உயர்வு ஒரு பெரும் பிரச்னை இல்லை’ என்று கூறும் அரசியல்வாதிகளை நீதிமன்றக் கூண்டுகளில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் உண்மை புரியும்... அவர்களின் பொய் முகமும் கிழியும்.

இன்றைய நிலையில் ஒரு நபருக்கு ஓராண்டுக்கான உலக சராசரி உணவு 309 கிலோ கிராம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 180 கிலோ கிராம் மட்டுமே. இதன் காரணமாக, இந்தியாவில் கர்ப்பிணிகள் சத்துக்குறைந்தவர்களாக உள்ளனர்... குழந்தைகளும் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது எதிர்கால இந்தியாவையே முற்றிலும் முடக்கிவிடக் கூடியது என்பதை அரசு உணரவேண்டும்.

இந்த விஷயம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் சபையும் பல முறை எச்சரிக்கை சங்கை ஊதி விட்டன. ஆனாலும் அரசு விழித்து கொள்ளவில்லை. நல்லவேளையாக உச்ச நீதிமன்றம் சவுக்கு எடுத்துள்ளது. இனியாவது நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

நன்றி : தூரன் நம்பி

மீண்டும்...

வணக்கம். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு வந்துவிட்டேன் உங்கள் பார்வைக்கு. 

தேர்தல், 80% வாக்குபதிவு,உலகக்கோப்பை கிரிக்கெட், அண்ணா ஹஜாரே போராட்டம், ஜப்பான் சுனாமி,சாயி பாபா  என மிக முக்கிய நிகழ்வுகள் அத்தனையும் தவற விட்டு இறுதியாக இன்று முதல் மீண்டும் எனது கருத்துக்களை இங்கே பதிவதின் மூலம் உங்களை வந்தடையும்.


I AM BACK... :)