Thursday, October 29, 2009

குடியரசுத் தலைவர்

ஆண்டாண்டு காலமாக இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு - குடியரசுத் தலைவர் என்னும் பொம்மை பதவி தேவை இல்லை என்பது. அதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் சமீப காலமாக எனக்கும் அது சரி தானோ என்றே எண்ண தோன்றுகிறது. காரணம் தேவை இல்லாத ஆடம்பரங்கள் , தேவை இல்லாத செலவினங்கள்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், கவலைப்படாமல் அயல்நாட்டு சுற்றுலாவிற்கு கிளம்பி விடுகிறார் நாட்டின் முதல் குடிமகன். பொதுமக்களின் வரிபணத்தை செலவு செய்வதற்கு ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பாங்களோ...

ஒரு பக்கம் புயல் வெள்ளம் மறு பக்கம் வறட்சி என காலநிலை மாற்றம், அமைச்சரின் SPECTRUM ஊழல், ரயிலையே கடத்தும் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம், பாகிஸ்தான் சீனா இலங்கை என அண்டை நாடுகளின் நிலையற்ற உறவு, தீவிரவாத அச்சுறுத்தல், வேலையின்மை, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என நாட்டின் பிரச்சனைகள் நீண்டு கொண்டே போகும்.

கடந்த ஓராண்டில் பிரதீபா படேல் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் கீழே :

October 26 to October 29, 2009 - The President's visit to United Kingdom

September 06 to September 08, 2009 - The President's visit to Tajikistan

September 02 to September 06, 2009 - The President's visit to Russia

April 23 to April 27, 2009 - The President's visit to Poland

April 20 to April 23, 2009 - The President's visit to Spain

November 29 to December 01, 2008 - The President's visit to Indonesia

November 24 to November 28, 2008 - The President's visit to Vietnam

November 05 to November 08, 2008 - The President's visit to Bhutan

April 20 to April 25, 2008 - The President's visit to Chile

April 16 to April 20, 2008 - The President's visit to Mexico

April 12 to April 16, 2008 - The President's visit to Brazil

இந்த செலவில் பாதியை குறைத்திருந்தால் கூட எத்தனை பள்ளிகள் கட்டியிருக்கலாம், எத்தனை மருத்துவ மனைகள் உருவாக்கி இருக்கலாம், எத்தனை விவசாயிகளின் தற்கொலையை தவிர்த்திருக்கலாம், எத்தனை குழந்தை தொழிலாளர்களின் வாழ்கையை காப்பாற்றி இருக்கலாம்... இன்னமும் ஒரு ரூபாய் அரிசியை வாங்க ரேஷனில் கால் கடுக்க வரிசையில் நிற்கும் மக்கள் எத்தனை கோடி...

இதையெல்லாம் உணர்வாரா ஜனாதிபதி...?
ஊர் சுற்றி திரிவதை நிறுத்துமா பாட்டி...?

Monday, October 26, 2009

தூங்கும் கருணாநிதி

பருவமழை காலதாமதம் ஆவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற முதல்வர் கருணாநிதி போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவது வழக்கம். ஐப்பசி மாதம் என்றாலே அடைமழை பெய்யும் என்ற நிலைமை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் கடைசி வாரம் ஆகியும் இதுவரை பருவ மழை தொடங்கவில்லை.


மேட்டூர் அணையின் நீர் இருப்பும் நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 77 அடியாக இருந்தது. அதாவது, 39 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,500 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த டெல்டா பாசனப் பகுதியில் சுமார் 13 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 10 சதவீத நடவுப் பணிகள் மீதம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரம் வரை நீர் தேவைப்படுகிறது. ஆனால் இப்போதைய மேட்டூர் நீர் இருப்பைக் கொண்டு இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும். அதையும்கூட இப்போது நிலவுகிற வறட்சியால் அனைத்துப் பகுதி வயல்களுக்கும் சீராக வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே. எனவே பருவமழை பெய்தால் மட்டுமே நெல் வயல்களைக் காப்பாற்ற முடியும் என்ற அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பருவமழையை எதிர்பார்த்து இன்னமும் காலதாமதம் செய்யாமல், பொதுப்பணித் துறையையும் கவனிக்கும் முதல்வர் கருணாநிதி உடனடியாக இப்பிரச்னையில் தலையிட வேண்டும்; கர்நாடக அரசிடம் பேசி கூடுதல் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கர்நாடக அணைகளில் மொத்த கொள்ளளவில் இப்போது 92 சதவீத நீர் இருப்பு உள்ளது. எனினும் ஜூலை முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 159.38 டி.எம்.சி. தண்ணீரில் பெரும்பகுதியை கர்நாடகம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. இன்னும் 3 டி.எம்.சி. மட்டுமே பாக்கி உள்ளது.

கடந்த 2001 முதல் 2004 வரை நிலவிய கடும் வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகின. இதனால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் 2005-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வறட்சியின் பாதிப்பு இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டைப் பொருத்த வரை இதுவரை நெல் சாகுபடி சிறப்பாக உள்ளது. வயல்கள் பசுமையாக, செழிப்பாக உள்ளன. ஆனால் இந்த நிலை தொடருமா? என்பது முதல்வர் கருணாநிதி மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்தே உள்ளது என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

வரும் முன் காப்பதே சிறந்தது ---

இதை விட்டு விட்டு எல்லாம் முடிந்த பின் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் என மத்திய அரசிடம் கெஞ்சி கூத்தாடி நிதி ஒதுக்கி, அதில் அமைச்சர் முதல் MLA,MP,மாவட்டம்,வட்டம்,கிராம அலுவலர்,கட்சி நிர்வாகி,கட்சி உறுப்பினர் வரை கமிஷன் அடித்து கடைசியில் பொறை துண்டு போல் கொஞ்சமாக விவசாயிக்கு நிவாரணம் என அத்தனையும் செய்ய தயாராகிறது தமிழக அரசு.

பாருங்கள் இன்னும் என்னென்ன நடக்க போகிறதென்று...

Wednesday, October 21, 2009

உலகம் எதை நோக்கி...?

உலகம் முழுவதும் தினமும் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கை, அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவில்லை என்றால், மிகவும் மோசமான பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு - வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் (United Nation's The Food and Agriculture Organization and the World Food Program) அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "2009-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை 1.02 பில்லியன் (100 கோடிக்கும் மேல்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 40 ஆண்டுகளில் உச்சபட்ச அவல நிலை," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள 20 நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 30 நாடுகளில் அவசரகால உதவிகள் தேவைப்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளிலும் ஊட்டக் குறைவு காரணமாக ஒரு குழந்தை மரணத்தைத் தழுவுகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவிக்கும் ஐ.நா., "இந்த அபாய நிலையை உணர்ந்து, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் ஆகியவை இணைந்து உலக அளவில் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என்று அறிவுறுத்துகிறது.

சோமாலியாவில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே கொடுக்கக் கூடிய அவலத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.

கென்யாவில் விலங்குகள் அழிவதாலும், வேளாண்மை பாதிப்புக்குள்ளானதாலும் 30 லட்ச மக்களுக்கு அவசரகால உணவு தேவைப்படுகிறது.

வேளாண் உற்பத்தியின் வீழ்ச்சி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுடன் உலகப் பொருளாதார நெருக்கடியும் இணைந்து சதிராட்டம் ஆடியாதால், 2009-ல் 100 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியால் அவதியுறும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் 62 கோடியே 20 லட்சம் மக்கள் அன்றாடம் பட்டினியால் வாடி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக இருக்கிறது.

இந்த அவலநிலைக்குத் தீர்வாக இருவழிப் பாதை அணுகுமுறையை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைக்கிறது...

"திடீர் உணவுப் பஞ்சத்தால் ஏற்படும் பட்டினிப் பிரச்னையை தீர்ப்பதற்கு குறுகிய கால நடவடிக்கையாக பணத்தை செலவிடுவதோடு மட்டுமின்றி, உணவு உற்பத்தியைக் கூட்டும் வகையில் வேளாண் துறையில் நீண்ட கால முதலீடுகளுக்கு வழிவகுக்க வேண்டும்," என்பதே அந்த அணுகுமுறை. உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் வேளாண் துறையில் மிகுதியான அளவில் முதலீட்டை ஒதுக்கினால் மட்டுமே, எதிர்வரும் காலத்தில் பட்டினி அவலத்தைக் களைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு ஒரு வேலை உணவு கூட நம்மால் அளிக்க இயல வில்லை என்றால், உலகம் எதை நோக்கி செல்கிறது என்று சற்றே யோசியுங்கள். மிக பெரிய வன்முறைக்கு இது அடிகோலிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி...

தீபாவளி SPECIAL

குடியிற் சிறந்த தமிழகம் என்ற பட்டப் பெயர் சூட்டாததுதான் பாக்கி. இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை அத்தனை ஜோராக இருந்துள்ளது!

தீபாவளி தினதத்தன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.200 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடந்தது. இது போன தீபாவளியைவிட 25 சதவிகிதத்துக்கும் மேல் என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த தீபாவளி வாரக் கடைசி நாளில் அமைந்து விட்டதால், பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பிருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடிப்பிரியர்களுக்குப் பிடித்தமான அத்தனை ஐட்டங்களும் கடைகளில் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததால், ஒவ்வொரு கடையிலும் விற்பனை அமோகமாக இருந்தது.

ஆனால் அப்படியும் வெளியூர்களில் பல கடைகளில் குறிப்பிட்ட சில வகை சரக்குகள் மட்டுமே இருந்ததால் 'குடி'மக்கள் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானாலும், வேறு வழியின்றி 'இருப்பதைக் கொடுப்பா' என்று வாங்கிக் குடித்துள்ளனர்.

தீபாவளி தினத்தன்று (17-ந் தேதி, சனிக்கிழமை) காலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் பெரும் கூட்டம் வரிசை கட்டி நின்றது. 'பழக்கத்துக்காக' எப்போதாவது குடிப்பவர்கள் கூட்டம் அன்று பெருமளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு பத்துமணிக்கு மேலாகியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையாம்.

இதனால் விற்பனையின் அளவு முந்தைய தீபாவளிகளை மிஞ்சும் விதத்தில் இருந்துள்ளது. பெரும்பாலான புறநகர் மற்றும் கிராமப்புற டாஸ்மாக் கடைகளில் கூட 2 மடங்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது இந்த தீபாவளியன்று மட்டும்.

15 கேஸ்கள் மது விற்பனையாகும் கடைகளில் 25-க்கும் மேற்பட்ட கேஸ்கள் விற்பனை ஆகி பெரும் 'சாதனை' நிகழ்ந்துள்ளது. இதனால் ரூ.40 ஆயிரத்துக்கு மது விற்பனை ஆகும் கடைகளில், தீபாவளியன்று மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. சில கடைகளில் ரூ. 2 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

நகர்ப்புறங்களில் கேட்கவே வேண்டாம்... ரேஷன் கடை க்யூ மாதிரி கூட்டம் அலைமோதியது.

விற்பனை பற்றிய கணக்கை சரிபார்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அதுபற்றி அறிவிக்கப்படும் என்றும், உண்மையான கலெக்ஷன் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மது விலக்கை அறிமுக படுத்திய மகாத்மா வாழ்ந்த நாடும் இது தான்,
கள்ளை ஒழிக்க தன்னிடமிருந்த ஏக்கர் கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் வாழ்ந்த நாடும் இது தான்,
இன்று 2009 தீபாவளி அன்று விற்பனையில் சாதனை புரிந்திருக்கும் நாடும் இதுவே தான்.

Wednesday, October 14, 2009

பற்றி எரிகிறது வீடு

மீபத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை மரணக் காடாக மாற்றிப் போட்டிருக்கிறது பிரளயமாகப் பெய்த மழை. ஆனால், தமிழ்நாட்டில்? ஏற்கெனவே, தென்மேற்குப் பருவமழை கண்ணாமூச்சி போல பொய்த்து விட்டுப் போய்விட்டது; வடமேற்குப் பருவ மழையாவது வருமா என்பதுதான் மாபெரும் கேள்வி!

அதே சமயம், தென்மேற்குப் பருவமழை எதிர்பாராத நேரத்தில் திண்டுக்கல், கரூர், மதுரை போன்ற பகுதிகளில் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களை சரியாக வஞ்சித்துவிட்டது.

அது மட்டுமா? ஜூலை மாத வாக்கில் கோடை வெப்பம் தணிந்து, குளிர் காற்று வீசி... வருடா வருடம் நிலவும் இதமான சூழலையும் இப்போது காணவில்லை! அக்டோபர் மாதத்தில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் கொளுத்துகிறது!

எப்படி நிகழ்கிறது இந்த இடறல்கள்?

பூமியின் வெப்பம் கூடிக்கொண்டே வருவதுதான் மிக முக்கியக் காரணம்! அது பற்றி பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்துவிட்ட நிலையில், பருவநிலை மாற்றங்களைப் பற்றிய கவலை கூடியிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆடம்பரமும், படாடோபமும், எரிபொருள் பயன்பாடும் சூழல் மாற்றங்களைச் சுண்டிவிட்டன. அதற்கு ஒரு பாவமும் அறியாத ஆப்பிரிக்க நாடுகளும் பலியாவதுதான் கொடுமை!

மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் மிகுந்த புவி வெப்பமாதலினால் பாதிப்புக்குள்ளாகிறது. அதை விரிவாகச் சுட்டிக் காட்டலாம்...

*கடந்த 1990-லிருந்து பத்தாண்டுகள் மிக வெப்பமான ஆண்டாகவும் 1998-ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டது.

*ஐக்கிய நாடுகளின் குழும அறிக்கை, இமயமலையின் பனிக்கட்டிகள் உருகத்தொடங்கி உள்ளது எனவும், 2035-ம் ஆண்டுக்குள் அவை மறைந்துவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவிக்கிறது.

*கடல் மட்டம் 40 சென்டிமீட்டர் வரை உயரலாம். அதனால் 50 மில்லியன் மக்கள் வீடுகளை இழக்க நேரிட லாம்.

*தண்ணீர் பற்றாக்குறையால் 50 கோடி மக்கள் பாதிப் படையலாம்.

*குளிர்கால மழையளவு இந்திய துணைக்கண்டத்தில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 30 சதவிகித உணவு உற்பத்தி குறையலாம்.

*உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம்.

ஆக, சுருக்கமாக கூறினால் இந்தியர்கள் பல கோணங்களில் பாதிப்படையலாம்!

என்ன செய்யலாம்...

லக நாடுகள் அறிவியல் நுட்பத்தினால் தட்பவெப்ப மாற்றத்தைக் குறைக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு தனி மனிதனும் தன் அன்றாட வாழ்வின் பழக்கவழக்கங்கள் மூலம் 'புவி வெப்பமடைதல்'-ஐக் குறைக்கப் பல்வேறு செயல்களைச் செய்யலாம்.

நம் அன்றாட வாழ்க்கையில் சூழலுக்கு உகந்த செயல்களைச் செய்வதால் ஆற்றல் வளங்களைக் காக்க உதவ முடியும். நடவடிக்கைகளை முறைப்படுத்துவது, குறைவான நுகர்வு, புலால் உண்ணாமை, நடைபயணங்கள், வளங்களை வீணாக்காமை ஆகியவை சிறந்த தட்பவெப்ப மாற்றத்தைக் குறைக்க உதவும்.

பி.கு:

இந்தியாவை ஒட்டிய அரபிக் கடல் நீரின் மேற்புற வெப்பத்தில் விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடருமானால் எதிர்வரும் வருடங்களில் பருவமழை குறைந்து கொண்டே போய், இன்னும் 150 ஆண்டுகளில் தென்மேற்குப் பருவக்காற்றே வராது என்று ஒரு அபாய அறிவிப்பு சமீபத்தில் வந்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் தட்ப வெப்ப மாற்றங்களும், நீரோட்டத் திசை மாற்றங்களும் எல் நிரோ என்ற பருவநிலைத் திருப்பத்தை உருவாக்குவதும் சிக்கலான விஷயம்.

தென்மேற்குப் பருவ மழை பொய்த்துவிட்டால் வடகிழக்குப் பருவக்காற்றாவது வழக்கம்போல் வீசுமா... மழை பொழியுமா என்பதுதான் இப்போதைய தமிழக மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு. அதோடு, தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரமே அதன் மூலம்தான் என்பதால் அச்சமும் கூடியுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் தோன்றுவதைப் பொறுத்தும், அது தீவிரமடைவதைப் பொறுத்தும் தான் பெய்யும் மழையின் அளவும், திசையும் நிகழும் என்பதால் எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலை.

Saturday, October 10, 2009

முதல் கேள்வி

கடந்த பூஜை விடுமுறைக்கு ஊர் சென்ற பொழுது வீட்டில் மின்சாரம் இல்லை. கேட்டால் "அது போய் ஒரு வாரம் ஆகிவிட்டது" என்றும், இன்னும் ரெண்டு அல்லது மூன்று வாரம் ஆகும் என்றும் சர்வ சாதாரணமாக சொன்னார்கள்.

MIXI இல்லாததால் சட்னி இல்லை, GRAINDER இல்லாததால் இட்லி,தோசை இல்லை, MOTOR இல்லாததால் தண்ணீர் இல்லை, TV இல்லாததால் கிரிக்கெட் இல்லை. மின்சாரம் இல்லாததால் இன்னும் எத்தனையோ "இல்லைகள் ". ஏழு மணிக்கு ஊரே உறங்கி விடுகிறது.

என்னடா இது என்று தொலைபேசி மூலமாகவும் நேரிலும் பல முறை EB அலுவலகத்தில் புகார் செய்தும் ஒரு பயனும் இல்லை. அவர்கள் சொன்ன பதில் சுளீர் என்றது.

REASON : TRANSFORMER FAILURE --- மின்மாற்று பழுது-----

இது போல் தமிழகத்தில் பரவலாக இருபதுக்கும் மேற்பட்ட மின்மாற்று பழுதடைந்து விட்டதாகவும், ஒவ்வொன்றாக மாற்றி வருவதாகவும் கூறப்பட்டது.
ஆக இது போல் இன்னும் இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்கள்.
ஏன் இந்த மெத்தனம், ஏன் இத்தனை புகார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறது மின் வாரியம், என்ன நடவடிக்கை எடுக்கிறது மின் துறை, இந்த புகார்கள் அரசின் கவனத்திற்கு செல்கிறதா என எண்ணிலடங்கா கேள்விகள்.

கேள்விகள்,கேள்விகள்,கேள்விகள்

அனைத்து துறைகளிலும், தூங்கி கொண்டிருக்கும் அரசை எதிர்த்து, உதவாக்கரை அதிகாரிகளை பார்த்து, ஊழலில் ஊறி போன அரசியல் வாதிகளை கண்டு பல கேள்விகள் எழுகின்றன.

கேள்விகள் கேட்டால் ஒழிய இந்த திரு நாட்டில் பதில் கிடைக்காது. கேள் கேள் நன்றாக கேள்...

பயன் படுத்தி கொள்ளுங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை. மேலும் இதை பற்றிய சந்தேகங்களுக்கு தாராளமாக என்னை வினவலாம். கீழே எனது முதல் மனுவின் SOFT COPY இணைத்துள்ளேன். படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி கொள்ளவும்.

அரசின் வலைத்தளம் : https://www.rtination.com

தகவல் அறியும் உரிமை சட்டம்

கோரிக்கை பெற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்க மறுக்குமிடத்து, தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவுகள் 8 மற்றும் 9ல் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருத்தமான காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும்.

கோரப்பட்ட தகவலானது, ஒருவருடைய உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடையதாகயிருப்பின், அதற்கான கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள், தகவல் அளிக்கப்படுதல் வேண்டும்.

குறிப்பிட்ட கால கெடுவிற்குள் கோரப்பட்ட தகவலின் பேரில் முடிவு எதனையும் அளிக்க தவறுமிடத்து, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர், அக்கோரிக்கையினை ஏற்க மறுத்ததாகவே கருதப்படும்.

கோரிக்கையின் மீது தகவல் அளித்தல் குறித்து முடிவு எடுக்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர் அந்த தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம் ஏதேனுமிருப்பின், அதைச் செலுத்தக் கோரி விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரத்தினை அனுப்புவதற்கும், கூடுதலான கட்டணத்தை செலுத்துவதற்கும் இடையே உள்ள காலத்தினை ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட 30 நாட்கள் கால அளவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

மேல் முறையீட்டு அலுவலர், மேல் முறையீட்டிற்கான காலக்கெடு, அதனை செயல்படுத்தவேண்டிய முறை மற்றும் விதிக்கப்பட்ட கட்டணங்கள் உள்ளடங்கிய விவரங்களை, முடிவின் மீதான மறு ஆய்விற்காக, மனுதாரருக்கு அளித்தல் வேண்டும்.

தகவல்கள் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் அல்லது மின்னணு படிவத்தில் இருக்குமிடத்து, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்துதல் வேண்டும். மேற்கூறிய கட்டணங்கள் அனைத்தும், நியாயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மனுதாரர் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள நபராக இருக்குமிடத்து, மேற்கூறிய அனைத்து கட்டணங்களையும் அவரிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

பொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்க தவறுமிடத்து, தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 7 உட்பிரிவு 5ன்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அந்த தகவலை அளிக்க வேண்டும்.

மனுதாரரின் விண்ணப்பத்தினை நிராகரிக்குமிடத்து, விண்ணப்பதாரருக்கு பொதுத் தகவல் அலுவலர் கீழ்க்கண்ட தகவல்களையும் தெரிவித்தல் வேண்டும் 1. விண்ணப்பத்தினை மறுப்பதற்கான காரணங்கள்;
2. அவ்வாறு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு எந்த கால கெடுவுக்குள் செய்யப்பட வேண்டும்;
3. மேல் முறையீட்டு அலுவலர் குறித்த விவரங்கள்.அரசின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்கள் மற்றும் வள ஆதாரங்களை திசை திருப்பக்கூடிய தகவல்களைத் தவிர, ஏனைய தகவல்களை, அதற்குரிய சாதாரண படிவத்திலேயே வழங்கலாம்.

என்ன எல்லாம் படித்து புரிந்து விட்டதா ?
இனி களத்தில் இறங்கி விட வேண்டியது தானே ?
நான் இறங்கி விட்டேன் !!! எனது முதல் மனுவை தந்து விட்டேன்.
அதை பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்...

மக்களின் மந்திர கோள்

தகவல் அறியும் உரிமை சட்டம்
Right To Information Act


இந்திய இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அரசு மற்று அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். இங்கு தகவல் என்பது பலதரப்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. அதாவது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ}மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே 'தகவல்' என்ற பிரிவின்கீழ்
வைக்கப்படுகின்றன.

அரசுத்துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால், அதைக்கூடக் கேட்டுப் பெற முடியும். எடுத்துக்காட்டாக. ஒரு தனியார் நிறுவனத்தின் ஆண்டுக் கணக்கு, இயக்குனர் குழுமம் உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டுமானால், கம்பெனிகளுக்கான பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்யலாம். இதேபோல், அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிப் பெற முடியும்.

தகவல்களைப் பெறுவது நமக்கு எந்தவகையில் உதவும் என்று கேள்வி எழலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதால், அரசு நிர்வாகத்தால், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கிறது. இதனால், லஞ்சமும் ஊழலும் குறைகின்றன.

அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் தகவல்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஏதாவது குறைகள் இருப்பின் அதைக் களைய வேண்டும் என்ற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் ஜனநாயகத்தில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள வழி ஏற்படுகிறது.

மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த நோக்கத்தை எய்துவதற்கும், குடிமக்கள் ஒவ்வொருவரும், அரசு(அல்லது) அரசு சார்ந்த அலவலகங்களிடமிருந்து தகவல் பெறுவதற்கும் ஏதுவாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15ன்படி, தமிrநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீr 07.10.2005 முதல் இயங்கி வருகிறது.

Wednesday, October 7, 2009

வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே

ஒவ்வொரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விபரம் :
மாத சம்பளம் --- ரூ 12,000

அரசியல் செலவினங்களுக்கு --- ரூ 10,000

அலுவலக செலவினங்களுக்கு --- அம்மா 14,000

போக்குவத்து செலவினங்களுக்கு --- ரூ 48,000

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு --- ரூ 500

முதல வகுப்பு ஏ சி இரயில் பயணம் முற்றிலும் இலவசம் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் .

முதல வகுப்பு விமான பயணம் நாற்பது முறை செல்லலாம் உடன் மனைவி அல்லது பி ஏ வை அழைத்து வரலாம்

டெல்லியில் தங்கும் விடுதி இலவசம்

மின்சாரம் 50,000 யுநிட் வரை இலவசம்

ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் உள்ளூர் தொலைபேசி அழைப்புகள் இலவசம்

ஆகமொத்தம் ஒரு எம் பி க்கு ஒரு மாதத்தி்ற்கு ருபாய் 260,000 இரண்டு லட்சத்து அறுபது ஆறாயிரம் ருபாய் செலவாகிறது

மொத்தம் உள்ள ஐநூற்றி முப்பது நான்கு எம்பி ஐந்து வருடத்திற்கு 854,40,00000 (எட்நூற்றி ஐம்பத்து நாலு கோடியே நாற்பது லட்சம்)

அவர்களுக்கு ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்து, சம்பளமாய் தனது வரி பணத்தையும் தந்து கொண்டிருக்கும் இந்த நாட்டு மக்களின் இன்றைய நிலை. . . ?
மேலும் படியுங்கள்...



42% இந்திய மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

42.5% இந்திய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவையான அளவு கிடைப்பதில்லை.

25% இந்திய மக்கள் தினமும் பசித்த வயிறுடன் உறங்குகிறார்கள்.

2002 முதல் 2006 வரையான நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 17,500.

இன்றைய தேதியில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.

இன்றும் கிராமத்தில் தினமும் 5 மணி நேர மின் வெட்டு.

தமிழகத்தில்

36.32 லட்சம் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வந்தவர்கள்.


மாத வருவாய் ரூ.250-க்கும் குறைவாக ஈட்டுவோர் 7.21 லட்சம் குடும்பத்தினர்

இரு உடைகளுக்கும் குறைவாக வைத்திருப்போர் 5.59 லட்சம் குடும்பத்தினர்.

தினசரி ஒரு வேளையும், அதற்குக் குறைவாகவும் உணவு பெறுவோர் எண்ணிக்கை மட்டும் 14 லட்சம் குடும்பங்கள்.

கொத்தடிமைகளாக இருக்கும் குடும்பங்கள் 5.92 லட்சம்.

குழந்தைத் தொழிலாளர்கள் கொண்ட குடும்பங்கள் 4.83 லட்சம்.

ஒரு ருபாய் ரேஷன் அரிசியை வாங்க கால்கடுக்க நிற்கும் மக்கள்.

அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் அவல நிலை.

என இந்த வலைப்பூ பத்தாது.

நல்ல வேலை பாரதி உயிருடன் இல்லை...

Tuesday, October 6, 2009

பாதிப்பைக் குறைத்திருக்கலாம்

ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சுமார் 400 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 4 லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். கர்நாடகத்தில் 600 முகாம்களில் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்த இயலாத இந்த இயற்கைப் பேரிடர் எதிர்பாராதது. ஆனாலும், இதில் மாநில அரசுகள், மிகக் குறிப்பாக ஆந்திர அரசு, கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டிருந்தால் இந்த இழப்பைப் பாதியாகக் குறைத்திருக்க முடியும். ஏனென்றால், இரு மாநிலங்களிலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பெரும்பாலானவை கிருஷ்ணா நதி, துங்கபத்ரா நதிகளின் கரையோரப் பகுதிகளே.

பலத்த மழையின் தீவிரத்தையும் அதைத் தொடர்ந்து வரப்போகும் வெள்ளத்தையும் முன்னதாகவே உணர்ந்து, அணைகளை 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே திறந்து, இருக்கும் நீரை வெளியேற்றி காலியாக வைத்திருந்தால், வரும் வெள்ளத்தை எதிர்கொள்ளவும், சீராக வெளியேற்றவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். சேதத்தைப் பாதியாகக் குறைத்திருக்க முடியும்.


துங்கபத்ரா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்து, மந்திராலயம் ராகவேந்திர மடம் மூழ்கி, கோசாலையில் அனைத்துப் பசுக்களும் இறந்தன என்ற செய்தி ஆந்திர மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஓடியபோதுதான், ஆந்திர அரசு பதறுகிறது, செயல்படுகிறது. ""கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைக் குறையுங்கள், இங்கே நாகார்ஜுனசாகர் அணை ததும்பி வழிகிறது'' என்று கர்நாடக அரசிடம் ஆந்திரம் கெஞ்சுகிறது. ஆனால் இதை
எப்படிக் கடைசி நிமிடத்தில் செய்ய முடியும்? கர்நாடகம் தனது அணையிலிருந்து வெளியேற்றாமல் இருந்தால் அவர்கள் அணைக்குத்தான் ஆபத்து!

மாநிலங்களைக் கடந்து ஓடும் ஒரு நதியின் வழித்தடத்தில் பல அணைகள் கட்டப்படுகின்றன. அதற்கு நாள்தோறும் வரும் நீர்வரத்து, அதன் துணைநதிகளின் நீர்வரத்து, ஒவ்வோர் அணையிலும் வினாடிக்கு எத்தனை கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது, நீர் இருப்பு எத்தனை கனஅடி என்கிற தகவல்களை எல்லா அணைகளின் அதிகாரிகளும் தினமும் கண்காணித்து, மழைவெள்ளம் எந்த அளவுக்கு வரலாம் என்பதைக் கணித்து நதியின் கீழ்அணைகளில் உள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்வது அவர்களது கடமை.

இவ்வாறு செயல்பட்டிருந்தால், 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே, நாகார்ஜுனசாகர் அணையின் மதகுகளை அதிகமாகத் திறந்து, இருந்த நீரை வெளியேற்றிவிட்டு அணையை காலி செய்திருப்பார்கள். வரப்போகும் உபரி நீரைச் சமாளிக்கும் பணி செவ்வனே நடைபெற்றிருக்கும்.

ஆனால், ஆந்திர அரசின் அதிகாரிகள் இதில் அதிக அக்கறை கொள்ளவில்லை. வெள்ளம் மிகப்பெரும் அளவில் வரத்தொடங்கியபோதுதான், நாகார்ஜுனசாகர் அணையின் மதகுகளை 48 அடி உயரத்துக்கு முழுமையாக-அது கட்டப்பட்டு முதல்முறையாக இவ்வாறு-உயர்த்தி நீரை வெளியேற்றினர்.

அணைகள் கட்டப்பட்ட பிறகு, வழக்கமான நீர் இல்லாமல் மேடுற்ற நதி, இவ்வளவு அபரிமிதமான வெள்ளநீரைச் சமாளிக்கும் திடீர் திறன்பெற முடியாததால், வெள்ளம் இரு கரைகளையும் மீறி ஓடியது. கரையோர நகரங்கள், கிராமங்களை மூழ்கடித்தது.

"இது எங்கள் அணை, இதன் கொள்திறன் இவ்வளவு' என்று குறுகிய பார்வை இல்லாமல், மாநில உணர்வுகளைக் கடந்து, இது நதியின் மீதுள்ள அணைகளில் ஒன்று என்ற பொதுப்பார்வை இருக்குமானால், இத்தகைய இயற்கையின் பேரிடர்களை பாதியாகக் குறைக்கும் சக்தி மனிதருக்கும் ஏற்படும்.

நடந்து முடிந்த தவறுகளை இனி அடுத்த வெள்ள காலத்தில்தான் திருத்திக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்தான் தலையாய கடமை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கர்நாடக, ஆந்திர மக்கள் என்று சும்மா இருக்காமல், தமிழகம்கூட தனது உதவிக்கரத்தை உடனடியாக நீட்ட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அரிசி, மருத்துவ உதவி அளிப்பதில் தாமாகவே முன்வந்து செய்ய வேண்டும்.

இது அண்டை வீட்டுச் சோகம்தானே, நமக்கென்ன என்று நம் வீட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு சும்மா இருந்தால், நம் வீட்டுச் சோகத்தில் அவர்களும் அதேபோலத்தான் இருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்!